அத்து மீறியது ஆட்சியாளர்களே! இவர்கள் அல்ல
நாடாளுமன்ற மாநிலங்களவையில் முந்தைய கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதாக 12 உறுப்பிணர்கள் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
என்ன பிரச்சினை?
ஏன்
அவர்கள் ஆட்சியாளர்களோடு மோதினார்கள்?
உண்மையில்
நடந்தது என்ன?
அன்று அவர்கள் கையிலெடுத்தது தேசத்தின் நலன் காக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை. இன்சூரன்ஸ் துறை தொடர்பான பிரச்சினை.
அதனால் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்.
ஒன்றிய அரசு ஏற்கனவே நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் மற்றும் ஜி.ஐ.சி ரீ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்றிருந்தன. இந்த ஆண்டு நிதி நிலை அறிக்கையில் இரண்டு அரசுடமை வங்கிகளையும் ஒரு பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனத்தையும் தனியார்மயமாக்குவோம் என்று அறிவித்தது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆற்றி வரும் பங்கு மகத்தானது. போட்டி வந்த போதிலும் கூட தடை படாத வளர்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் உறுதிப்படுத்தினார்கள். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்குகளை விற்க வழி வகுக்கும் பொது இன்சூரன்ஸ் வணிகம் தேசியமயச் சட்டம் (GENERAL INSURANCE BUSINESS NATIONALAIZATION AMENDMENT ACT) அறிமுகமான போது நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழு, இந்நிறுவனங்களில் அரசின் பங்கு எக்காலத்திலும் 51 % க்கு குறையக் கூடாது என்று ஒரு மனதாக அறிக்கை தர அந்த அடிப்படையில்தான் சட்டம் நிறைவேறியது.
இப்போது ஆகஸ்ட் 2021 ல் அந்த ஷரத்தை நீக்கி அரசின் பங்கை 50 % க்கும் குறைவாக கொண்டு வருவதற்கான திருத்தம் முன்மொழியப்பட்டது. ஒரு பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனம் தனியார்மயமாக்கப்படும் என்று நிதி நிலை அறிக்கையில் அறிவித்தாலும் அனைத்து பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மயமாக்க வழி வகுப்பதாகவே புதிய திருத்த மசோதா அமைந்திருந்தது.
மக்களவையில் உள்ள மிருக பலம் கொண்டு அது நிறைவேறியது. மாநிலங்களவையில் போதுமான எண்ணிக்க்கை இல்லாததால் ஒருமித்த கருத்தை உருவாக்க அமைச்சர் பியூஷ் கோயல் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டினார்.
தனியார்மய முயற்சி கைவிடப்பட வேண்டும் என்பதே பெரும்பாலான கட்சிகளின் வலியுறுத்தலாக இருந்தது. ஒன்றிய அரசை பகைத்துக் கொள்ள விரும்பாத டி.ஆர்.எஸ், வொய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதா தள் ஆகிய கட்சிகள் இம்மசோதா குறித்து விரிவாக ஆய்வு செய்ய நாடாளுமன்ற நிதியமைச்சக நிலைக்குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கோரினர். ஆனால் அந்த கோரிக்கையைக் கூட பரிசீலிக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. எப்படியும் மசோதாவை நிறைவேற்றுவது என்று முரட்டுத்தனமாக முயற்சித்தது.
மாநிலங்களவையில் நிலைக்குழு பரிசீலனை அவசியம் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தினர். அதனை உதாசீனம் செய்த போது எதிர்ப்பு கடுமையானது. வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதையும் அலட்சியப்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவைக் காவலர்கள் கொண்டு வன்முறையை பிரயோகப்படுத்தி வெளியே தூக்கிச் சென்றார்கள். எந்த விவாதமுமின்றி மசோதா நிறைவேறியதாக அறிவித்துக் கொண்டனர்.
நாடாளுமன்ற மரபுகளையும் ஜனநாயக மாண்புகளையும் முற்றிலுமாக குழி தோண்டி புதைத்து ஆட்சியாளர்கள் நிகழ்த்திய அத்து மீறல் இது. 325 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து இம்மசோதாவினால் உருவாகும் பாதிப்புக்களை விளக்கியது என்ற அகில இந்திய இன்சூர்ன்ஸ் ஊழியர் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளே எதிர்க்கட்சிகள் ஆற்றிய எதிர்வினைக்கான அடிப்படை.
நாடாளுமன்ற மரபுகளுக்கும் ஜனநாயக மாண்புகளுக்கும் முரணாக செயல்பட்டது ஒன்றிய அரசுதான். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அத்து மீறி நடந்து கொண்டார்கள் என்று குற்றம் சுமத்தி 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை குளிர்காலக் கூட்டத் தொடர் முழுமைக்கும் இடை நீக்கம் செய்து மீண்டும் ஜனநாயகத்தை அவமதித்துள்ளது ஒன்றிய அரசு.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஏண்டா ஒளியற கருங்காலி பொறுக்கி நாயே
Delete