Tuesday, December 27, 2016

ராஜீவ் கொலை வழக்கிற்கும் பொருந்துமா?





நேற்று உச்சநீதிமன்றம் முக்கியமானதொரு தீர்ப்பை வழங்கி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் வழக்கு அது. இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் தண்டனை அனுபவித்த ஒருவரின் தண்டனை காலத்தை ரத்து செய்து விடுவிக்கும் அதிகாரம் அந்த மாநில அரசுடையது என்றும் இதில் மத்தியரசு தலையிடுவதற்கு அதிகாரம் கிடையாது என்றும் அத்தீர்ப்பு சொல்கிறது.

இந்த தீர்ப்பினை ராஜீவ் கொலையாளிகளுக்கும் பொருத்த வேண்டும். இவ்வழக்கில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்த அனைவரையும் விடுதலை செய்வது என்று மாநில அரசு ஏற்கனவே முடிவு செய்து அறிவித்து விட்டது.

முந்தைய காங்கிரஸ் அரசு தொடுத்த மேல்முறையீட்டால் விடுதலை தடைபட்டது. உச்ச நீதிமன்றம் போட்டு குழப்பியது. காங்கிரஸ் அரசின் நிலையை பாஜக வும் தொடர்கிறது. பொடா சட்டம் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் காலாவதியான சட்டத்தை பிடித்துக் கொண்டு மத்தியரசு தொங்க, நீதிமன்றமும் சொதப்பிக் கொண்டிருக்கிறது.

நீண்ட காலம் ஆயுள் தண்டனை அனுபவித்தவர்களை விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுடையது மட்டுமே என்று இப்போது தெளிவாக உச்ச நீதிமன்றம், அதுவும் இரண்டு பேர் பெஞ்ச், சொல்லியிருப்பதால் இதனடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பவர்களையும் விடுதலை செய்ய வேண்டும்.

அப்போதுதான் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்பது நிரூபணமாகும்.

குற்றவாளிகள் யார் என்று பார்த்து சட்டத்தை வளைப்பது எப்படிப்பட்ட தவறோ, அதற்கு நிகரான தவறுதான் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் பார்த்து சட்டத்தை வளைப்பதும். 

2 comments:

  1. உண்மை..சட்டம் சமமாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  2. மரணதண்டணையே நாட்டில் இருக்க கூடாது என்பதே சரியானது.
    ராஜீவ் கொலை குற்றவாளிகளை வைத்து தமிழர் வாக்குகளை அறுவடை செய்வதற்காக,குறுகிய நோக்கில் ஜெயலலிதா அரசு நாடகமமாடியது.

    ReplyDelete