Friday, May 2, 2014

அந்த குடிமகனின் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது இன்ஸ்பெக்டரா? அரசாங்கமா?



நேற்று முன்தினம் அலுவலகத்திலிருந்து வீடு திரும்ப இரவு பதினோரு மணிக்கு மேலாகி விட்டது. வீடு செல்லும் வழியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

நான் எனது ஆவணங்களை காண்பித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்தில் சூடான ஒரு விவாதம் நடந்து கொண்டிருந்தது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டிய ஒருவரை மடக்கி வைத்திருந்தார்கள். வாகனத்தை பறிமுதல் செய்கிறோம், காலையில் ஸ்டேஷனுக்கு வாங்க என்று அவரிடம் சொன்னார்கள். அவருடைய வாகனத்தையும் ஒரு கான்ஸ்டபிள் ஓட்ட ஆரம்பிக்க “ஐயோ அதுல பணம் இருக்கு” என்று கத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மீண்டும் அந்த வண்டியை வரவைத்து வாகனப் பெட்டியை திறந்து பார்த்தால் ஒரு கேஷ் பேக் இருந்தது. ஆனால் உள்ளேதான் பணம் எதுவும் இல்லை. அதனால் அந்த இன்ஸ்பெக்டர் மிகவும் கடுப்பாகி விட்டார்.

டாஸ்மாக் பார்ட்டி முதலில் மன்றாடியவர் பிறகு ரொம்ப கோபமாக

“ நான் மட்டும் இப்ப வண்டி இல்லாம போனா குடும்பத்துல என்னோட கௌரவமே போயிடும்”

உடனே அந்த இன்ஸ்பெக்டர் சொன்னார்

“ராத்திரி பதினொன்றரை மணிக்கு குடிச்சுட்டுப் போனா போகாத கௌரவம் வண்டியில்லாட்டா போய்டுமா?”

ஆனாலும் அவர் விடுவதாக இல்லை.

“நான் என்ன கள்ளச்சாராயமா குடிச்சேன். கவர்மெண்ட் கடை சார், அரசாங்க அனுமதியோடதான் குடிச்சேன்”

பக்கத்தில் இருந்த இன்னொரு குடிமகன் அதை விட சூப்பராக இன்னொரு கேள்வி கேட்டார்.

“குடிச்சுட்டு வண்டி ஓட்டக்கூடாதுனா எதுக்கு சார் பார் வச்சிருக்காங்க. நீங்க பார் வச்சதனாலதான நாங்க அங்க குடிக்கிறோம். இல்லேனா வீட்டுக்கே எடுத்துக்கிட்டு போயிருப்போமே. நீங்களே குடிக்க வைக்கிறீங்க, அப்புறம் மடக்கவும் மடக்கறீங்க. என்ன சார் நியாயம் இது?”

என்னுடைய ஆவண சோதனை முடிந்து விட்டதால் அதற்கு மேல் அங்கே நிற்க முடியவில்லை. ஆனாலும் அந்த குடிமகன் கேட்ட கேள்விக்கு என்ன பதில்? சொல்ல வேண்டியது அரசாங்கம்தான் என்று நினைக்கிறேன்.


5 comments:

  1. குடி மகனின் கேள்வி நியாயமானதுதான்.
    இரு சக்கர வாகனங்கள் இன்று அதிகமாக நிற்குமிடத்தைப் பார்த்தால் அது ஒரு அரசாங்க மதுபானக் கடையாகத்தான் இருக்கும்.
    அரசாங்கமே கடைகளைத் திறந்து வைத்துவிட்டு, குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்றால் எப்படி சாத்தியப்படும்.

