சற்றே நீண்ட கட்டுரை. ஆனால் மிகவும் முக்கியமான அருமையான கட்டுரை. அவசியம் முழுமையாக படியுங்கள்.
*காஷ்மீரை இந்தியாவோடு இணைத்த கம்யூனிஸ்டுகள்* - களப்பிரன்
(நன்றி : *தீக்கதிர் 05.01.2024* )
ஜம்மு - காஷ்மீருக்கான 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. “370-வது சட்டப்பிரிவு ஒரு தற்காலிக ஏற்பாடு தான். ஜம்மு - காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த பகுதி என்பதால் அதற்கு தனி இறையாண்மை கிடையாது” என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
காஷ்மீர் மக்கள் தொகையில் இஸ்லாமியர்களே மிகப்பெரும்பான்மை. ஆனால் அங்குள்ள மக்கள் எப்படி பாகிஸ்தானை விடுத்து இந்தியாவோடு சேர விரும்பினர்? அதற்கு முக்கியமான காரணம் மக்கள் தலைவர் ஷேக் அப்துல்லா என்றால், இன்னொரு முக்கியக் காரணம் அவரைக் கவர்ந்த மார்க்சிய சித்தாந்தமும் சோவியத் ஒன்றியம் மீதான அவரின் நேசமும் தான்.
*ஷேக் அப்துல்லாவின் முழக்கம்*
மன்னராட்சிக்கு எதிராக தேசிய மாநாட்டுக் கட்சியின் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட “நயா காஷ்மீர்” என்கிற அரசியல் செயல்திட்டத்தில் ஷேக் அப்துல்லா இவ்வாறு கூறுகிறார்:
“நாம் வாழும் காலத்தில், சோவியத் ரஷ்யா நம் கண்களுக்கு முன்பாக, கோட்பாட்டு ரீதியாக மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்விலும் நிரூபிக்கிற உண்மையாக இருக்கிறது. உண்மையான சுதந்திரம் பொருளாதார விடுதலையிலிருந்து மட்டுமே பிறக்கும் என்பது தான் சோவியத் நமக்குச் சொல்லும் செய்தி ஆகும். காஷ்மீர் அப்படியான ஒரு பொருளாதார விடுதலை கொண்ட மண்ணாக மாற்றப்பட வேண்டும்” என்று முழங்குகிறார்.
*கம்யூனிஸ்டுகளின் பங்கு*
அப்படி அவர் சொன்னதற்குக் காரணம் சோவியத் மட்டுமல்ல; சோவியத் சித்தாந்தத்தை காஷ்மீருக்குள் கொண்டு வந்து சேர்த்த கம்யூனிஸ்ட்டுகளும் ஒரு காரணம் ஆகும். அந்தக் கம்யூனிஸ்டுகளே இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள காஷ்மீர் பகுதியை இந்தியாவோடு இணக்கமான முறையில் இணைவதற்கு அடிப்படைக் காரணமானார்கள். இந்தியாவில் அன்றைக்கு இருந்த ஆளும் கட்சியினர் யாரையும்விட, காஷ்மீர் இணைப்பில் அன்றைய கம்யூனிஸ்டுகளின் பங்கு மகத்தான ஒன்றாகும்.
*புரட்சியைக் கனவு கண்ட பூமி*
1917ஆம் ஆண்டு எழுந்த சோவியத் புரட்சி, உலகம் முழுவதும் தங்கள் நாட்டு விடுதலைக்காக போராடும் கோடானுகோடி போராளிகளை சுண்டி இழுத்தது. இந்திய விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருந்த பலரையும் சோவியத் புரட்சி ஈர்த்தது. இந்தியாவிலிருந்து கிலாபத் இயக்கத்தில் கலந்துகொண்டு பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட பல நூறு இளைஞர்கள் புறப்பட்ட போது, அதிலிருந்த ஒரு குறிப்பிட்ட இளைஞர்கள் குழு சோவியத் புரட்சியால் ஈர்க்கப்பட்டு அன்றைய இந்திய எல்லையான பெஷாவர் வழியாக ஆப்கனுக்குள் நுழைந்து, உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் வழியாக நடந்தே ரஷ்யா வரை சென்றது. அப்படிச் சென்ற தனது பயண அனுபவத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் சௌக்கத் உஸ்மானி, “ஒரு புரட்சியாளனின் பயணங்கள்” என்று நூலாக எழுதியுள்ளார். உலகம் முழுவதிலும் இருந்த பல்லாயிரம் போராளி இளைஞர்கள் தங்களின் புனிதத்தலம் போல ரஷ்யாவைப் பார்த்தனர். இந்தியாவில் அப்படிப்பட்ட ஒரு சோவியத்தை உருவாக்க இந்தியாவின் பல பகுதிகளில் கனவு கண்டார்கள். அந்தக் கனவை நனவாக்கும் முதல் பூமியாக இந்தியாவின் வடக்குக் கோடியில் இருந்த ஒரு மண் முந்திக்கொண்டு வந்தது. அதன் பெயர் ஜம்மு - காஷ்மீர்.
