Friday, January 19, 2024

முகமறியா தியாகிகள் நினைவாக . . .


சில வருடங்கள் முன்பாக நான் எழுதியிருந்த பதிவை செழுமைப்படுத்தி இன்று பகிர்ந்து கொண்டுள்ள தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 



 *நாளொரு கேள்வி: 19.01.2024*


தொடர் எண்: *1329*

*தியாகிகள் தினம்& ஆயுள் காப்பீட்டு தேசியமய நாள்* 

இன்று நம்மோடு வேலூர் கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொதுச் செயலாளர் *எஸ். இராமன்*
###########################

*அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்*

கேள்வி: ஜனவரி 19 தியாகிகள் தினத்தின் வரலாற்று பின்புலம் என்ன? 

*எஸ். ராமன்*

அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்...

இவர்களைப் பார்த்ததில்லை. இவர்கள் மரணம் பற்றியும் அவர்கள் மரணித்த நாளில் அறிந்ததில்லை. இத்தனைக்கும் இவர்கள் வாழ்ந்த அதே கீழைத் தமிழ்நாட்டின் பகுதியில்தான், இவர்கள் உயிரை காவல்துறை தோட்டாக்கள் குடித்த காலத்தில் நான் பள்ளி மாணவனாய் பனிரெண்டாவது வகுப்பில் அப்போது படித்துக் கொண்டிருந்திருக்கிறேன்.

திருமெய்ஞானம் என்ற கிராமத்தில் நடைபெற்ற ஒரு மிகப் பெரிய கொடூரம் பற்றி அன்றைய அதே மாவட்டத்தில் இருந்த  திருக்காட்டுப்பள்ளி என்ற ஊரில் படித்து வந்த நான் அறிந்திருக்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சி ஒரு வேளை அங்கே போராட்டங்கள் நடத்தியிருக்கலாம். தட்டிகள் கட்டி வைத்திருக்கலாம்.  மக்களின் கோரிக்கைகளுக்காக நடத்துகின்ற போராட்டங்களை எப்படி நடுத்தர வர்க்க மக்கள் மௌனமாக இப்போதும் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்களோ, அது போல  நானும் ஒரு வேளை அன்று அதை மௌனமாகக் கடந்து போயிருக்கலாம்.

அந்த கொடூர நிகழ்வு பற்றி நெஞ்சை பதற வைத்த அந்த சம்பவம் பற்றி எல்.ஐ.சி நிறுவனத்தில் இணைந்த பின்பே சங்கத்தின் மூலமாகவே அறிந்து கொண்டேன். 

ஏன் இந்த உயிர் பறிப்பு? காவல் துறையின் துப்பாக்கித் தோட்டாக்களுக்கு அவர்கள் இரையாக்கப்பட்டது எதற்காக? 42 ஆண்டுகளுக்கு பின்னால் செல்வோம். 

அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 1982 ஜனவரி 19 ம் நாள் அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன.

உலக வங்கியிடமும் பன்னாட்டு நிதி நிறுவனத்திடமும் கடன் வாங்கிய இந்திய அரசு, அந்த கடனுக்காக அந்த அமைப்புக்கள் விதித்திருந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தொடங்கி இருந்த காலம். இன்று போலவே அப்போதும் அந்த நிபந்தனைகள் என்பது  உழைக்கும் மக்கள் மீதான தாக்குதல்களாகத்தான் அமைந்திருந்தது. வேலையின்மை அதிகரிப்பு, விலை வாசி உயர்வு, ஆலைகள் மூடல் என  தாக்குதல்கள் பன் முனைகளில்... பொதுத் துறைகள் மீதான தாக்குதலும் துவங்கிய காலம். 

இதற்கு எதிராக அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைகின்றன. தலைநகர் டெல்லியை உலுக்கிய பேரணி நடைபெறுகின்றது.  1982 ஜனவரி 19 ம் நாள் ஒரு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம் மேற்கொள்வது என்ற அறைகூவல் விடப்படுகிறது.

வேலை நிறுத்தத்திற்கு முன்பாகவே முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சங்க முன்னணித் தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்த ஆர்ப்பாட்டங்களில் காவல்துறை குண்டாந்தடிகள் ஆவேச தாக்குதல் நடத்துகிறது.

இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமெய்ஞானம் என்ற சின்னஞ்சிறு கிராமத்தில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் களமிறங்குகின்றனர். ஆர்ப்பாட்டத்தை அனுமதிக்க மறுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்துகிறது.
அஞ்சான் நாகூரான் எனும் இரண்டு விவசாயக் கூலித் தொழிலாளர்களை கொன்று தன் வெறியை அவர்களின் குருதியில் தணித்துக் கொண்டது. ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி என்ற கடமையை நிறைவேற்றிய திருப்தி அதற்கு... அதுபோல மன்னார்குடி அருகில் உள்ள இரட்டைப் புளி கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயத் தொழிலாளி உயிரையும் தோட்டாக்கள் பறித்தன. 

தியாகிகளின் மூவரின் புகைப்படங்கள் கிடைக்குமா என்று  இணையத்தில் தேடிப்பார்க்கிறேன். கிடைக்கவில்லை. அவர்களின் முகம் அறியாவிட்டாலும் கூட தமிழக உழைப்பாளி வர்க்கம் அவர்களை மறக்கவில்லை. அவர்களின் தியாகத்தை மறக்கவில்லை. 

சி.ஐ.டி.யு அமைப்பு 19 ஜனவரியை ஒவ்வொரு வருடமும் தியாகிகள் தினமாக அனுசரிக்கிறது.

இன்று ஆயுள் காப்பீடு தேசிய மய நாள். பொதுத் துறையின் தாய் போன்று விளங்கும் மகத்தான நிறுவனமான எல்.ஐ.சியின் அரசு நிறுவனம் என்ற அந்தஸ்தை பாதுகாக்க வேண்டிய கடமை முன்னிற்கும் நேரம். இந்த தியாகம் பொதுத் துறை பாதுகாப்பு என்ற இலட்சியத்திற்கு உரமாகும். 

வரலாறு கற்றறியா சமூகம் உயிரற்ற உடலுக்கு சமம். இன்றும் கூட பஞ்சப்படி உள்ளிட்ட பயன்கள் மற்றும் உரிமைகள் தொடர்வதற்கு அகில இந்திய வேலை நிறுத்தங்களும், அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் போன்ற சாமானிய உழைப்பாளிகளின் உயிர்த் தியாகமும் காரணம் என்று அறியா வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் நிறைய பேர் இன்றும் உள்ளனர். 

தியாகிகள் தினம் இன்று... தொழிலாளர் விவசாயிகளின் கூடல் குறித்து நாம்

பகிர்வோம். நிமிர்வோம்! 

*செவ்வானம்*

No comments:

Post a Comment