Friday, December 9, 2016

தேசத்துரோக பிச்சைக்காரர்கள்





இரண்டு நாட்கள் வெளியூர் பயணம் சென்றிருந்தேன். ஆறு வேளை உணவு உணவகங்களில்தான் சாப்பிட வேண்டியிருந்தது. நான் சென்ற எந்த உணவகமும் மோடி விரும்புகிற டிஜிட்டல் இந்தியாவிற்கோ அல்லது ரொக்கமற்ற பரிவர்த்தனைக்கோ இன்னும் தயாராகாத பிற்போக்குத்தனமான, கடந்த கால பாணியிலேயே தொழில் நடத்திக் கொண்டிருப்பவர்கள் போலும். டெபிட் கார்ட், கிரெடிட் கார்டை பெற்றுக் கொள்ள மனமில்லாதவர்களாக இருந்தார்கள், ஆறு உணவகங்களில் நான்கு பேர் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டுமல்ல, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களையும் வாங்க மாட்டோம் என்று எழுதி வைத்து அதற்கும் செல்லாத நோட்டின் மதிப்பையே அளித்தார்கள்.

உணவகத்திலிருந்து வெளியே வருகிற போது பிச்சைக்காரர்கள் சிலர் சூழ்ந்து கொண்டார்கள்.

ஹோட்டலில் இல்லாவிட்டால் என்ன, இவர்களிடம் நிச்சயம் ஸ்வைப்பிங் மிஷின் இருக்கும் என்று நம்பினேன். மோடி சொன்னால் சரியாத்தான் இருக்கும் என்று நினைத்தேன். மோடி எவ்வளவு பெரிய புத்திசாலி! அவருக்குத் தெரியாத பொருளாதாரமா அல்லது அவர் அறியாத பிச்சைக்காரர்களா?

கையில் சில்லறை இல்லை. உங்க மிஷினை காண்பித்தால் கிரெடிட் கார்ட் மூலம் ஐந்து ரூபாய் உங்க அக்கவுண்டில அனுப்பி விடுகிறேன் என்று சொன்னேன்.

அவர்கள் பார்த்த பார்வை விபரீதமாகத் தெரிந்தது. கிரெடிட் கார்ட்னா ஸ்வீட்டா, காரமான்னு கேக்கறான் என்ற அன்பே சிவம் வசனம் வேறு தேவையில்லாமல் நினைவுக்கு வந்து தொலைத்தது.

பிச்சை போட துப்பில்லை, அஞ்சு ரூபாய் காசை அக்கவுண்டில போடறானாம். அந்த  அளவுக்கு வசதி இருந்தா நாங்க ஏன்யா பிச்சை எடுக்கறோம் என்று சத்தமாகக் கேட்டு மானத்தை வாங்கி விட்டார்கள்.

பிச்சைக்காரர்களிடமே ஸ்வைப்பிங் மிஷின் உள்ளது என்று பிரதமர் சொல்கிறார். அது இருந்தால் நாங்க ஏன் பிச்சை எடுக்கப் போகிறோம் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

என்ன இருந்தாலும் மோடி பிரதமரில்லையா?

அவர் சொல்வதும் செய்வதும்தானே சரியாக இருக்க வேண்டும்!

எனவே ஸ்வைப்பிங் மிஷின் இல்லாத பிச்சைக்காரர்கள் எல்லாரும் தேசத்துரோகிகள். அவர்களுக்கு யாரும் சில்லறையாக பிச்சை போடக் கூடாது?

இதுதானே மோடிஜி உங்களுடைய அடுத்த அதிரடி நடவடிக்கை????

கருப்புப்பணம் பெருமளவு புழங்கும் பொருளியல் நடவடிக்கை பிச்சை எடுக்கும் தொழில் என்பதால் மிகுந்த நுண்ணுணர்வோடு செயலாற்றியுள்ள பிரதமர் மீது இடதுசாரிகள், இஸ்லாமியர்கள் பாய்வதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் பிச்சை எடுப்பவர்கள் கூட  பிரதமர் மோடி மீது பாய்வது மிகப் பெரும் அற வீழ்ச்சி, இப்படி ஒரு கீழ்மைக்கு அவர்கள் இறங்கியுள்ளது கேவலமானது என்று ஆசான் அடுத்து எழுதப் போகிறாரே, அதைத்தான் என்னால் தாங்க முடியாது.

No comments:

Post a Comment