Tuesday, December 14, 2021

நூற்றாண்டில் எங்கள் பிதாமகர்








அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இன்று ஒரு மகிழ்ச்சியான  நாள். 


 எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர், பொதுச்செயலாளராகவும் தலைவராகவும் நீண்ட காலம் சங்கத்தை வழி நடத்திய தலைவர், எங்கள் பிதாமகர், வாழும் சகாப்தம், தோழர் சந்திர சேகர் போஸ் இன்று நூறாவது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

19, ஜனவரி, 1956 அன்று ஆயுள் காப்பீட்டுத்துறையை தேசியமயமாக்கும் அவசரச்சட்டத்தை பண்டித ஜவஹர்லால் நேரு பிறப்பிக்கிறார். அதன் அவசியம் என்ன என்பதை அன்று இரவே அன்றைய நிதியமைச்சர் திரு சி.டி.தேஷ்முக் வானொலியில் கூறுகிறார்.

அவசரச்சட்டத்தை சட்டமாக மாற்றுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தில் முன் வைக்கிற போது எம்.பிக் களாக இருக்கும் சில முதலாளிகளும் இன்றைய பாஜகவின் அன்றைய வடிவமான ஜன் சங்கும் எதிர்க்கும் போது, தேஷ்முக், தன் சட்டைப்பையிலிருந்து ஒரு தந்தியை எடுத்து "இதோ பாருங்கள், இன்சூரன்ஸ் ஊழியர்கள் எங்கள் முடிவை ஆதரிக்கிறார்கள், வரவேற்கிறார்கள்" என்று படித்துக் காண்பிக்கிறார். 

அந்த தந்தியை அனுப்பியவர் தோழர் சந்திர சேகர் போஸ், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர்.

அவரது வாழ்வு மகத்தானது. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் பணியில் சேர்ந்தவர். இன்சூரன்ஸ் கம்பெனிகளில் நடைபெற்று வந்த உழைப்புச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க தொழிற்சங்கத்தை கம்பெனி வாரியாக உருவாக்க அரும்பாடு பட்டவர். அதற்காக பட்ட சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

என்னுடைய "முற்றுகை" நூலில் அவர் வாழ்வின் ஒரு மகத்தான சம்பவம் குறித்து எழுதியிருந்தேன்.

அந்த சம்பவம்

“போஸ் பாபுவைப் பார்த்தால் ரொம்பவுமே அமைதியானவராகத் தெரியும். ஆனால் பயங்கரமான உறுதியானவர். ஊழியர்களுக்கு என்ன நன்மை செய்யலாம் என்று எப்பவுமே யோசிச்சிக்கிட்டு இருப்பவர். ஹிந்துஸ்தான் கம்பெனியில் அவர் பொறுப்பு எடுத்துக் கொண்ட பிறகு போனஸ் பிரச்சினை வருது. ட்ரிப்யூனலுக்கு போயிடுது. அந்த காலத்துல எல்லா கம்பெனிகளும் ரெண்டு கணக்கு நோட்டு வச்சிருப்பாங்க. அரசாங்கத்தையும் பாலிசிதாரர்களயும் ஏமாத்தறதுக்காக பொய்யான நஷ்டக் கணக்கு காண்பிக்கிற நோட்டு ஒன்னு. உண்மையான கணக்கு நோட்டு ஒன்னு. கம்பெனி நஷ்டத்துல போறதனால போனஸ் கொடுக்க முடியாதுன்னு ட்ரிப்யூன்லில் கம்பெனி பொய்க்கணக்கை காண்பிக்குது. போஸ் பாபு ரொம்பவுமே ரகசியமாக அக்கவுண்டண்ட் கிட்ட பேசி உண்மையான கணக்கு நோட்டை எடுத்துடறாரு. ஒரு ப்ரெண்டோட காமெரா மூலமா அதை போட்டோ எடுத்து ட்ரிப்யூனலில் சமர்ப்பித்து கம்பெனி பொய் சொல்வதை நிரூபிச்சிடறாரு.

 ட்ரிப்யூனலில் இருந்த நீதிபதியே கடுப்பாயிடறாரு. இப்படி கம்பெனிக்கு துரோகம் செய்யறவங்களை வேலையில் வச்சுக்கக் கூடாது. டிஸ்மிஸ் செய்யுங்க என்று அவரே சொல்றாரு. அப்போ கூட கொஞ்சமும் கலங்காமல் என் மீது என்ன வேணா நடவடிக்கை எடுங்க. ஆனா உண்மையான கணக்கு நோட்டுப்படி லாபம் நிறையவே இருக்கு. போனஸை கொடுக்கச் சொல்லி உத்தரவு போடுங்க” என்று சொல்ல நீதிபதி ஆடிப் போயிட்டாரு. போஸ் பாபுவை டிஸ்மிஸ் செஞ்சாங்க. ஆனா கடுமையான போராட்டம் நடந்ததுக்கு அப்புறமா அவர் மறுபடியும் வேலைல சேர்ந்தார்"

அவர் தனக்கு வயதானதாக என்றைக்குமே நினைத்ததில்லை. கடந்த ஆண்டு ஜனவரியில்  விசாகப்பட்டிணத்தில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் பங்கேற்று வழிகாட்டினார். 