*வலதுசாரிகளின் கதறல்*
“காஷ்மீரை சோசலிச சித்தாந்தத்திற்கான ஆய்வகமாக நாங்கள் பார்த்தோம்” என்று மூத்த கம்யூனிஸ்ட் சித்தாந்தவாதியும் எழுத்தாளருமான கே.ஏ.அப்பாஸ் 1984ல் காஷ்மீரி எழுத்தாளர் இசட்.ஜி.முகமதுக்கு அளித்த பேட்டியில் சொல்லி இருக்கிறார். அதன் போக்குகள் எந்த அளவிற்கு இருந்தது என்றால், வலதுசாரிகள் கதறும் அளவிற்கு இருந்தது. காஷ்மீரில் நிகழும் புரட்சிகர மாற்றத்தைக் கண்டு அவர்கள் அச்சப்பட்டனர். “காஷ்மீரில் சிவப்பு அச்சுறுத்தல்” என்று துண்டுப்பிரசுரம் வெளியிட்டிருக்கிறார்கள். “காஷ்மீருக்குள் ரஷ்யாவை உருவாக்க நினைக்கிறார்கள்” என்று புலம்பியதோடு, 1940களிலேயே பிரிட்டிஷ் அரசுக்கு புகார் மேல் புகார் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அப்போது காஷ்மீர் மன்னராட்சியின் கீழ் தான் இருந்தது. பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
*தேசிய மாநாட்டுக் கட்சியில் கம்யூனிஸ்ட்டுகள்*
“Jammu & Kashmir, State and Society: Comm unist Movement
in Kashmir” என்கிற நூலில் கிடைக்கும் தகவல்கள் இன்னும் ஆச்சரியமானவை. கம்யூனிஸ்டுகள் 1936 முதலே காஷ்மீரில் வேலை செய்யத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சியில் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஷேக் அப்துல்லா தமது தேசிய மாநாட்டுக் கட்சியை முதலில் இஸ்லாமிய கட்சியாகத் தான் தொடங்கி இருக்கிறார். கம்யூனிஸ்டுகளுடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாகவே, பின்னாளில் அது மதச்சார்பற்ற கட்சியானது. இன்னும் சில கம்யூனிஸ்டுகள் அக்கட்சியின் பொறுப்புகளிலும் இருந்திருக்கின்றனர். கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.பி.எல்.பேடி, கே.எம்.அஷ்ரப், ஃபசல் இலாஹி குர்பான், அஜய் கோஷ் மற்றும் பலர் கம்யூனிஸ்ட் கட்சிப் பணிகளுக்காக காஷ்மீருக்கு அடிக்கடி வருகை தந்துள்ளனர். கே.எம்.அஷ்ரப் 1937இல் காஷ்மீருக்குச் சென்று நேரு பூங்காவில் ”மாணவர் அமைப்பு” ஒன்றை தொடங்கியிருக்கிறார். அதை மார்க்சிய புத்தகங்களை வாசிக்கும் மையமாக மாற்றி யிருக்கிறார்.
