Thursday, May 17, 2018

தோழமை மழையில் நனைந்த தருணம் . . .

கொல்கத்தா பயணத்தை அற்புதமான அனுபவமாக மாற்றியது அங்கே இருந்த எங்கள் தோழர்கள் வெளிப்படுத்திய தோழமை உணர்வுதான்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் பொதுச்செயலாளராக, தலைவராக 1955 முதல் 1994 வரை செயல்பட்ட  மகத்தான தலைவர் தோழர் சந்திர சேகர் போஸ் அவர்களை சந்திப்பதும்  அறுபதுகளின் இறுதியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய வீரம் செறிந்த "இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்" நடைபெற்ற "இலாகோ" கட்டிடத்தையும் தொடர்புடைய இதர இடங்களைப் பார்ப்பதும்தான் கொல்கத்தா பயணத்தின் முக்கிய நோக்கம்.

இது தொடர்பாக எங்கள் கிழக்கு மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயந்தோ முகர்ஜியிடம் முன் கூட்டியே பேசியிருந்தேன். கொல்கத்தா வந்த உடனேயே சங்க அலுவலகத்திற்கு விரைந்தேன். அங்கே தோழர் ஜெயந்தோவும் மற்ற பொறுப்பாளர்களும் இருந்தார்கள். பிஸ்கெட், டீயோடு வரவேற்றார்கள்.  தோழர் போஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஓய்வு பெற்ற தோழரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரும் தயாராக இருந்தார். அவர் தோழர் போஸிடம் தொலைபேசியில் பேச அவரும் உடனே அழைத்து வரச் சொல்லி விட்டார். 

கிழக்கு மண்டல பொருளாளர் தோழர் அமிதவ் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். மாலை ஆறு மணி முதல் ஒன்பதரை மணி வரை தோழர் சந்திர சேகர போஸோடு நீண்ட உரையாடல். 96 வயது என்பதை அவர் சொன்னால்தான் நம்ப முடியும். அந்த அளவிற்கு ஒரு தெளிவு, நினைவாற்றல். போராட்ட களத்தில் அவரோடு இருந்த சகாக்கள் தோழர் சரோஜ் மற்றும் தோழர் சுனில் பற்றி பேசுகையில் நெகிழ்ச்சி, சங்கம் இன்று வளர்ந்துள்ள நிலை குறித்து மகிழ்ச்சி, இளைய தோழர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்று மூன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. அவரது வீட்டிலேயே இரவு உணவு அருந்தி விட்டு புறப்பட்டேன். டாக்ஸி ஸ்டேண்ட் வரை நானே வருகிறேன் என்று எழுந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வாழ்வின் உன்னதமான தருணமாக அந்த நிமிடங்கள் அமைந்திருந்தது.



"இலாகோ கட்டிடம்" பார்க்க நானே அழைத்துச் செல்கிறேன் என்று தோழர் அமிதவ் சொல்லியிருந்தார். அவர் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்து விட்டார். அந்த கட்டிடத்தில் உள்ள ஒரு கிளையில்தான் அவர் பணியாற்றுகிறார். அங்கே உள்ள அனைத்து தோழர்களிடமும் மிகவும் பெருமையாக அறிமுகம் செய்து வைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு இடத்தில் பணியாற்றுகிறோம் என்று அந்த தோழர்களிடமும் ஒரு பெருமிதம் இருந்தது. 






கொல்கத்தா துறைமுகம் செல்ல வேண்டும் என்று வழி கேட்டேன். துறைமுகத்தின் வாசலில் இருந்து பார்ப்பது வீண். அதற்குப் பதிலாக நியூ அலிப்பூர் செல்லும் புறநகர் மின்சார ரயிலில் போனால் அந்த ரயில் துறைமுகத்தை ஒட்டியபடியே செல்லும் என்று சொல்லி கூடவே செல்ல ஒரு தோழரையும் அனுப்பி வைத்தார்கள். 

நாங்கள் ரயில் ஏறிய பி.பி.டி.பாக் என்ற ரயில் நிலையம் கங்கை நதியை ஒட்டி அமைந்திருக்கிறது. இடது முன்னணி அரசு 2000 ம் ஆண்டு கங்கை நதிக்கரையை ஒட்டி மில்லினியம் பூங்கா என்ற ஒரு பூங்காவை அமைத்துள்ளது. மறு கரைக்கு படகு சவாரியும் உண்டு. அதைத்தான் தவற விட்டு விட்டேன். என் உடன் வந்த அந்த தோழர் கௌதம் ரயில் செல்லும் வழியெங்கும் பல தகவல்களை கூறியபடியே வந்து கடைசியாக விருந்தினர் இல்லம் செல்ல மெட்ரோ ரயிலிலும் ஏற்றி வைத்தார்.

கொல்கத்தா தோழர்களின் அன்பும் உபசரிப்பும் தோழமை உணர்வும் தந்த பரவசத்தோடு அன்று இரவு விருந்தினர் இல்லம் திரும்பினேன். 

இத்தோடு முடியவில்லை.

இவற்றை மிஞ்சும் இன்னொரு நெகிழ்ச்சியான அனுபவம் மறுநாள்  கிடைத்தது.

அது பற்றி நாளை 

                                  -  பயணம் தொடரும் 

3 comments:

  1. நல்ல அனுபவம் தான்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் உன்னை மாதிரியான பொறுக்கி செய்வது

      Delete