Monday, April 3, 2023

எல்.ஐ.சி கட்டிடத்தின் முந்தைய தீ

 


நேற்று முழுதும் தமிழ்த் தொலைக்காட்சிகள் எல்லாம் சென்னை அண்ணா சாலை எல்.ஐ.சி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தை வைத்து பொழுதை ஒப்பேற்றி விட்டார்கள். பெரிய பாதிப்பு  இல்லாதது மனதுக்கு நிறைவு.

எல்.ஐ.சி கட்டிடம் இதற்கு முன்பும் ஒரு மிகப் பெரிய தீ விபத்தை 1975 ல் கண்டுள்ளது. தொலைக்காட்சிகள் இல்லாததால்  நாளிதழ்களில் வந்த செய்திகள்தான். உயரமான கட்டிடங்களில் தீ பிடித்தால் அணைப்பதற்கான உபகரணங்கள் நம்மிடம் கிடையாது என்ற பலவீனமும் அப்போதுதான் தெரிய வந்தது. “ஸ்னார்க்கல்” என்றொரு இயந்திரம் வாங்கப் பட்டுள்ளது என்று பிறகு செய்திகள் வந்தன.  "நீயா?" திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் கூட அந்த இயந்திரம் வரும்.

“இனிமேல் ஆங்கிலத்தில் 23 எழுத்துக்கள்தான்.

 ஏன்?

 அதான் எல்.ஐ.சி எரிஞ்சு போச்சே”

 போன்ற மொக்கை ஜோக்குகளை படித்ததும் நினைவுக்கு வந்தது.

 நான் இங்கே பகிர்ந்து கொள்ளப் போவது வேறு விஷயம்.



 எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளராக இருந்தவரும் நான் ஆசானாக மதிப்பவருமான தோழர் கே.நடராஜன் அவர்களை சில மாதங்கள் முன்பாக பெங்களூரில் அவரது வீட்டில் சந்தித்து பேசிக் கொண்டிருந்த போது எல்.ஐ.சி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்து பற்றியும் பேச்சு வந்தது.

 அவர் கூறியதை அப்படியே பகிர்ந்து கொள்கிறேன்.

 “நானும் தோழர் ராஜப்பா(சமீபத்தில் மறைந்த தலைவர், தென் மண்டலப் பொதுச்செயலாளராக, அகில இந்திய துணைத் தலைவராக இருந்த தோழர்) வும் அன்று பாண்டிச்சேரியில் ஒரு கூட்டத்திற்காக போயிருந்தோம். தகவல் கிடைத்ததும் சென்னை வந்த பிறகு நேரே எல்.ஐ.சி கட்டிடத்திற்குத்தான் சென்றோம்.

 மின் கசிவு காரணமாக முதல் மாடியில் ஏற்பட்ட தீ, மற்ற மாடிகளுக்கும் பரவி இருந்தது. அப்போது எல்.ஐ.சி கட்டிடத்தின் இரண்டு தளங்களில் ஹிந்துஸ்தான் லீவர் கம்பெனி வாடகைக்கு இருந்தது. அவர்களுடைய வனஸ்பதி பிராண்டான “டால்டா” வை அங்கே ஸ்டாக் வைத்திருந்தார்கள். நெருப்பு கொழுந்து விட்டு எரிய அது ஒரு முக்கியமான காரணம்.

 தீ விபத்து நடந்த மறு நாளே அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் சரோஜ் சவுத்ரி கல்கத்தாவிலிருந்து விமானத்தை பிடித்து சென்னை வந்தார். எல்.ஐ.சி யின் உயரதிகாரிகள் யாரும் கூட அப்போது சென்னை வரவில்லை.

 தோழர் சரோஜ் சவுத்ரி உடனடியாக ஊழியர் கூட்டத்தை நடத்தச் சொல்லி உரையாற்றினார். ஒரு பள்ளி வளாகத்தில்  பணிகளை தொடர்வதற்கான ஏற்பாடுகள் சங்கத்தின் முன் முயற்சியால் நடந்து கொண்டிருந்தது.

 “பாலிசிதாரகளுக்கான சேவையில் எவ்வித பாதிப்பும் இருக்கக் கூடாது. விபத்தில் எரிந்து போன ஆவணங்களை மீண்டும் உருவாக்குவதில் ஊழியர்கள் தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். எப்படிப்பட்ட அசௌகர்யங்கள் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் ஊழியர்கள் பணி செய்ய வேண்டும். இதுதான் இப்போது நமக்கு முன்னுரிமை”

 என்று தோழர் சரோஜ் வலியுறுத்திப் பேசினார். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. குறுகிய காலத்திலேயே இயல்பான வேலைகள் நடக்க ஆரம்பித்தது. ஒரு தொழிற்சங்கம் நிறுவனத்தின் வளர்ச்சியில் எவ்வாறு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான உதாரணமாக தோழர் சரோஜ் அவர்களின் உடனடி வருகையும் உரையும் ஊழியர்களின் பணியை ஊக்குவிப்பதாக அமைந்திருந்ததும்  அதற்கேற்றார்போல்  அவர்கள் வேகமாகவும் பொறுப்பாகவும் பணியாற்றியதையும் சொல்லலாம்.”

 நல்ல வேளை, இந்த முறை ஆவணங்களுக்கு பாதிப்பு இல்லை.

No comments:

Post a Comment