தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான களப்பிரன் அவர்களின் அனுபவப் பகிர்வு, ஒரு மதச்சார்பற்ற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.
அவரிடம் இன்னொரு ஸ்பெசல் ஐட்டம் உள்ளது. அநேகமாக அதை அவர் நாளை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.
"இந்தியாவில் மட்டும் தான் மதச்சார்பின்மை பத்தி பேசுவீங்க. ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டில் பேசுங்களேன் பார்ப்போம்" என்று யாராவது ஒரு சங்கி கிளப்பிவிட்ட கேள்வியை, ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் அப்படியே நம்மிடம் வந்து ஒப்பிக்கும் அப்பாவிகளுக்காக...
கஜகஸ்தான் ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை நாடு. மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 71% கிருஸ்தவர்கள் 17% குறிப்பிட விரும்பாதோர் 9.5% நாத்திகர்கள் 2.3% இதர மதத்தினர் 0.2%
இஸ்லாமிய பெரும்பான்மை இருந்த போதும் கஜகஸ்தான் அரசியலமைப்பு தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்துக் கொண்டுள்ளது. சும்மா பெயருக்கல்ல. உண்மையாகவே மதச்சார்பற்ற நாடு தான்.
அந்நாட்டு சட்டம் மக்கள் அனைவரும் அவரவர் மத சுதந்திரத்தோடு வாழ உறுதி அளிக்கிறது. ஆனால் அரசு இயந்திரம் முழுவதும் மதச்சார்பின்மையை மட்டுமே கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அந்த நாட்டு சட்டப்படி அரசு விவகாரங்களில் மதம் தலையிடக்கூடாது. உதாரணத்திற்கு அங்குள்ள கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட எதிலும் எந்த மத சடங்குகளும் கூடவே கூடாது. ஆனால் அவரவர் வழிபடும் இடங்கள் முழு சுதந்திரத்துடன் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் நம்மூரில் மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தில் இருக்கிறது. இங்கே தான் கட்டிமுடிக்கப்படாத #இராமர் கோவில் திறப்புக்கு நாடு முழுவதும் விடுமுறை விடப்படுகிறது. என்னங்க சார் உங்க சட்டம்.
ஆனால் கஜகஸ்தானில் பார்த்த காட்சிகள் முற்றிலும் வேறானவை. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் அல்மாட்டி நகரின் பிரபலமான சுற்றுலா தலம் ஒரு #தேவாலையம். அதற்கு அடுத்த நிலையில் தான் அங்குள்ள #மசூதி இருக்கிறது. தேவாலயம் முதன்மை பெறக் காரணம் அதன் கலாச்சாரப் பாரம்பரியம். அங்கு மதம் அடுத்த நிலை தான்.
#Zenkovs_Cathedral எனும் Ascension Cathedral இரஷ்ய பேரரசின் காலத்தில் (1904 - 1907) கட்டப்பட்டது. கட்டிடக் கலைஞர் #Andrei_Zenkov வால் இது கட்டப்பட்டதால் அவரின் பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.
இந்த தேவாலயம் முழுவதும் மரத்தால் கோர்த்து கட்டப்பட்ட இரஷ்ய பாரம்பரிய கட்டிடக்கலையை கொண்டது. மரத்தால் கட்டப்பட்ட உயரமான தேவாலயங்களில் இது முதன்மையானதும் கூட. பனி சூழ்ந்த பகலில் அதன் அழகு சொற்களால் சொல்ல இயலாது. தேவாலயத்தின் உள்ளே எத்தனை எத்தனை வண்ணங்கள். பெரும் பெரும் சுவர் ஓவியங்களும், கண்ணாடி ஓவியங்களும், நேர்த்தியான வடிவமைப்புகளும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இதன் கட்டுமானம் பூகம்பத்தை தாங்கும் வகையில் தனித்துவமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஒரு முறை அந்நகரத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலும் உயிர் பிழைத்து இன்றும் அதே கம்பீரத்தோடு நிற்கிறது தேவாலயம். இந்த ஆலயம் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாக உள்ளது.
அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அவ்வூரின் பெரிய மசூதி. 1999ல் தான் கட்டப்பட்டுள்ளது. தேவாலயத்தை விட பிரம்மாண்டமாக புதிய தொழில் நுட்பத்தோடு கட்டியிருக்கலாம். ஆனால் அப்படி கட்டவில்லை. ஒப்பீட்டளவில் அந்த தேவாலயத்தை விட மசூதி சிறிய அளவிலேயே கட்டப்பட்டுள்ளது. அதோடு அதன் கட்டுமானமும் இஸ்லாமியர்களின் நிதி உதவியால் கட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள நாட்டில் பார்க்கும் இடமெங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. யார் #கிறிஸ்தவர், யார் #இஸ்லாமியர் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கலந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லா குடிமக்களும் தங்கள் மதச்சார்பின்மையை அறிவிக்கலாம், நாத்திகர்களாக பதிவு செய்து கொள்ளலாம் எனும் வாய்ப்புகளும் உள்ளது. இதுவெல்லாம் அந்நாட்டில் எப்படி சாத்தியமானது. ஒன்றே ஒன்று தான். அது சோவியத் அந்நாட்டிற்கு கொடுத்த கொடை. அதன் மூலம் பரவலாக்கப்பட்ட கல்வி அதில் முக்கியப் பங்கு வகித்தது. கல்வி வந்தால் #சாதி, #மதம் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கும்.
#அல்மாட்டி நகரில் மட்டும் 7000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். அதில் 95% வட இந்திய மாநிலத்தவர். நம்மை விட GDPயில் குறைந்த நாடு, ஆனால் அங்கே கல்விக்கு அவ்வளவு வாய்ப்பு. ஆனால் நம்மூர் GDP சதவிகித அடிப்படையில் மிக அதிகம். ஆனால் அது அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் தான் பெரிய வாய்ப்பாக உள்ளது.
இங்கே என்ன நடக்கிறது? பல லட்சம் கோடிகள் நகர் மேம்பாட்டிற்கு கொட்டப்பட்டு, தனி விமான நிலையம் வரை கட்டப்பட்டுள்ள #அயோத்தியில் இன்று வரை ஒரு நல்ல மருத்துவமனை கூட கிடையாது. உடல் நிலை சரியில்லை என்றால் #லக்னோ செல்லவேண்டும் என்று அம்மக்கள் சொல்கிறார்கள். நல்ல பள்ளிக்கூடமோ, ஒரு மருத்துவக்கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ எதுவும் கிடையாது. படித்தால் நீ எப்படி மசூதியை இடிக்க வருவ... அங்கே எப்படி கோவில் கட்ட வருவ... என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது இன்றைய இந்தியாவின் நிலை
No comments:
Post a Comment