    ReplyDelete
  2. I think we got the order wrong. குடித்து விட்டு வண்டி ஓட்டுவது ஓட்டுபவர் மட்டுமல்லாது சாலையில் பயணிக்கும் எல்லோருக்குமே ஆபத்தானது. அதனால் குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது. ஒன்று.. மதுவை வாங்கிக் கொண்டு வீட்டில் சென்று குடிக்கலாம். இல்லையேல், பாரில் குடிக்க வேண்டுமானால் குடிக்காத ஒருவர் வண்டி ஓட்ட, அதில் குடித்துவிட்டு பயணம் செய்யலாம்.
    இது ப்ராக்டிகலாக சாத்தியமா என்றால் சாத்தியமே.. உலகில் பல நாடுகளில் உள்ள சட்டங்கள் இவை தான். பார் வைத்தால் குடிப்பேன்.. குடித்து விட்டு நான் வண்டி ஓட்டினால் அது பார் வைத்தவன் குற்றம் என்றால் எப்படி?

    ReplyDelete
  3. அய்யா,

    //“நான் என்ன கள்ளச்சாராயமா குடிச்சேன். கவர்மெண்ட் கடை சார், அரசாங்க அனுமதியோடதான் குடிச்சேன்”

    பக்கத்தில் இருந்த இன்னொரு குடிமகன் அதை விட சூப்பராக இன்னொரு கேள்வி கேட்டார்.

    “குடிச்சுட்டு வண்டி ஓட்டக்கூடாதுனா எதுக்கு சார் பார் வச்சிருக்காங்க. நீங்க பார் வச்சதனாலதான நாங்க அங்க குடிக்கிறோம். இல்லேனா வீட்டுக்கே எடுத்துக்கிட்டு போயிருப்போமே. நீங்களே குடிக்க வைக்கிறீங்க, அப்புறம் மடக்கவும் மடக்கறீங்க. என்ன சார் நியாயம் இது?”//

    ஹி...ஹி பூச்சி மருந்துக்கடைக்கூடத்தான் அரசாங்க அனுமதியோட இருக்கு ,அதனால் வாங்கி குடிக்க வேண்டியது தானே?

    இல்லை பிளட் பேங் அரசாங்கம் வச்சிருக்குனு தானா போய் ரத்தம் குடுப்பாங்கலா?

    குடிக்கிறது தப்பில்லைனு கூட சொல்லலாம் ஆனால் குடிச்சிட்டு வண்டி ஓட்டுறது தான் தப்பு, ஏன்னா இந்த மூதேவி லாரியில அடிப்பட்டா படட்டும் ,ஆனால் இதுங்க ரோட்டுல நடந்துப்போறவன எல்லாம் மோதி சாவடிதுங்களே, நடந்து போறவன் என்ன தப்பு செய்தான்?

    #வண்டி ஓட்டினா சரக்கு போட மாட்டேன் ,சரக்கு போட்டா வண்டி ஓட்ட மாட்டேன் ...ஹி...ஹி அடிக்கடி வண்டி ஓட்டுறதேயில்லை , ,50 ரூவா ஆட்டோக்கு கொடுத்துட்டு போயிடுறது.

    # மணல் லோடு அடிக்கிறவங்க பெரும்பாலும் இரவு சரக்குல தான் வண்டி ஓட்டுறாங்க, கேட்டா உடம்பு வலினு சொல்லுறது,

    ReplyDelete
  4. #வண்டி ஓட்டினா சரக்கு போட மாட்டேன் ,சரக்கு போட்டா வண்டி ஓட்ட மாட்டேன் ...ஹி...ஹி அடிக்கடி வண்டி ஓட்டுறதேயில்லை , ,50 ரூவா ஆட்டோக்கு கொடுத்துட்டு போயிடுறது.#

    வவ்வால்,
    நல்ல பாலிசி. வியந்தேன்.

    ReplyDelete
  5. போக்கு வரத்து காவலர்கள் வாகன சோதனை செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். அதைவிட டாஸமார்க் வாசலிலேயே நின்று வண்டி எடுப்பவர்களை தடுக்கலாமே . எதற்கு அனாவசியமாக வீதியில் போவோர் அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் . ஏற்பட போகும் விபத்தையும் முன்னடிய தடுக்கலாமே. மாற்றி யோசிக்கலாமே .

    ReplyDelete