Sunday, May 20, 2018

புதுசா எதுக்கு? கமிஷன் அடிக்கவா?


வேலூர் மாவட்டம் ஏலகிரியில் நேற்று கோடை விழா தொடங்கி உள்ளது. 

கோடை விழாவை கொண்டாட நிரந்தரமான மேடை ஒன்று அமைக்கப்படும் என்று கடந்தாண்டு அறிவிக்கப்பட்டதை நிறைவேற்ற முடியவில்லை. அடுத்த வருடம் அமைத்து விடுவோம் என்று அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார்.

மிகச் சிறப்பாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட கலை அரங்கம் ஒன்று அங்கே பாழடைந்து கிடப்பது அமைச்சருக்கு தெரியுமா?

ஏலகிரியில் உள்ள யாத்ரி நிவாஸ் - மிகச் சிறப்பாக பராமரிக்கப் பட்டு வருகிற அரசு விருந்தினர் இல்லை. எங்கள் கோட்டச் சங்கத்தின் சார்பாக ஒரு முறையும் தென் மண்டலக் கூட்டமைப்பு சார்பாக ஒரு முறையும் அங்கே இரண்டு நாள் தொழிற்சங்க வகுப்பு நடந்துள்ளது. அறைகளின் பராமரிப்பு, உணவின் சுவை மற்றும் தரம், அந்த வளாகத்தின் சுகாதாரம், தூய்மை என எல்லாமே அபாரம். எந்த ஒரு தனியார் விடுதிக்கும் சளைத்ததல்ல அது. 

யாத்ரி நிவாஸ் சுற்றுச்சுவரை ஒட்டி ஒரு அரசு திறந்த வெளி கலை அரங்கம் உள்ளது. 

நல்ல பெரிய மேடை. மேடைக்கு அழகூட்ட இரு புறமும் தூண்கள்.  அரை வட்ட வடிவில் படிகளோடு அமைக்கப்பட்ட பார்வையாளர் மாடம். கடைசி வரிசையில் அமர்ந்துள்ளவர்கள் கூட மேடையை எந்த தடையும் இல்லாமல் பார்க்க முடியும். மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது அந்த திறந்த வெளி கருத்தரங்கம்.

அதன் இன்றைய நிலை எப்படி உள்ளது பாருங்கள்.



பாசி படர்ந்து பாழடைந்து போயுள்ளது மேடை. அந்த மேடையில் என்ன நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது என்பதற்கு சின்ன உதாரணமாக கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.





ஆமாம். இப்போது அது இலவச திறந்த வெளி பார்.

பார்வையாளர்கள் மாடம் மிகப் பெரிய கொடுமை. அதை எழுத்தால் விவரிப்பதை விட படத்தில் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள்.



முழுதுமாக செடிகளும் புதர்களும் மண்டிக் கிடக்கிறது.

"நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எரிவதுண்டோ?"

என்ற பாரதியின் வரிகளுக்கு இந்த திறந்த வெளி கருத்தரங்கம் பொருத்தமான உதாரணம்.

அரசு அமைத்தது அதனால்தான் பராமரிப்பு இல்லை என்று சிலர் சொல்ல வரலாம். அதனால்தான் அரசு அமைத்த யாத்ரி நிவாஸ் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்பதை முன் கூட்டியே குறிப்பிட்டேன். 




ஏலகிரியில் அமைக்கப்பட்டுள்ள அரசு பூங்கா கூட நன்றாகத்தான் பராமரிக்கப்பட்டு வருகிறது.  மேலே உள்ள படம் அதற்குச் சான்று. 

அரசின் கைவசம் உள்ளது என்பதல்ல பிரச்சினை. இந்த கலை அரங்கம் பாழடைக்கப்பட்டதன் பின்னணியில் ஏதாவது அரசியல் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒரு வேளை ஒழுங்காக பராமரிக்கப்பட்டால் இயற்கைச் சூழலில், மெல்லிய குளிரில் பல நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அற்புதமான இடமாக இந்த அரங்கம் அமைந்திடும்.

ஏற்கனவே அமைக்கப்பட்ட கலை அரங்கத்தை நாசம் செய்து விட்டு புதிதாக ஒன்று அமைப்பது என்றால் அதற்கு கமிஷன் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

இன்னொரு முக்கியமான செய்தியையும் குறிப்பிட வேண்டும். இந்த கலை அரங்கத்திற்கு முன்பாக ஒரு அரசு அலுவலகம் உள்ளது.

அது 

ஏலகிரி காவல் நிலையம். 





1 comment:

  1. படங்களைப் பார்க்க மிகவும் வேதனையாக உள்ளது

    ReplyDelete