எங்கள் சத்துவாச்சாரி பகுதி முழுதும் சென்று வந்தேன். ஒரே ஒரு கடை கூட திறந்திருக்கவில்லை. பேருந்துகள் என்பதை காண முடியவில்லை. ஆங்காங்கே அதிமுகவினர் கும்பலாக நிற்கின்றனர். பதட்டமும் சோகமும் அவர்கள் முகத்தில் அப்பியிருக்கின்றன. காவல்துறை நடமாட்டமும் உள்ளது.
அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவின் அமலாக்கம் போல காட்சி அளிக்கிறது. தமிழகம் முழுதும் இதுதான் நிலைமை போல தெரிகிறது. தமிழகம் மட்டுமல்ல புதுவையிலும் இதுதான் நிலைமை என்பதை கீழே உள்ள புகைப்படம் உணர்த்துகிறது. புதுவையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நேரு வீதி இது.எங்கள் தோழர் ஒருவர் இப்போது அனுப்பிய படம் இது.
யாரும் நிர்ப்பந்தமளித்து கடைகளை வணிகர்கள் பூட்டினார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் இயல்பாகவே இருக்கும் அச்ச உணர்வு அவ்வாறு அடைக்க வைக்கிறது.
ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் தங்கள் கடைகள்தான் தாக்கப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது சரியானதும் கூட.
இப்படிப்பட்ட நிலைமையை கடந்த கால முன்னுதாரணங்கள் உருவாக்கி உள்ளன.
வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட எவரும் இதுவரை தண்டிக்கப் பட்டதாக வரலாறில்லை. மாறாக மக்கள்தான் பதுங்குகிறோம். நான் என்னையும் சேர்த்தே சொல்கிறேன். இன்று நான் சென்னை செல்ல வேண்டிய அவசியம் இருந்தும் அப்பயணத்தை ஒத்தி வைத்து விட்டேன்.
அதுதான் சமூக விரோத சக்திகளுக்கு வசதியாகப் போகிறது.
இது போன்ற சந்தர்ப்பங்களில் வெறியாட்டம் ஆடுபவர்கள் நாய்கள் போல. கல்லை நாம் கையில் எடுத்தால் ஓடி விடுவார்கள்.
அச்சம் தவிர்ப்போம். எதிர்த்து நிற்போம்.
No comments:
Post a Comment