Tuesday, March 21, 2023

மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்.

 



 

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென்று பாஜகவினர் நாடாளுமன்றத்தில் கலாட்டா செய்து கொண்டிருக்கிறார்கள்.

 

இந்திய ஜனநாயகத்தைப் பற்றி அவர் வெளி நாட்டில் பேசியதாக அவர்கள் காரணம் சொல்கிறார்கள்.

 

ராகுல் பேசியது வெளிநாடாக இருக்கலாம்.

 

இதோ உள்நாட்டிலேயே இந்திய ஜனநாயகம் சிதைக்கப்பட்டு வருகிறது என்று நாங்கள் குற்றம் சுமத்துகிறோம்.

 

கீழே உள்ள பத்திகளை முதலில் படியுங்கள்.

 

********************************************************************************************

 

 ஆட்சியாளர்களால் இந்திய ஜனநாயகம் கடுமையாக தாக்கப்பட்டு வருகிறது. மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு அமைக்கப்பட்ட ஜனநாயக அமைப்புக்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றன. சில அமைப்புக்களோ தங்களை ஆட்சியாளர்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கு உட்படுத்திக் கொண்டு விட்டன. முதலாளிகள் கட்டளையிடும் செயல்திட்டங்களை எந்தவொரு விவாதமும் இல்லாமல் நிறைவேற்றும் இடமாகவே நாடாளுமன்றம் மாறி விட்டது. நாட்டின் பாதுகாப்பு என்ற பெயரில் ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகளை முடக்குவதால் இந்திய அரசியல் சாசனமே கறை படிந்து காட்சியளிக்கிறது

 

**************************************************************************************

 

பண மதிப்பிழப்பு மற்றும் அவசர கதியிலான ஜி.எஸ்.டி அமலாக்கம் ஆகியவற்றில் இருந்தே இந்தியப் பொருளாதாரம் சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கி விட்டது. 2019-20 ஆண்டின் 3.1% உயர்வுதான் ஆறரை ஆண்டுகளின் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி விகிதம்தான். மதியற்ற, பயனற்ற  கதவடைப்பு முடிவின் காரணமாக, பொருளாதாரம் சரியத் தொடங்கியது. அனைத்து பொருளாதார நடவடிக்கைகளும் முடக்கப்பட்டதால் 2020-21 ல் ஒட்டு மொத்த உற்பத்தியில் 7 % சுருங்கியது. பண மதிப்பிழப்பு ஜி.எஸ்.டி ஆகியவற்றால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த சிறுதொழில் துறை ஒழுங்காக திட்டமிடப்படாத கதவடைப்பின் மூலம் முற்றிலுமாக அழிந்து போனது. லட்சக்கணக்கானவர்கள் வேலையிழந்தனர்.

 

 **************************************************************************************

 

ஜனநாயகம் என்பது வெறுமனே தேர்தல்களை நடத்துவதும் அரசுகளை மாற்றுவதும் மட்டுமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தின் முகப்பில் சொல்லப்பட்டுள்ள  சுதந்திரம், சமத்துவம், நீதி ஆகியவையே உண்மையான ஜனநாயகம். உண்மையான ஜனநாயகம் என்பது முடிவெடுக்கும் நடைமுறைகளில் மக்களையும் ஈடுபடுத்துவதாகும்.உண்மையான ஜனநாயகம் என்பது ஆட்சியில் உள்ளவர்களை கேள்வி கேட்பதும் அவர்களின் தவறுகளுக்கு அவர்களை பொறுப்பாக்குவதாகும். உண்மையான ஜனநாயகம் என்பது அனைத்து குடிமக்களையும் சமமாக கருதுவதும் யாருக்கும் சிறப்பு அந்தஸ்து தராமல் இருப்பதுமாகும்.

 

 

ஜனநாயகம் இன்று பல முனைகளிலிருந்தும் தாக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. அனைத்து மசோதாக்களும் ஆளும் கட்சியின் மிருக பலம் மற்றும் மோசடி உத்திகள் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு விவாதிக்கும் வாய்ப்பே தரப்படாமல் நிறைவேற்றப்படுகின்றன. இதன் மூலம் முடிவெடுக்கும் நடைமுறையில் மக்களின் பங்கேற்பு நீர்த்துப் போகச் செய்யப்படுகிறது. எந்த வித பாகுபாடும் இல்லாமல் வெளிப்படைத்தன்மையுடன் நேர்மையாக தேர்தல்களை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் எடுக்கிற பல முடிவுகள் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சாதகமாகவே அமைகிறது. பல முக்கியமான பிரச்சினைகள் குறித்து விசாரணை நடத்தாமல் தவிர்த்து வரும் உச்ச நீதிமன்றத்தின் போக்கு அவ்வமைப்பின் பாகுபாடற்ற தன்மை குறித்தே சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஜனநாயகத்தின் நாலாவது தூண் என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிற ஊடகங்கள், அவை அச்சு ஊடகங்களோ அல்லது காட்சி ஊடகங்களோ பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது. அவை ஆளும் கட்சிக்கு சேவை செய்வதையும் எதிர்கட்சிகளை சிறுமைப்படுத்துவதையுமே வழக்கமாகக் கொண்டுள்ளன.

 

 

இந்த ஜனவரி மாதம், கொல்கத்தாவில் நடைபெற்ற  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 26 வது பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பகுதிகள்தான் மேலேயுள்ள  பத்திகள்.

 

இவற்றில் எதையாவது மோடியாலோ அல்லது முட்டாள் சங்கிகளாலோயோ மறுக்க முடியுமா?

 

இந்திய ஜனநாயகம் இன்று கேலிக்கூத்தாக மாற்றப்பட்டுள்ளது.

 

அதனால் மன்னிப்பு கேட்க வேண்டியது மோடிதான் . . .

 

 

No comments:

Post a Comment