Saturday, December 24, 2016

தட்டாதே, திறக்காது.



04.12.2016 வண்ணக்கதிரில் பிரசுரமான எனது சிறுகதை. ஓவியம் தோழர் ஸ்ரீரசா. 


தட்டாதே, திறக்காது.
வேலூர் சுரா



“ஏய் ராணி, கதவைத் திறடி”

நள்ளிரவைக் கடந்த நேரத்தில் உச்சத்தில் கேட்ட குரலும் கதவை பெரும் ஓசையோடு தட்டும் சத்தமும் சத்யநாதனின் உறக்கத்தைக் கலைத்தது. பக்கத்திலிருந்த போனை எடுத்து அவர் நேரத்தை பார்த்தால் இரண்டு மணி என்று அது சொன்னது.

“அடியே, உள்ள வந்தேன், கொன்னே போட்டுடுவேன், புருசன் வெளில நிக்கறேன், என்னடி தூக்கம், டேய் ராகுல், தூங்குமூஞ்சிக் கம்மனாட்டி, கதவைத் திறடா. போனை அணைச்சு வச்சுட்டு சொகுசா தூங்கறீங்களா? என்னை வீட்டுக்கு வெளியே நிக்க வைன்னு எவனாச்சும் புத்திமதி சொன்னானா?”

இப்போது கூச்சல் அதிகமாகி இருந்தது. கெட்ட வார்த்தைகளும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அவன் போட்ட கூச்சலில் உறங்கிக் கொண்டிருந்த தெருநாய்களும் எழுந்து  குறைக்கத் தொடங்கி சத்தம் இப்போது எல்லை மீறிப் போய்க் கொண்டிருந்தது.

‘சே, ஒரு நாளாவது ஒழுங்கா தூங்க விடறானா, இவனை……”

கோபத்தோடு கட்டிலில் இருந்து எழ எத்தனித்த அவரை தடுத்தார் அவரது மனைவி சுந்தரவதி.

“ஏங்க, நேத்திக்கு அந்த கிறுக்கன் உங்களை எப்படி திட்டினான்னு மறந்து போய்ட்டீங்களா? அவன் குரலைக் கேட்டாலே ஓவரா தண்ணியடிச்சுருக்கான்னு தெரியுது, நடுராத்தியில மறுபடியும் அசிங்கப் படப் போறீங்களா”

முந்தைய நாள் நடந்த சம்பவம் சத்யநாதனின் கண்களில் விரிந்தது.

பக்கத்து வீட்டிற்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகத்தான் வாடகைக்கு குடி வந்தவர்கள் ராஜூவும் ராணி மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல். ஆட்டோ ஸ்பேர்ஸ் கடையில் வேலை பார்ப்பவன். மனைவி ஒரு பெரிய தனியார் பள்ளியில் ஆசிரியை.

தங்களை அறிமுகம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போதே விருட்டென்று உள்ளே சென்றவன் ராஜூ. சுந்தரவதி கேட்ட ஏதோ ஒரு கேள்விக்கு ராணி பதில் சொல்லும் முன்னரே

“ஏய் ராணி, உள்ளே வரியா?”

என்று குரல் கொடுக்க இவர்களுக்கு ஒரு மாதிரியாகி விட்டது.

முகம் சுளித்த கணவனை

“புதுசா ஒரு வீட்டுக்கு வந்தா சாமான் செட்டை அடுக்கி வைக்க, ஒழுங்கு படுத்த, இப்படி ஏராளமா வேலை இருக்கும். நம்ம கூட பேசிக்கிட்டு இருந்தா வேலை கெட்டுப் போகாதா”

என்று சுந்தரவதிதான் சமாதானம் செய்தார்.

அதன் பின்பு கடந்து போன நாட்களிலும் அவன் விறைப்பாகவே இருந்தான். தெருவில் யாரையும் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை. அனலை அள்ளிக் கொட்டியது போல முகம் கடுப்பாகவே இருக்கும். அதனாலோ என்னவோ அவன் மனைவியின் முகத்தில் எப்போதும் துயரம் ஒட்டிக் கொண்டே இருக்கும். முப்பது வீடுகள் கொண்ட தெருவில் அவர்கள் வீடு மட்டும் தனித் தீவாகவே இருந்தது.

நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வருவது, வரும் போதே சத்தம் போட்டுக் கொண்டு வருவது, வீட்டிற்குள் நுழைந்த பின்னும் மனைவியையும் மகனையும் திட்டிக் கொண்டே இருப்பது என்பதெல்லாம் தெருவினரின் காதுகளுக்கு பழக்கமாகி விட்டது. ஒரே தெருவில் இருந்தாலும் அனைவருடைய தொடர்பு எல்லைக்கு அப்பால்தான் இருந்தார்கள்.

அப்படியே இருந்திருந்தால் எந்த சிக்கலும் இருந்திருக்காது. நதி என்றைக்கு நேர் கோட்டில் ஓடியிருக்கிறது! திருப்பங்கள் இன்றி வாழ்க்கை ஏது?

தங்கள் வீட்டு விசேஷம் ஒன்றுக்காக தெருவில் உள்ள அனைவருக்கும் பத்திரிக்கை வைத்த சத்யநாதன், சுந்தரவதி தம்பதியினர் ராஜூ வீட்டிற்கும் சென்றார்கள். வீட்டில் ராணியும் பையனும்தான் இருந்தார்கள்.

இரண்டு சம்பாத்தியம் உள்ளவர்களின் வீடு போலவே இல்லை அது. வந்தவர்களை அமரச் சொல்வதற்காக பிரித்துப் போடப்பட்ட பாய் கூட நைந்து போயிருந்தது. அரசாங்கம் அளித்த இலவசப் பொருட்களைத் தவிர வேறு எந்த பொருளும் இல்லை. சமையலறையை நோட்டம் விட்ட சுந்தரவதி அங்கேயும் பெரிதாக எதுவும் இல்லை என்பதையும் கண்ணில் பட்ட பிளாஸ்டிக் டப்பாக்கள் பெரும்பாலும் காலியாகவே இருந்தது என்பதையும் கவனித்துக் கொண்டாள். இதெல்லாம் நமக்கெல்லாம் நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயம் என்று சத்யநாதன் கண்ஜாடை காட்டினார்.

ஆனால் அவர்கள் மனதிலிருப்பது ராணிக்கு எப்படித்தான் புரிந்ததோ?

“சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் அரசாங்கமே பறிச்சுடுது, அப்பறம் வீட்டில என்னதான் மிஞ்சும்?”

“என்னத்தான் சொந்தம்னாலும் ஜாதகப் பொருத்தம் பார்த்துதான் கல்யாணம் செஞ்சு வச்சாங்க, கட்டத்த மட்டும் பாத்தவங்க, மனப் பொருத்தமும் பாக்கல, பொருளாதாரப் பொருத்தமும் பாக்கல. அவர விட நான் அதிகமாக சம்பாதிக்கிறேன்ங்கறதை சகிச்சுக்கவே முடியலை. அதனால தண்ணியடிக்க ஆரம்பிச்சாரு, அதனால உள்ள வேலையும் நிலைக்கலை. பையனுக்கு அப்பா வேணும்னு பார்க்கறேன். இல்லைனா எப்பவோ இந்த பந்தத்தை விட்டு வெளியே போயிருப்பேன்”

கண்ணீர் மல்க ராணி பேசியதைக் கேட்ட சுந்தரவதிக்கும் கண்ணீர் வந்து விட்டது.

“ஏம்மா, உங்க வீட்டுப் பெரியவங்களை வைச்சு பேசக் கூடாதா?”

என்று சத்யநாதன் ஆலோசனை சொல்லிக் கொண்டிருந்த போதே வாசலில் பைக் சத்தம் கேட்டது.

உள்ளே வந்த ராஜூ, கண்களில் நீரோடு இருந்த மனைவியைப் பார்த்து விஷயத்தை புரிந்து கொண்டான்.

“தம்பி, எங்க பேரனுக்கு அடுத்த ஞாயிற்றுக் கிழமை காது குத்து வைச்சிருக்கோம். அவசியம்”

என்று தொடங்கிய சத்யநாதனை அவன் பேசவே விடவில்லை.

“யார் வீட்டு சங்காத்தமும் வேண்டான்னுதான ஒதுங்கியிருக்கேன், காது குத்து, கருமாதின்னு உள்ளே நுழைஞ்சு குடும்பத்துல குழப்பத்தை செய்யாதீங்க”

என்று அடாவடியாக பேச இவர்கள் வெளியே வந்து விட்டார்கள்.

அன்று இரவு பக்கத்து வீட்டிலிருந்து பெரும் கூச்சல் கேட்டது. வழக்கமான திட்டுக்கள் மட்டுமல்லாமல் அடிப்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. ராணி பெருத்த குரலில் அலறிய போது பொறுக்க மாட்டாமல் சத்யநாதனும் சுந்தரவதியும் எழுந்து போனார்கள்.

“என் பொண்டாட்டியையும் புள்ளையையும் நான் அடிப்பேன், கொல்லுவேன், நீங்க யாரு கேட்கறதுக்கு”

என்று ஆரம்பித்தவன் நா கூசும் வார்த்தைகளால் பேச,

“டேய், ராணி என் பொண்ணை விட சின்னவடா. இப்படி அபாண்டமா பேசறயே, உன் நாக்கு அழுகிப் போகும்டா”

சத்யநாதன் அடிக்கவே போய் விட்டார். தெருவில் உள்ளவர்கள் எல்லாம் திரண்டு விட்டார்கள். கணவனைப் பிடித்து இழுத்தபடியே ராணி உள்ளே போய் விட்டாள்.

“சே, என்ன மனுஷன் இவன்! வாய்க்கு வந்த மாதிரி என்ன வேணும்னாலும் பேசுவானா! அவனையெல்லாம் கல்லாலேயே அடிச்சு கொன்னாக் கூட தப்பில்லை”

கோபம் அடங்கவில்லை சத்யநாதனுக்கு. தெருவில் உள்ளவர்கள் சமாதானப் படுத்தி அனுப்பி வைத்தார்கள்.

நேற்றைய சம்பவத்தின் தொடர்ச்சியால் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை.. வழக்கமாக செல்லும் நடைப்பயிற்சியைக் கூட தவிர்த்து விட்டார்.

இப்போது மீண்டும் கூச்சல். மனைவியின் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள்ளேயே இருந்து விட்டார்.

“இவ்வளவு நேரம் அவன் கதவைத் தட்டியும் அந்தப் பொண்ணு திறக்காம இருக்கே, நீ வேணா போய்ப் பாரேன்”

என்று மனது கேட்காமல் சொல்ல

“ஒன்னும் வேண்டாம். அவங்க வீட்டுப் பிரச்சினையே தேவையில்லை. அவங்க ஹவுஸ் ஓனரை பாத்து அவங்களை காலி செய்ய வையுங்க”

என்று சுந்தரவதி தீர்மானமாக சொல்லி விட்டார்.

“இத்தனை நாள் வரை உங்களின் கொடுமைகளை பொறுத்துக் கொண்டேன். எப்போது நடத்தையை கொச்சைப்படுத்திப் பேசினீர்களோ, இனி உங்களோடு வாழ்க்கையை தொடர்வதில் அர்த்தமில்லை என்பதால் இந்த வீட்டிலிருந்தும் திருமணத்திலிருந்தும் வெளியேறுகிறேன்”

என்று எழுதி கதவுக்களுக்கிடையே ராணி சொருகி வைத்து விட்டுப் போனது அவர்களுக்குத் தெரியாது.

அக்கடிதத்தை கவனிக்காமல் ராஜூ இன்னும் கதவை தட்டிக் கொண்டே இருக்கிறான்.  


2 comments:

  1. நல்ல முடிவு நண்பரே
    இதுபோன்ற முடிவுகள் அவசியம்தான்

    ReplyDelete
  2. பாலச்சந்தர் திரைப்படத்தின் நிறைவு போல காணப்பட்டது, வித்தியாசமாக.

    ReplyDelete