*பாசிச எதிர்ப்புப் பள்ளி*
1942ஆம் ஆண்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநாட்டில் ஜி.எம்.சாதிக் என்கிற மாணவர் காஷ்மீர் மாநிலத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டிருக்கிறார். அந்த மாநாட்டைத் தொடர்ந்து 1942ல் கம்யூனிஸ்ட் தலைவர் ஃபசல் இலாஹி குர்பான் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது அங்கிருக்கும் இளைஞர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் படிப்பு வட்டம் மற்றும் பாசிச எதிர்ப்புப் பள்ளி ஆகியவற்றை தால் ஏரியில் இருக்கும் படகுவீடு ஒன்றில் தொடங்கியிருக்கிறார். அந்தக் கால கட்டத்தில் ஹிட்லர் மூலம் உருவாகியிருந்த பாசிசத்தைக் கண்டு உலகமே அஞ்சிக்கொண்டிருந்த போது பாசிச எதிர்ப்புப் பள்ளி என்பதெல்லாம் கம்யூனிஸ்டுகளின் நிலத்தில் தான் சாத்தியம். அதோடு மார்க்சியக் கல்வியை கற்பதற்கான பணிகளையும் ஸ்ரீநகரில் திட்டமிட்டுக் கொடுத்துள்ளார்கள். புகழ் பெற்ற காஷ்மீரி மார்க்சிஸ்ட் தோழர் என்.என்.ரெய்னா, காஷ்மீரில் “நியூ காஷ்மீர் புக் ஷாப்” என்கிற பெயரில் கம்யூனிஸ்ட் புத்தகக் கடை ஒன்றைத் தொடங்கி நடத்தியுள்ளார். அதே போல் “ஆசாத்” என்ற கம்யூனிஸ்ட் பத்திரிகையையும் காஷ்மீரில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
*காஷ்மீரின் செஞ்சதுக்கம்*
இவற்றின் தொடர்ச்சியாகத்தான் ஷேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, காஷ்மீருக்கான எதிர்கால அரசியல் திட்டம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்தது. அதற்கு “நயா காஷ்மீர்” (புதிய காஷ்மீர்) என்று பெயரும் சூட்டப்பட்டது.
“நயா காஷ்மீர்” என்கிற யோசனை கூட, கே.எம்.அஷ்ரஃப் சோவியத் நாட்டிலிருந்து ஸ்ரீநகருக்கு வந்தபோது தான் உருவானதாக வரலாறு சொல்கிறது. காஷ்மீர் நகருக்குள் இன்றைக்கு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக இருக்கும் “லால் சவுக்” என்கிற இடம் கூட தோழர்களாலேயே பெயர் சூட்டப்படுகிறது. லால் என்றால் சிகப்பு, சவுக் என்றால் சதுக்கம். மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கம் போல காஷ்மீரில் உள்ள செஞ்சதுக்கம் என்று அவ்விடத்திற்கு பெயர் வைத்தனர். (1948ல் காஷ்மீர்- இந்தியா இணைப்பு, பாகிஸ்தான் போர் எல்லாம் முடிந்த சூழலில் அந்த லால்சவுக்கில் தான் இந்தியப் பிரதமர் நேரு தேசியக் கொடி ஏற்றி உரைநிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.) மன்னராட்சி நடந்துகொண்டிருந்த அந்தக் காலத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்களான பி.பி.எல் பேடியும் அவரது இணையர் ஃப்ரிதா பேடியும் இணைந்து “நயா காஷ்மீர்” திட்டத்திற்கான வரைவை உருவாக்கினர். அதை 1946ல் நடைபெற்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் மாநாட்டில் முன்வைத்து விவாதித்து நிறைவேற்றினர். பேராசிரியர் மன்சூர் ஃபாசிலி தனது
“Socialist Ideas and movement in Kashmir” என்கிற நூலில் “நயா காஷ்மீர், திட்டம் சாராம்சத்திலும் உள்ளடக்கத்திலும் சோசலிசமாக இருந்தது” என்று சொல்கிறார்.
ஆனால் தீவிர வலதுசாரிகளோ “நயா காஷ்மீர் கம்யூனிச சிந்தனைகளை கொண்டிருக்கிறது. இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தை கம்யூனிஸ்ட் மாநிலமாக மாற்ற கம்யூனிஸ்டுகள் திட்டம் தீட்டுகிறார்கள்” என்று பிரிட்டிஷ் அரசிற்கு புகார் தெரிவித்தனர்.
