மரபு ஆயுதங்களைக் களவாடும் காவிக்கும்பல்
சு.வெங்கடேசன்
தமிழகத்தில் திட்டமிட்டு பண்பாட்டு குழப்பத்தை காவிக்கும்பல் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இந்திய வரலாற்றைப் புதிதாக எழுதப் போகிறோம் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, ஹரப்பா, மொகஞ்சதாரோ நகர நாகரீகத்தை மிஞ்சிய நாகரீகத்திற்கான தடயங்கள் கீழடியில்100ஏக்கர் பரப்பில் கிடைத்துள்ளன. கிடைத்துள்ள அனைத்து கலைப் பொருட்களும் கலை நுணுக்கத்தோடு நுட்பத்தோடு உள்ளன. இன்றைய பொதுப்பணித்துறை கட்டுகிற கட்டிடத்தில் ஒரு கலை நுணுக்கம் கூட இல்லாமல் சவப்பெட்டிபோல் உள்ளது. இதுதான் நவீனகால கலைமரபு. கீழடியில் கிடைத்தவற்றில் தந்தத்தில் சீப்பு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள் வரை உள்ளன. அங்கு மதம், சாதி சார்ந்த ஒரு தடயம் கூட கிடைக்கவில்லை. சாதி, சமயம், புராணங்கள் வருவதற்கு முன்பே அறிவால் மேம்பட்டு உயர்ந்த இடத்தில் இருந்தது தமிழ்ச்சமூகம். அந்த மரபுதான் காவிகளுக்குப் பிரச்சனையாக உள்ளது.
உன்னுடைய வேதத்தில் நீ செய்கிற யாகத்தால் கடவுள் வந்து ஆசி கொடுப்பார் என்கிறாயே, நான்யாகம் செய்தால் என்னை விட்டுவிட்டு ஓடிய என்காதலன் எங்கே இருக்கிறான் என்று உன் கடவுள் கண்டுபிடித்து தருவாரா? என்று சங்க இலக்கிய பாடல் கேள்வி கேட்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்று கூறுகள் காவிகளுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது.இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்கள் அனைத்தையும் கைவிட முடிவெடுத்திருக்கிறார்கள். வரலாற்றுச் சின்னங்களைச் சுற்றியுள்ள 2 கி.மீ தூரம் எந்தக் கட்டுமானங்களையும் மேற்கொள்ளக்கூடாது என்பது விதி. அதை நீக்கி இருக்கிறார்கள். செங்கோட்டையையே டால்மியா கம்பெனியிடம் வாடகைக்கு விட்டுவிட்டார்கள். வரலாற்றின் மீது ஏன் இவர்களுக்கு இவ்வளவு பகை என்றால், வரலாறு இவர்களுக்கு எதிரானது. வரலாறு மக்களின் பன்முகத் தன்மையைப் பறைசாற்றுவது. அது மொழி, பண்பாட்டின் கூறுகளாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக உள்ளது.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் பங்களிப்பு செய்துள்ளனர். நவீன வளர்ச்சியில் அச்சு எந்திரங்கள் வரும் போது தமிழ்மொழி அதற்கேற்ப தகவமைத்துக் கொள்ள முதன்முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தை யோசித்தவர் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த வீரமாமுனிவர். புள்ளி வைக்கிற எழுத்து வேண்டாம் என்று மாற்று எழுத்துக்களை உருவாக்கியவர் அவர். அதன்பிறகு 10க்கும் மேற்பட்ட எழுத்துக்களைக் குறைத்து மிகப்பெரிய சீர்திருத்தத்தைக் கொண்டு வந்தவர் பெரியார். கிறிஸ்தவனும், மத நம்பிக்கையற்றவனும், வைஷ்ணவனும், சைவனும் என எல்லோரும் சேர்ந்து உருவாக்கி கட்டிக்காத்த மரபுதான் அனைத்து சமயத்தவனுக்காகவும் உரத்துக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எனவேதான் கங்கைக் கரையில் இருந்த தெளிவான சாதியப் பாகுபாடு தமிழகத்தில் இல்லை.அண்மையில் சிவகங்கையில் ஒரு கோவிலில் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்வெட்டில் ஒருவர் கொடுத்த சொத்துப்பட்டியல் உள்ளது. கோவிலுக்கு சொத்து இருந்தால்தான் பூசை நடக்கும். கடவுளை விட உயர்ந்தது சொத்து, பொருள்தான். எனவேதான் காரல் மார்க்ஸ் பொருள் என்பது ஒரு சமூக உறவு என்றார்.
உலகில் தோன்றிய மகான்களின் வாக்கியங்களில் மிக உயர்ந்த மகாவாக்கியங்களை லண்டனில் ஒரு தத்துவக்குழு தொகுத்துள்ளது. அந்த 10 மகாவாக்கியங்களில் 4 வாக்கியங்களை எழுதியவர் மாமேதை காரல் மார்க்ஸ். பணம் என்பது பொருள் அல்ல சமூக உறவு என்றார். சொத்து இருந்தால்தான் கோவில், சாமி இருக்கும். எனவேசொத்தை எழுதி வைத்தார்கள்.
பழைய பத்திரங்களில் கீறல் என்ற சொல் இருக்கும். அது என்ன கீறல்?கல்வெட்டில் பொறிக்கப்பட்ட சொத்துக்களை கொடுத்தவருக்கு கல்வெட்டு எழுத்துப்பயிற்சி கிடையாது. எனவே, பயிற்சி பெற்றவர் எழுதி முடித்தபிறகு சொத்துக்கொடுத்தவர் சுத்தியல் உளியை வைத்து ஒரு கீறல் போடுவார். அதன் பிறகு அதற்குக் கீழ் இவர் இன்னார் என்று பயிற்சி பெற்றவர் முறையாக எழுதுவார். இதுதான் கீறல். கோவிலில் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கல்வெட்டில், நிலத்தைக் கொடுத்தவர் சமூகக் கட்டமைப்பில் உயர்ந்த சாதி என்று சொல்லப்படும் வெள்ளாளர் பிரிவை சார்ந்தவர். இந்தக் கல்வெட்டை எழுதியவர் குரும்பன் என்ற தலித் சமூகத்தைச் சார்ந்தவர். ஆயிரக்கணக்கான ஏக்கர் சொத்துகொண்ட உயர்சாதிக்காரருக்கு எழுதத் தெரியவில்லை. தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு எழுதத் தெரிந்திருக்கிறது. இரண்டாவது, அந்தக் கல்வெட்டு இருப்பது கருவறை. உயர்சாதிக்காரர் சென்ற இடத்திற்கெல்லாம் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர்.
14ம் நூற்றாண்டில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இவர்கள் சொல்லுகிற அனைத்துக் கற்பிதங்களையும் நொறுக்கிறது. சாதி நெருக்கடிக்கு உள்ளாகாமல் 14ம் நூற்றாண்டு வரை தமிழ்ச்சமூகம் போராடி வந்திருக்கிறது.இந்த மண்ணின் சுய சிந்தனை கொண்ட அறிவு மரபு அனைத்து வகையிலும் காவிகளுக்கு இடையூறாக இருக்கிறது. பிளாட்டோ போன்றோர் மனிதனை எப்படி மேலாண்மை செய்வது என்றுதான் சிந்தித்தார்கள். எனவே கடவுளை உருவாக்கி, கடவுளின் பெயரால் பயமுறுத்தி கற்பிதங்களையும் உருவாக்கினார். 2ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு நேர் எதிரான மரபைக் கொண்டது தமிழ்ச்சமூகம் என்பதற்கு ஓராயிரம் சான்றுகள் உள்ளன. எனவே, மரபுகளை வீழ்த்துவது, பண்பாட்டுக் கூறுகளை சிதைப்பது, வரலாற்றை மாற்றுவது என்று வெறித்தனமான தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.
தமிழ்ச்சமூகம் இதற்கெதிராக விழிப்புணர்வோடு போராட வேண்டும். குறிப்பாக, அரசியல் தளத்தில் போராட பல இயக்கங்கள் இருக்கின்றன. பண்பாட்டுத்தளம் நுட்பமானது. கூர்மையானது. நமது ஆயுதங்களைஎதிரிகள் களவாட நாள்தோறும் முயற்சிக்கிறார்கள். காவிகள் அதைக் களவாண்டு பயன்படுத்தினாலும், அதன் மரபணுக்கள் உனக்கு எதிராகவே திரும்பும் என்பதுதான் கடந்த 3 ஆண்டுகால அனுபவம். எனவே, இந்த மண்ணின் மகத்தான மரபை உயர்த்திப் பிடிப்போம். சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம் என்பது இன்றைய முழக்கம் அல்ல, பண்டைய வரலாறு. அதைத் தொடர்வோம்.”
(தமுஎகச தென்சென்னை மாவட்ட மாநாட்டில் நிகழ்த்திய உரை)தொகுப்பு செ.கவாஸ்கர்
நன்றி - தீக்கதிர் 21.05.2018
நல்ல பதிவு
ReplyDeleteSimply superb!!
ReplyDelete