இன்சூரன்ஸ் ஊழியர்களின் மகத்தான தலைவர்.
மிகவும் இளம் வயதில் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எனும் பெரும் பொறுப்பை தன் தோள்களில் சுமந்து வாழ்வை உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணித்தவர்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை வளர்த்தெடுத்த தோழர் சரோஜ் சவுத்ரிக்குப் பிறகு அகில இந்திய பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அமைப்பினை புதிய சிகரங்களுக்கு கொண்டு சென்றவர்.
எல்.ஐ.சி யை தனியார் மயமாக்க வேண்டும் என்று மல்கோத்ரா குழு பரிந்துரை அளித்த போது அதற்கெதிராக வியூகங்கள் வகுத்தவர். தத்துவார்த்த ரீதியில் ஊழியர்களை தயார் செய்தது ஒரு வியூகம் என்றால் மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும் என்று பிரச்சாரக் களத்தில் இறக்கியது இன்னொரு வியூகம்.
"தனியார் மயத்துக்கு எதிரான போராட்டம், நம் மேஜையில் பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவை செய்வதன் மூலம் அவர்களையும் இணைத்துக் கொண்டே தொடர்கிறது"
என்ற அவரது அறைகூவல் என்றென்றும் எங்களை வழி நடத்தும் மந்திரச்சொல்.
பென்ஷன் எனும் பலனை பெற்ற போராட்டத்தின் நாயகர். அமைப்பில் இல்லாதவர்களும் அதிகாரிகளும் மற்றவர்களும் கூட அவரை இன்றைக்கும் நன்றியோடு நினைவு கூர்கிறார்கள்.
நிதியமைச்சராய் செயல்படும் அளவிற்கான பொருளாதார ஞானம் கொண்டவர், தான் அறிந்ததை அனைவருக்கும் அள்ளித் தந்த ஆசான்.
ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நிலைமைகளையும் அவை எப்படி இந்தியா போன்ற நாடுகளை பாதிக்கிறது என்பதையும் ஆராய்ந்து அவற்றை விளக்கிச் சொன்னவர்.
"வாருங்கள், அரசியல் பழகுவோம்" என்ற நீண்ட தொடரை ஆங்கிலத்தில் எழுதியவர்.
இன்சூரன்ஸ் ஊழியர்கள் நாங்கள் எந்நாளும் அவரை மறவோமே!
செவ்வணக்கம் தோழர் என்.எம்.சுந்தரம் !
1996 ல் வேலூரில் நடைபெற்ற தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 24 வது பொது மாநாட்டை துவக்கி வைத்து தோழர் என்.எம்.எஸ் உரையாற்றுகையில் எடுத்த படம் மேலே உள்ளது.
அடுத்த ஆண்டு மீண்டும் வேலூரில்தான் தென் மண்டல மாநாடு. துவக்கி வைக்கத்தான் தோழர் என்.எம்.சுந்தரம் இல்லை என்பது வலியை தருகிறது.
No comments:
Post a Comment