சுகமான சுமைதான் இது
இரண்டு மூன்று நாட்களாக பல தோழர்கள் கேட்ட கேள்வி “வேலூர்
புத்தக விழாவுக்கு போனீர்களா?””
சில சொந்த வேலைகள், தொழிற்சங்கப்பணிகள் காரணமாக நாளை, நாளை
என்று தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்து சனிக்கிழமையன்றுதான்
சென்றேன்.
சென்னை புத்தக விழாவில் பத்தில் ஒரு பகுதிதான். அதனால் சில நூல்களை மட்டுமே வாங்கினேன். மார்ச்
மாதம் வருமான வரி மாதமல்லவா! ஆனால் வேறு ஒரு நிறைவு கிடைத்தது. அது நாளை.
புத்தக விழாக்களுக்கு செல்லும் பழக்கம் எப்படி, எப்போது
வந்தது?
2006 ம் வருடம் வேலூர் கலை மன்றம் என்றொரு அமைப்பு வேலூர்
நகரத்து தொழிற்சங்கங்களால் அமைக்கப்பட்டது. (இப்போது அந்த அமைப்பு இல்லை என்பது
வேறு விஷயம்) அதன் சார்பில் கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி நடத்தலாம் என்று அவரைப்
பார்க்க சென்னை சென்றோம். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவராக
இருந்த தோழர் கே.கங்காதரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள்
சங்கத்தின் வேலூர் மாவட்டத்தலைவர் தோழர்
கவிஞர் முகில் ஆகியோருடன் சென்றிருந்தோம்.
சென்ற வேலை முடிந்ததும் புத்தக விழாவுக்கு போகலாம் என்று தோழர்
முகில் சொல்ல கார் காயிதே மில்லத் கல்லூரிக்குச் சென்றது. அந்த வருடம் சுஜாதாவின்
‘கனவுத் தொழிற்சாலை” தவிர பெரிதாக எதுவும் புத்தகம் வாங்கவில்லை. ஆனால் வேறு ஒரு
முக்கியமான ஒன்று அங்கே கிடைத்தது. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்
“கம்பன்” மென் பொருள் அப்போதுதான் வாங்கினேன். சங்கச் சுற்றறிக்கைகளை தமிழில் தட்டச்சு
செய்ய சரியானவர்கள் கிடைக்காமல் நான் திண்டாடிக் கொண்டிருந்த நேரம் அது. கம்பன்
எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வரம். இப்போது “அழகி” கொடுக்கும் ஆதரவில் தமிழில்
தட்டச்சு தொடர்கிறது. இன்னமும் அலைபேசியில் தமிழில் தட்டச்சு செய்ய சிரமமாகத்தான்
உள்ளது.
அதற்கடுத்த வருடம் ஒரு சொந்த வேலையாக சென்னைக்கு காரில் சென்று
வருகையில் பச்சையப்பன் கல்லூரி வழியாக செல்கையில் எதிரில் இருந்த பள்ளியில் புத்தக
விழா நடந்து கொண்டிருந்தது. யூ டர்ன் போட்டு அங்கே சென்றேன். ஒரு பத்து
புத்தகங்கள் வாங்கியிருப்பேன். அதற்கடுத்து இரண்டாண்டுகள் புத்தக விழாவுக்கென்றே
பேருந்தில் சென்று கோயம்பேட்டிலிருந்து நேரே புத்தக விழா மைதானம், அங்கிருந்து
கோயம்பேடு என்று சென்றேன். அதன் பின்பு ஒவ்வொரு வருடமும் செல்வது வழக்கமாகி
விட்டது.
செகண்ட் ஹாண்டில் கார் வாங்கியது சென்னையில்தான். காரை
வாங்கியதும் முதலில் சென்ற இடம் சென்னை புத்தக விழாதான். ஒரு வருடம் நாக்பூரில்
அகில இந்திய மாநாடு. இரவு பத்து மணிக்கு ரயில். தோழர்களோடு காரில் சென்று புத்தக
விழாவில் புத்தகங்களை வாங்கி பயணத்துக்கான புத்தகங்களை மட்டும் எடுத்துக் கொண்டு
மற்றவற்றை காரிலேயே வீட்டிற்கு அனுப்பினேன்.
என் மகன் சென்னையில் பணியாற்றிய காலத்தில் அவன் வேலூருக்கு
வரும் நாளன்று மதியம் விடுப்பு போட்டு விட்டு புத்தக விழாவிற்கு சென்று
புத்தகங்களை வாங்கிக் கொண்டு அவனையும் அழைத்துக் கொண்டு வேலூர் திரும்புவேன்.
இப்போதெல்லாம் வாங்க வேண்டிய புத்தகங்களை முடிவு செய்து அரங்க
எண்களையும் எக்ஸெல் ஷீட் போட்டு எடுத்துக் கொண்டு செல்வது வசதியாக உள்ளது. வாங்கிய
புத்தகங்களை சுமந்து கொண்டு அலைவதுதான் கஷ்டமாக உள்ளது.
ஆனால் அது சுகமான சுமை.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete