*நாளொரு கேள்வி: 16.12.2021*
தொடர் எண்: *564*
இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
##########################
*வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் எதற்காக?*
கேள்வி: இரண்டு நாள் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் பொருளாதாரத்தை பாதிக்காதா?
*க.சுவாமிநாதன்*
வேலை நிறுத்தம் என்றாலே தொழில் பாதிக்கும், பொருளாதாரம் பாதிக்கும் என்று ஆளும் கட்சி, அதன் ஆதரவாளர்கள், ஊடக ஊது குழல்கள் புலம்புவது வாடிக்கையானதுதான். 365 நாட்களும் அந்த தொழில் வளர பாடுபடுகிற தொழிலாளர்கள்தான் ஒரு நாளோ, இரண்டு நாளோ வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள் என்பதையே இவர்கள் மறந்து விடுவார்கள். அல்லது மறைத்து விடுவார்கள். உண்மையில் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான வேலை நிறுத்தம் இது. *சக்கரங்களை நிறுத்துவது அதை செப்பனிடுவதற்கு... ஓவராயிலிங் செய்வதற்கு...* அரசின் கொள்கைப் பிசுக்குகளை அகற்றுவதற்கு...
வங்கி ஊழியர்களின் இரண்டு நாள் வேலை நிறுத்தம் அவர்களின் சொந்தப் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக அல்ல. அரசு வங்கிகளை தனியார் மயம் ஆக்குகிற அரசின் கொள்கைகளை எதிர்த்து அவர்கள் செய்யும் வேலை நிறுத்தம்.கடந்த பட்ஜெட்டில் இரண்டு அரசு வங்கிகள் தனியார் மயம் ஆகப் போகிறது என்று அரசால் அறிவிக்கப்பட்டது. அதற்கான சட்டம் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வரப் போகிறது என்று அறிவித்ததால் அதை எதிர்த்து இந்த வேலை நிறுத்தம் இன்று துவங்கியுள்ளது.
*வழக்கமான புலம்பல்* கூட அரசு ஆதரவு முகாமில் குறைவாக உள்ளது. காரணம், விவசாயிகள் போராட்டம் தந்த அடியாக இருக்கலாம். உலகம் முழுக்க அரசு தலையீடு என்பதன் தேவை கோவிட் காலத்தில் பேரளவு மக்களால் உணரப்பட்டு இருப்பதும் காரணமாக இருக்கலாம். காரணங்கள் இருந்த போதும் "வச்ச குறி தப்பாது" என்று கார்ப்பரேட்டுகளுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக அரசு படாதபாடு படுகிறது. *வலிமையான பிரதமர், நிலையான அரசு, கமா வைக் கூட மாற்ற மாட்டார்கள்* என்ற டயலாக் எல்லாம் கேள்விக் குறியாகக் கூடாது அல்லவா!
ஆனால் வரலாறு இவர்களைப் பார்த்து கை கொட்டிச் சிரிக்கிறது. தனியார் வங்கிகள் இந்தியப் பொருளாதாரத்தில் திவால்களை, சேமிப்பு பத்திரமா என்கிற பதட்டங்களை உருவாக்கியது என்பது மறக்க கூடியதா? விடுதலை இந்தியாவின் 75 ஆண்டு வரலாற்றில் தனியார் வங்கிகளின் *"வீழ்ச்சி கதைகள்"* நிறைய
*1947 -1951* க்கு இடையில் கடையை மூடிய தனியார் வங்கிகளின் எண்ணிக்கை 205.
*1951- 1967* க்கு இடையில் கடையை மூடிய தனியார் வங்கிகளின் எண்ணிக்கை 476.
*1969 - 2008* க்கு இடையில் வேறு வங்கிகளால், பெரும்பாலும் அரசு வங்கிகளால் கை கொடுத்து இணைக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு தனியார் வங்கிகளின் எண்ணிக்கை 36.