அந்த மாநாடு எனக்கு மிகவும் முக்கியமானது. அம்மாநாட்டில்தான் அவர் நான் எழுதிய "முற்றுகை" நாவலை வெளியிட்டார். 





அந்த நூலை எழுத அடிப்படையான தகவல்களை அவரிடமிருந்துதான் பெற்றேன்.

2018 ம் வருடம் மே மாதம், தோழர் போஸை சந்திக்க கொல்கத்தா சென்றேன்.

அந்த அனுபவம் குறித்து அப்போது எழுதியதை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரும் பொதுச்செயலாளராக, தலைவராக 1955 முதல் 1994 வரை செயல்பட்ட  மகத்தான தலைவர் தோழர் சந்திர சேகர் போஸ் அவர்களை சந்திப்பதும்  அறுபதுகளின் இறுதியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நடத்திய வீரம் செறிந்த "இயந்திரமயமாக்கலுக்கு எதிரான போராட்டம்" நடைபெற்ற "இலாகோ" கட்டிடத்தையும் தொடர்புடைய இதர இடங்களைப் பார்ப்பதும்தான் கொல்கத்தா பயணத்தின் முக்கிய நோக்கம்.


இது தொடர்பாக எங்கள் கிழக்கு மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் ஜெயந்தோ முகர்ஜியிடம் முன் கூட்டியே பேசியிருந்தேன். கொல்கத்தா வந்த உடனேயே சங்க அலுவலகத்திற்கு விரைந்தேன். அங்கே தோழர் ஜெயந்தோவும் மற்ற பொறுப்பாளர்களும் இருந்தார்கள். பிஸ்கெட், டீயோடு வரவேற்றார்கள்.  தோழர் போஸ் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஒரு ஓய்வு பெற்ற தோழரை ஏற்பாடு செய்திருந்தார்கள். அவரும் தயாராக இருந்தார். அவர் தோழர் போஸிடம் தொலைபேசியில் பேச அவரும் உடனே அழைத்து வரச் சொல்லி விட்டார். 

கிழக்கு மண்டல பொருளாளர் தோழர் அமிதவ் ஒரு டாக்ஸியை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். மாலை ஆறு மணி முதல் பத்து மணி வரை தோழர் சந்திர சேகர போஸோடு நீண்ட உரையாடல். அவர் வீட்டிற்குச் சென்றதுமே கொல்கத்தா ஸ்பெஷலான ரசகுல்லாவையும் சந்தேசையும் கொண்டு வரச் சொன்னார். கூடவே பால் சேர்க்காத கருப்பு தேநீரும்.  

96 வயது என்பதை அவர் சொன்னால்தான் நம்ப முடியும். அந்த அளவிற்கு ஒரு தெளிவு, நினைவாற்றல். போராட்ட களத்தில் அவரோடு இருந்த சகாக்கள் தோழர் சரோஜ் மற்றும் தோழர் சுனில் பற்றி பேசுகையில் நெகிழ்ச்சி, சங்கம் இன்று வளர்ந்துள்ள நிலை குறித்து மகிழ்ச்சி, இளைய தோழர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்று நான்கு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவரது வீட்டிலேயே இரவு உணவு அருந்தி விட்டு புறப்பட்டேன். அவரது மருமகள் மருத்துவரைப் பார்க்க சென்றிருந்ததால் பேரனிடம் சொல்லி உணவு ஆர்டர் செய்யச் சொன்னார். தமிழ்நாட்டிலிருந்து தோழர் வந்துள்ளதால் அவர்கள் உணவான தோசையையே இருவரும் சாப்பிடுகிறோம் என்று சொன்னார். புறப்படும் போது  டாக்ஸி ஸ்டேண்ட் வரை நானே வருகிறேன் என்று எழுந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். வாழ்வின் உன்னதமான தருணமாக அந்த நிமிடங்கள் அமைந்திருந்தது.




அதனால்தான் அவர் நூலை வெளியிட்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய அருமை.

அவர் தொழிற்சங்க இயக்கத் தலைவர் மட்டுமல்ல, மார்க்சிய சிந்தனையாளர், கல்வியாளர், கல்கத்தா பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக பல காலம் செயலாற்றியவர்.

இப்போதும் சமூக வலைத்தளங்களில் செயல்படுகிறார்.

நூறாவது ஆண்டை எட்டியுள்ள தோழர் சந்திர சேகர் போஸ் நீடூழி வாழ்ந்து என்றைக்கும் எங்களுக்கு வழி காட்டிட வேண்டும் என்று எங்கள் வேலூர் கோட்டத் தோழர்கள் அனைவரது சார்பிலும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

LONG LIVE COM BOSE.

 

3 comments:

  1. தனக்கு வயதாகவில்லை என்று நினைப்பதே உற்சாகம் ஊட்டும். வாழ்க பல்லாண்டு

    ReplyDelete
  2. சிறப்பான பதிவு.அருமையான வாய்ப்பு.

    ReplyDelete