மாநில மனித உரிமை ஆணையத்துக்கு நான் அனுப்பிய மின்னஞ்சல் கீழே உள்ளது. அனைத்தும் விபரமாக உள்ளது. நான் அனுப்பியது போல நீங்களும் shrc.tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மாநில முதல்வர் ஆளுனருக்கு எதிராக பேசுகிறார். சட்டப்பேரவையில் தீர்மானம் போடுகிறார். ஆனால் மாநில காவல்துறை ஆட்டுத்தாடிக்கு காவடி எடுக்கிறது.
இதென்ன முரண்பாடு!
*பெறுநர்*
மாநில மனித உரிமைகள் ஆணையம்
திருவரங்கம்,
143, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை,
(கிரீன்வேஸ் சாலை),
சென்னை 600 028, தமிழ்நாடு.
அய்யா
பொருள் : *தஞ்சை தமிழ் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் SFI மாநில தலைவர் அரவிந்தசாமியை தன்னுடைய பட்டத்தை பெறவிடாமல் இழுத்துச் சென்று தனியறையில் பூட்டி விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு மற்றும் மனித உரிமை மீறல் உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க கோருதல் தொடர்பாக*
வணக்கம்.
இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில குழு தலைவர் கோ.அரவிந்தசாமி, 27 வயதுடைய இவர் தன்னுடைய ஆய்வில் நிறைஞர் (M.Phil) படிப்பை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 2021 ஆம் ஆண்டு முடித்தார். அதற்கான பட்டமளிப்பு விழா 24/04/23 (திங்கள்கிழமை) அன்று பல்கலைக்கழக கரிகால சோழன் பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவிற்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்த அனைத்து மாணவர்களும், காலை 8 மணிக்குள் அரங்கத்திற்குள் வரவேண்டும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்திருந்தது.
இதனை அடுத்து 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் அரவிந்தசாமியும் நீல நிற சட்டையும் வெள்ளை நிற கால் சட்டையும் அணிந்து கொண்டு சக மாணவராக பங்கேற்றார். காலை 9:35 மணியளவில் எஸ்பி திரு ஆசிஸ்ரேவத் அவர்களின் எஸ்.பி.சி.ஐ.டி உளவு பிரிவைசார்ந்த ஐந்து காவலர்கள் (நேரில் அவர் பார்த்தால் அடையாளம் கூடிய) அவரது பெயரை விசாரித்து தலைமுடி சட்டைப்பை அனைத்தையும் சோதனை செய்துவிட்டு சென்றனர். பிறகு 9:40 மணியளவில் மீண்டும் அதே எஸ்.பி.சி.ஐ.டியின் உளவு பிரிவைசார்ந்த வேறு 5 காவலர்கள் அவரது கை குட்டையை எடுத்து உதற சொல்லி முதுகு பக்கம் இடுப்பில் எல்லாம் சோதனை செய்துவிட்டு சென்றனர்.
பிறகு மண்டல சரக டிஐஜி திரு ஜெயச்சந்திரன் காவல் அதிகாரியின் தனிப்பிரிவு காவல் துறையினர் கும்பலாக (நேரில் அவர் அடையாளம் செய்யக்கூடிய) வந்து அவரை வலுகட்டாயமாக வெளியே இழுத்துச் சென்று மின்சாரம் இயந்திரம் வைத்திருக்கும் *மின்சார அறையின் உள்ளே வைத்து பூட்டி சோதனை என்ற பெயரில் அவர் அணிந்திருந்த பட்டமளிப்பு விழா அங்கி கோட்டை கழட்டச் சொல்லி பிறகு சட்டை கழற்றச் சொல்லி பேண்டை முழங்கால் வரை இறக்கச் சொல்லித் அவரது உள்ளாடைகள் எல்லாம் தூக்கி சோதனை என்ற பெயரில் அரை நிர்வாணப்படுத்தினர். கருப்பு உள்ளாடையும் கருப்பு மேல் பனியனும் அணிந்திருந்ததால் அதைப் பார்த்தும் அதையும் கழற்றச் சொல்லி இருக்கின்றனர். கடும் அதிர்ச்சியுற்ற அவர் இதற்கு மேலும் முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டதனால் விட்டுச் சென்றனர், பிறகு மேலும் தொடை மற்றும் பின்புறம் அனைத்து இடங்களிலும் கையை வைத்து அழுத்தி அநாகரிகமான முறையில் சோதனை என்ற பெயரில் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். எவ்வளவு முறையிட்டும் இத்தகைய சோதனையைத் தொடர்ந்து நடத்தினர்.*
பிறகு அதே மின்சார அறைக்குள் அமர வைத்துவிட்டு காவல் துறையினர் வெளியே காவலுக்கு நின்றனர். பட்டமளிப்பு விழா நிறைவடைந்து வெளியே செல்லும் சக மாணவர்கள் மற்றும் நண்பர்கள் அவரைப் பார்த்து 'தோழர் என்ன ஆச்சு??'' என்று விசாரித்த போது ''தோழர்'' என்று அழைத்த மாணவர்களையும் பிடித்து ''உனக்கும் அரவிந்திற்கும் என்ன தொடர்பு? நீ யார்? என்ன?'' என்ற விசாரணையை நடத்தினர். பிறகு மாணவர்கள் அனைவரும் அங்கிருந்து அஞ்சி கலைந்து சென்றனர். பிறகு மண்டல சரக காவல் அதிகாரிகளின் தனிப்பிரிவு காவல்துறை தஞ்சைநகர காவல் நிலைய காவலர்களிடம் அவரை ஒப்படைத்துவிட்டு அவர்கள் சென்றனர். *தஞ்சை நகர் காவலர்கள் அவர்களது வாகனத்தில் அழைத்துச் சென்று ஒரு மணி நேரம் தஞ்சை பகுதியில் சுற்றி பிறகு ஒரு மணிக்கு மேல் பல்கலைக்கழக கட்டிடத்திற்குள் அதேபோல் காவல்துறைக்கு மத்தியில் அமர வைத்திருந்தனர், சிறுநீர் கழிக்க கழிவறைக்கு சென்றால் கூட மூன்று காவலர்கள் அவரது அருகே அனுப்பி சிறுநீர்கழிக்கும் வரை அருகிலேயே இருந்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்.*
இப்படி விசாரணை என்ற பெயரில் தனக்கு நேர்ந்த கொடுமைகளும் இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்க விடாமல் மனரீதியாக மன உளைச்சலுக்கு ஏற்படுத்தி அவரை மட்டுமல்லாமல் அவரோடு வந்த உறவினர்கள், குடும்பத்தினர்கள் அனைவருக்கும் பெரும் மன உளைச்சளை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட ஐஜி, டிஐஜி, எஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட காவல் அதிகாரிகள், தஞ்சாவூர் காவலர்கள் மீது உடனடியாக மனித உரிமை மீறல் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்ட பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இப்படிக்கு,
எஸ்.ராமன், வேலூர்
ஐயா , பதிவு எழுதிய தோழரையும் அழைத்து சென்று கவனிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.
ReplyDeleteயாருப்பா நீ?
Delete