புதிய தலைமுறை தனியார் வங்கிகளில் பரபரப்பாக பேசப்பட்ட, 10 ஆண்டுகள் கூட நிலைத்து நிற்காது 2004 இல் வீழ்ந்த *கொலோபல் ட்ரஸ்ட் பேங்க்* துவங்கி அண்மையில் நெருக்கடிக்கு ஆளான *யெஸ் பாங்க்* வரையிலான கதைகள் திவால் வரலாறின் நைந்து போகாத, கிழிந்து போகாத, கரையான் அரிக்காத புதிய பக்கங்கள்.
ஆனால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதுமே தனியார் வங்கிகளின் திவால்கள் பொருளாதார உலகின் திகில் கதைகள்தான். 233 ஆண்டு வயதான பிரிட்டிஷ் வங்கியான பேரிங்ஸ் வங்கி 1995 இல் ஒரு ஊழியர் நிக் லீசன் என்பவரின் சூதாட்டத்தால் வீழ்ந்தது.
*1997 -98* கிழக்காசிய நிதி நெருக்கடியில் தாய்லாந்து தனியார் வங்கிகள் பல வீழ்ந்தன. ஜப்பானின் டாப் 10 ப்ரோக்கர் கம்பெனிகளில் ஒன்று சரிந்தது. *தென் கொரியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, ரஷ்யா* என அந்த நெருக்கடி நாடுகளின் பொருளாதாரத்தை உலுக்கியது. அப்போதும் இந்திய நிதித் துறை பெரிதும் பாதிக்கப்படவில்லை. காரணம் வங்கிகள் அரசின் கைகளில் இருந்துதான். அரசின் கட்டுப்பாடுகள் அதன் கைகளை சூதாட்டத்தில் இறங்காமல் கட்டிப் போட்டிருந்ததுதான்.
2008 உலக நிதி நெருக்கடி. நோபல் அறிஞர்கள் ஆலோசகர்களாக இருந்த *லாங் டெர்ம் கிரெடிட் மேனேஜ்மென்ட் (L.T.C.M)* நெருக்கடிக்கு ஆளானது. *174 வயது வாச்சோவியா வங்கி, 158 வயது லே மேன் பிரதர்ஸ், 89 ஆண்டுகள் ஆன அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி* எல்லாம் சரிந்தன. உலகம் முழுவதற்கும் தனியார் மய மருந்தை எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்த அமெரிக்க பொருளாதார டாக்டர்கள், வீழ்ந்து கொண்டிருந்த ஏ.ஐ.ஜி க்கு அரசு 80 சதவீத பங்குகளை வாங்கி காப்பாற்றட்டும் என மருந்தை மாற்றி எழுதிக் கொடுத்தனர். லாபத்திற்கு வெட்கமில்லை. தனியாருக்கு தீட்டு இல்லை. அரசு தலையீடு கூடாது என்று அவர்கள் சொன்னது மக்களுக்கான தலையீடு கூடாது என்பதுதான். கார்ப்பரேட்டுகளுக்கு ஒன்று எனில் துடித்துப் போவார்கள்.
அமெரிக்காவில் மட்டும் *2008 - 2020 காலத்தில்* தோல்வி அடைந்துள்ள தனியார் வங்கிகள் எண்ணிக்கை 512.
*வரலாறு நெடுகிலும்* திவால், தோல்வி, மக்கள் சேமிப்புகள் பறி... இதுதான் கதை. என்றாலும் இந்திய அரசு தனியார் மயமாக்கலுக்கு முனைகிறது எனில் தெரிந்தே செய்கிறார்கள்.
இதை எதிர்த்துதான் வங்கி ஊழியர்கள் களம் காண்கிறார்கள். ஆகவே இது வங்கி வாடிக்கையாளர் நலன் காக்கும் போராட்டம். தேச பொருளாதாரத்தை காக்கிற போராட்டம்.
*செவ்வானம்*
No comments:
Post a Comment