Thursday, December 30, 2021

சட்டபூர்வ சதுரங்க வேட்டை

 


இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் முதல் பக்கம் கீழே உள்ள விளம்பரத்தைப் பார்த்தேன்.



ஒரு சவரன் தங்கம் ரூபாய் 2,022 என்று அந்த விளம்பரம் சொல்கிறது. ஒரு சவரனுக்கு முப்பதாயிரம் ரூபாய் குறைத்து தரும் நல்லவர்களா என்ற சந்தேகத்தோடு அந்த விளம்பரத்தை முழுமையாக படித்தேன்.

01.01.2022 அன்று மட்டுமே இந்த சலுகை . . .

அந்த கடையின் நான்கு கிளைகளில் மட்டும்தான் இந்த சலுகை விலையாம்.

இந்த சலுகை நான்கு மணி நேரத்துக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மூவருக்குத் தரப்படும்.

ஆக மொத்தம் 12 பேருக்கு தரப்படும்.

சலுகை விலையால் அந்த கடைக்கு இழப்பு 3,60,000 ரூபாய்.

அந்த சலுகை யாருக்குக் கிடைக்கும்?

குறைந்த பட்சம் ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்குபவருக்கு ஒரு சீட்டு தரப்படும். அந்த சீட்டில் அந்த கடைக்கு ஒரு விளம்பர முழக்கம் எழுதித் தர வேண்டும். அப்படி ஐயாயிரம் ரூபாய்க்கு நகை வாங்கி விளம்பர முழக்கம் எழுதித் தந்தால் அந்த முழக்கம் திருப்தியாக இருந்தால் நான்கு மணி நேரத்துக்கு ஒருவருக்கு சலுகை விலையில் தங்கம் விற்கப்படும்.

அதிர்ஷ்டக் குலுக்கல் கிடையாது. தகுதியான விளம்பர முழக்கத்திற்கே சலுகை விலை என்று சொல்லி விட்டது.

2022 ரூபாய்க்கு ஒரு சவரன் என்ற ஆசையை தூண்டி விட்டாயிற்று.

விளம்பர வாசகத்தின் அடிப்படையில் பரிசு என்று சொல்லியாகி விட்டது.

பிறகென்ன நம் மக்கள் தங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்காதா என்று ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்கிக் குவிக்கப் போகிறார்கள்.

 நான் விளம்பரத்தைப் பார்த்தது ஆங்கில இந்து நாளிதழில். இன்னும் எத்தனை நாளிதழ்களில் வந்துள்ளதோ? நாளையும் வெளி வரலாம். அவர்கள் செலவழிக்கும் 3,60,000 ரூபாயை விட விளம்பரக் கட்டணமே பல மடங்கு இருக்கும்! சலுகை தருவது என்பது ஜூம்லா. அதன் பேரில் ஐயாயிரம் ரூபாய்க்கு தங்கம் வாங்க கூட்டத்தை சேர்ப்பதுதான்.

இதுவும் ஒரு வகை சதுரங்க வேட்டைதானே!

பிகு: அந்த கடைக்கு நாம் வேறு விளம்பரம் தர வேண்டுமா என்று அக்கடையின் பெயர் விலாசத்தையெல்லாம் நீக்கி விட்டேன். திருவண்ணாமலை, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் ஆகிய ஊர்க்காரர்கள் மட்டும் உஷாராக இருக்கவும்.

 

No comments:

Post a Comment