Thursday, May 1, 2014

தயவு செய்து மேதினம் என்று அழைக்காதீர்கள்





மேதினம் வருகிற போதெல்லாம் தமிழக தொலைக்காட்சிகள் செய்கிற அக்கிரமத்தை சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற முழக்கத்தை முன்வைத்து போராடியவர்களை முதலாளிக் கூட்டத்தின் கைப்பிள்ளைகளான காவல்துறை குண்டாந்தடி கொண்டு தாக்கியது. துப்பாக்கித் தோட்டாக்களை பரிசளித்தது. முன்னணியில் நின்ற தலைவர்களை தூக்கு மேடையேற்றியது.

சிக்காகோ நகரத்தில் ரத்தம் சிந்திய தியாகிகளின் நினைவாக உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் அன்றைய தினத்தை மேதினமாக, உழைப்பாளர் தினமாக அனுசரிக்கிறோம். எங்களின் உரிமைப் போராட்டம் தொடங்கிய நாள் என்ற உணர்வோடு போராட்டப்பாதையில் மேலும் மேலும் செல்ல உற்சாகம் பெறும் நாளாக மேதினத்தைப் பார்க்கிறோம்.

கொடியேற்றுதல், பேரணிகள், பொதுக்கூட்டங்கள் என்று இந்திய பாட்டாளி வர்க்கம் மேதினத்தை கொண்டாடுகிறது. இந்தியா மட்டுமல்ல உலகெங்கும் உள்ள தொழிலாளர்களும் கூட அப்படித்தான் கொண்டாடுகிறது. இருக்கும் உரிமைகளை தக்க வைப்போம், இன்னும் உரிமைகளை வென்றெடுப்போம் என்பதுதான் உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் மேதின முழக்கம்.

ஆனால் தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகள் மேதினத்தை கொண்டாடும் விதமோ கண்றாவியாக உள்ளது.

ராஜா ராணி, கல்யாண சமையல் சாதம், வீரம், கில்லி, சம்திங் சம்திங், இன்னும் மற்ற தொலைக்காட்சிகளில் என்ன்வென்று நான் பார்க்கவில்லை, இந்த திரைப்படங்களுக்கும் மேதினத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது? மேதின உணர்வை, மேதின வரலாற்றை, மேதினத்தின் முக்கியத்துவத்தை, உன்னதத்தை இந்த திரைப்படங்களில்  கொஞ்சமாவது வெளிப்படுத்துமா? இவற்றில் ஒன்று கூட தொழிலாளர்களின் பிரச்சினைகளையோ,  போராட்டங்களையோ பேசும் படம் அல்ல. அஜித் பிறந்தநாளை முன்னிட்டு “வீரம்” என்று சொன்னால் கூட கொஞ்சம் நேர்மை இருக்கும்.

விடுமுறையில் வீட்டில் இருப்பவர்களை குஷிப்படுத்த என்ன எழவு படங்களாவது போட்டுத் தொலையுங்கள். கோடைக் கொண்டாட்டம், விடுமுறைக் கொண்டாட்டம் என்று ஏதோதோ பெயர் வைக்கிறீர்களே, அது போல வைத்துத் தொலையுங்கள்.

தயவு செய்து மேதினம் என்று சொல்லி உழைக்கும் மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகளையும் அவர்களின் உன்னதமான நினைவைக் கொண்டாடும் உழைப்பாளி மக்களையும் கொச்சைப்படுத்தாதீர்கள். 

மேதினம் கொண்டாடிய உழைக்கும் மக்களுக்கு வாழ்த்துக்கள்


 

No comments:

Post a Comment