*ஷேக் அப்துல்லா கைது ஏன்?*
“நயா காஷ்மீர்” திட்டம் வெளிவந்த பிறகு, 1946ல் ஷேக் அப்துல்லாவின் போராட்ட இயக்கத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாக ஆதரவு தெரிவித்தது. ஷேக் அப்துல்லா, புகழ் பெற்ற கம்யூனிஸ்டுகளை காஷ்மீருக்கு வரும்படி தொடர்ந்து அழைப்பு விடுத்தார். ஒருமுறை இந்திய கம்யூனிஸ்டுகளுக்கு வழிகாட்ட இந்தியா வந்திருந்த பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ரஜனி பாமிதத் அவர்களை, காஷ்மீருக்கு வரும்படி ஷேக் அப்துல்லா அழைப்பு விடுத்தார். அவரும் காஷ்மீருக்கு வந்ததோடு, “எந்தவொரு இந்திய மாநிலத்திலும் இல்லாத வலிமையான போர்க் குணமிக்க .தலைவர் ஷேக் அப்துல்லா. மிகவும் நேர்மையான, தைரியமான ஒருவராக என்னைக் கவர்கிறார் ஷேக்” என்று பாராட்டினார். அப்போதைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் பி.சி ஜோஷி, ஷேக் அப்துல்லாவை மிகவும் பாராட்டியதோடு, காஷ்மீர் மக்களின் போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்பதாக பிரகடனம் செய்தார். அதனை ஒட்டியே ஷேக் அப்துல்லாவை மன்னர் ஹரிசிங் அரசு கைதுசெய்து தேசத் துரோக வழக்கில் மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
*காஷ்மீரைக் காத்த கம்யூனிஸ்டுகள்*
காஷ்மீரின் எந்த இக்கட்டான சூழலிலும் கூட காஷ்மீர் மன்னர் ஹரிசிங் இந்தியாவோடு இணையத் தயாராகவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவர் அப்போது வளர்ந்து கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களோடு காட்டிய நெருக்கத்தில் துளி அளவு கூட இந்திய ஆட்சியாளர்களுடன் காட்டவே இல்லை. 1947 இந்திய விடுதலைக்குப் பின்பு கூட அவர் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளோடும் சமாதான ஒப்பந்தம் ஒன்றை போட்டுக்கொண்டாரே தவிர ஒருபோதும் இந்தியாவோடு இணைய அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக ஷேக் அப்துல்லாவை விடுவிக்கக் கோரி நெருக்கடிகள் கொடுக்கப்படவே, ஷேக் அப்துல்லா 1947 செம்படர் 29 அன்று விடுதலை செய்யப்பட்டார். அப்போது பாகிஸ்தான் இராணுவத்தின் துணையோடு, காஷ்மீரில் இருந்த பழங்குடியினர் ஒரு பகுதியினர் தூண்டி விடப்பட்டனர்.
காஷ்மீரை இந்து மன்னனிடமிருந்து மீட்கும் புனிதப்போர் என்று சொல்லி அவர்களைப் பயிற்றுவித்தனர். காஷ்மீரைக் கைப்பற்றும் புனிதப் போர் என்கிற வெறியோடு வந்த படை - போர் தொடங்கி காஷ்மீருக்குள் நுழைந்து ஸ்ரீநகர் நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அப்போதும் மன்னர் ஹரிசிங் இந்தியாவோடு இணைய விரும்பவில்லை. ஒரு கட்டம் வரை தன் இராணுவத்தை வைத்து சமாளிக்கலாம் என்று நினைத்த மன்னர், அது முடியாது என்று தெரிந்தவுடன் நாட்டு மக்களை அப்படியே பரிதவிக்க விட்டுவிட்டு தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள காஷ்மீரை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார். சூழலை அறிந்த கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் படையெடுப்பின் தீவிரத்தை உணர்ந்து கொண்டு ஷேக் அப்துல்லா மூலம் இந்திய அரசை தொடர்பு கொண்டு அரசுப் பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்தது. கிட்டத்தட்ட காஷ்மீர் தன் கையைவிட்டு பறிபோய்விடும் என்கிற சூழலில் தான் இந்தியாவோடு இணைய வேறு வழியின்றி ஒப்புக்கொண்டார் மன்னர் ஹரிசிங். இந்திய இராணுவம் காஷ்மீருக்கு விரைந்தது.
ஆனால் ஸ்ரீநகரின் விமான ஓடுதளம் சிறியது என்பதால் கூடுதல் இராணுவ வீரர்களை இந்திய இராணுவத்தால் உடனடியாக அனுப்ப முடியவில்லை. நேரு என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தார்.
*மக்கள் படையின் மகத்தான போர்*
நிலைமையை உணர்ந்து கொண்ட கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், ஷேக்
அப்துல்லா தலைமையில் ஒரு தன்னார்வக் குழுவை உருவாக்கினர். இராணுவத்திற்கு இணையான மக்கள் இராணுவம் ஒன்றை உருவாக்கி, அதில் ஆர்வமுள்ள எல்லோரையும் இணைய அழைத்தனர். அதற்கு முறையான ஆயுதப் பயிற்சியும் வழங்கினர். அதில் ஆண்கள்- பெண்கள் என்று பாலின பேதம் இல்லாமல்; இந்து, முஸ்லிம், சீக்கியர் என்ற மதவேறுபாடு இல்லாமல் வலிமையான ஒரு மக்கள் படையை உருவாக்கி குறுகிய காலத்தில் தயார்ப்படுத்தினார்கள். அந்தப் படை இஸ்லாமிய பழங்குடிகளால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருந்த இந்துக்களையும் சீக்கியர்களையும் முதலில் பாதுகாத்தது. (அந்த நேரத்தில் இந்தியா வில் இஸ்லாமியர்களும், பாகிஸ்தானில் இந்துக்களும் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருந்தனர்) இந்திய இராணுவம் வந்து காப்பாற்ற முடியாத சூழலில் காஷ்மீர் மக்களைக் கொண்டு ஆயுதமேந்தி எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வழி ஏற்படுத்திக் கொடுத்த வர்கள் காஷ்மீர் கம்யூனிஸ்டுகள். இந்தியாவிலேயே முதல் பெண்கள் படைப்பிரிவு உருவாக்கப்பட்டு, அந்நிய சக்திகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற மண் காஷ்மீர் ஆகும். ஒருகட்டத்தில் ஸ்ரீநகர், பாராமுல்லா உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பழங்குடி மத அடிப்படைவாதிகள் துரத்தியடிக்கப்பட்டு பெரும்பகுதியான காஷ்மீர் மண் மீண்டும் காஷ்மீர் மக்கள் வசமானது.
*370- தேச ஒற்றுமையின் அடையாளம்*
அதன் பிறகு ஷேக் அப்துல்லா தலைமையிலான புதிய அரசு உருவாக கம்யூனிஸ்டுகள் துணை நின்றார்கள். ஷேக் அப்துல்லாவின் தலைமை ஆலோசகராக தோழர் பி.பி.எல் பேடி நியமிக்கப்பட்டார். இந்தியாவோடு காஷ்மீரை இணைப்பதற்கான அரசியல் நிர்ணய சபையில் காஷ்மீரின் புதிய அரசுப் பிரதிநிதிகளும், இந்திய ஒன்றியத்தின் பிரதிநிதிகளும் கலந்து பேசினர். அவர்கள் அமர்ந்து பேசி உருவாக்கியது தான் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டம். உண்மையில் அப்படி ஒரு சட்டம் அன்றைக்கு உருவாக்கப்பட்ட போது அதை இந்திய ஒன்றியத்தின் ஆட்சியாளர்களாக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் உள்பட எல்லோருமே, “370 சட்டப்பிரிவு தேச ஒற்றுமையின் அடையாளம்” என்று போற்றினர். இந்த சட்டப்பிரிவு தற்காலிகமானது என்கிற ஒரு வாசகம் கூட அதில் இல்லை. காஷ்மீரிகள் இந்தியாவில் இருக்கும் ஒரு தனித்த தேசிய இனம் என்றே இந்தியத் தலைவர்கள் அங்கீகரித்தனர். இப்படி ஒரு சட்டப்பிரிவு யோசனை கூட சோவியத் ஒன்றியம், அங்கிருக்கும் தேசிய இனங்களோடு செய்துகொண்ட முன்மாதிரியிலிருந்து உருவானது தான். இப்படியாக இந்தியாவோடு காஷ்மீரை இணைத்ததில் இராணுவரீதியிலும், சட்ட ரீதியிலும், மக்கள் ஆதரவை பெறுவதிலும் காஷ்மீரில் இருந்த கம்யூனிஸ்டுகளே பெரும் பங்கு வகித்தனர்.
கட்டுரையாளர்: தமுஎகச மாநில துணை பொதுச் செயலாளர்
No comments:
Post a Comment