*நாளொரு கேள்வி: 04.01.2024*
தொடர் எண் : *1314*
இன்று நம்மோடு தீக்கதிர் கட்டுரையாளர் *மதுக்கூர் இராமலிங்கம்*
#############################
*காவிரியையே திகைக்க வைத்த பிரதமரின் பாச வெள்ளம்*
கேள்வி: திருச்சி வந்த பிரதமர் "புதியதோர் உலகம் செய்வோம்" என்ற பாரதிதாசன் பாடலை குறிப்பிட்டு பேசி இருக்கிறாரே?
*மதுக்கூர் இராமலிங்கம்*
பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாசமழை பொழியத் துவங்கிவிடுவார். தேர்தல் நெருங்குவதால் பாசமழை பெருவெள்ளமாக பாய்ந்து, காவிரியே திகைத்துப் போகும் அளவிற்கு திருச்சியில் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் பேசிவிட்டு போயிருக்கிறார் மோடிஜி.
ஆனால் தில்லிக்கு விமானம் ஏறியவுடனேயே இந்த பாசம் வடிந்து பாசி பிடித்துவிடும். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசும் போது, இந்த பல்கலையின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற முதல் பிரதமர் நான் தான் என்று கூறி யுள்ளார். இதற்காகத்தான் ஆர்.என்.ரவி பல மாதங்க ளாக பட்டமளிப்பு விழாவிற்கு அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பது இப்போதுதான் புரிகிறது. படித்து முடித்து பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் பெரும் போராட்டங்களை நடத்தினர் என்பதை பிரதமருக்கு யாராவது சொல்லியிருந்தால் நல்லது.
இந்த விழாவில் பேசும் போது, ‘புதியதோர் உலகம் செய்வோம்’ என்ற பாவேந்தரின் பாட்டு வரிகளை பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார். இதன் அடுத்தடுத்த வரிகளை யாரும் அவருக்கு எழுதி கொடுக்கவில்லை போலிருக்கிறது. புதியதோர் உலகம் செய்வோம் - கெட்டப் போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்பது அடுத்த வரி. இன்றைக்கு பாலஸ்தீன மக்க ளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திக் கொண்டிருப்பது கெட்ட போர். ஆனால் அமெரிக்காவுக்குச் சாதகமான அயல்துறை கொள்கையை மோடி அரசு பின்பற்றுவ தால் இஸ்ரேலின் இனவெறிப் போரை வெளிப்படை யாக கண்டிக்கக் கூட இவரது அரசு தயங்குகிறது.
பொதுவுடமை கொள்கை திசையெட்டும் சேர்ப் போம். புனிதமோடதை எங்கள் உயிரென்று காப்போம் - என்பது அடுத்தடுத்து வரும் வரிகள். வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ் அமைப்பால் உருவாக்கப் பட்ட பிரதமர் இந்த வரிகளை தவிர்த்ததில் வியப் பில்லை.
‘நல்லவர் நாட்டினை வல்லவர் தாழ்த்திடும் நச்சு மனப்பான்மை - தொல்புவிமேல் விழும் பேரிடியாம் அது தூய்மைதனைப் போக்கும்’ என்றும் பாவேந்தர் பாடியுள்ளதை இவரது பத்தாண்டுகால ஆட்சியோடு பொருத்திப் பார்க்க முடியும்.
பாவேந்தர் பாண்டியன் பரிசு நூலில் ‘இருட்ட றையில் உள்ளதடா உலகம் - சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே’! மருட்டுகின்ற மதத் தலைவர் வாழ்கின்றாரே! வாயடியும், கையடியும் மறைவதென்னாள், சுருட்டுகின்றார் தம் கையில் கிடைத்தவற்றைச் சொத்தெல்லாம் தமக்கென்று சொல்வார்தம்மை வெருட்டுவது பகுத்தறிவு’- என்று பாடியுள்ளதையும் பிரதமருக்கு யாராவது அவரது தாய்மொழியான குஜராத் மொழியிலோ அல்லது சமஸ்கிருதம் அல்லது இந்தியிலோ மொழிபெயர்த்து கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment