Wednesday, December 8, 2021

தனியாரை நம்ப முடியுமா?



 *நாளொரு கேள்வி: 06.12.2021*


தொடர் எண்: *554*

*டிசம்பர் 6: டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்*

இன்று நம்மோடு அம்பேத்கர் பேரன், இந்திய நாட்டின் பேராளுமைகளில் ஒருவர் பேரா. *ஆனந்த் டெல்டும்ப்டே*
###########################

*செயல் தாக்கத்தில் தனியார்கள் என்றும் முன்னணியில் இருக்க மாட்டார்கள்*

கேள்வி: அம்பேத்கர் விழைந்த சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சமூக ஒழுங்குக்கு தனியார்மயம் பொருந்துமா?

*ஆனந்த் டெல்டும்ப்டே*

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மோடி அரசின் திட்டம் பற்றி இப்போது நடந்தேறும் விவாதங்கள் புதிதல்ல.  *தனியார்மயத்தை ஆதரிப்பவர்கள் எப்போதுமே தனியார்துறை பொதுத்துறையை விட திறம்பட செயல்பட்டு வருவதாக, அரசுக்கு ஆதரவாக, வாதிடுகின்றனர்.* அவர்கள் உணராமலேயே, இந்த வாதத்தின் தர்க்கரீதியான நீட்சி, அபத்தமான ஆனால் நியாயமான ஒரு கேள்விக்கு இட்டுச் செல்கிறது: *அரசாங்கத்தையே ஏன் தனியார்மயமாக்கக் கூடாது?*

அவர்களது கருத்துக்கு   முன்னுதாரணங்களாக, தனியார் துறை பாதையைப் பின்பற்றிய அமெரிக்கா, உலகளாவிய பொருளாதார சக்தியாக வளர்ந்தது, அதே நேரத்தில் பொதுத்துறை களை கொண்டிருந்த இங்கிலாந்து 1980-களின் இறுதியில் திவால்நிலைக்கு தள்ளப்பட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

*1929-ம் ஆண்டின் பொருளாதார பெருமந்தத்தால் முதலாளித்துவம் (தனியார் முதலாளித்துவம் என்று சொல்ல வேண்டும்) மரணப் படுக்கையில் தள்ளப்பட்டது* என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள். *பொது முதலீடு என்ற கீனிசிய மருந்தின் மூலம் அது காப்பாற்றப்பட்டது.* இந்த கீனிசிய மருந்து பரிந்துரைதான் உலகம் முழுவதிலும் பொதுத்துறையின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் பெரும்பாலும் உந்துதலாக இருந்தது.  *1980-களுக்குப் பிறகுதான் கீனிசிய கொள்கை புதிய தாராளவாத பொருளாதார வல்லுநர்களால் பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டது.*

அதேபோல், நேருவின் ஆட்சியின் கீழ்,
"கலப்புப்" பொருளாதாரத்தில் பொதுத்துறையின் முதன்மைப் பாத்திரத்தை வலியுறுத்தி, அதன் தொடர்ச்சியாக செழித்து வளர்ந்த லைசன்ஸ் ராஜ் இவற்றுடன் கூடிய (இந்திய தன்மைகளுடனான)
சோசலிசத்துடன் இந்தியா உறவாடியது. 1980-களில்தான் இந்தியா தாராளமயமாக்கலைத் தொடங்கியது. 

ஆனால் வரலாற்றின் இந்த உப்புச்சப்பில்லாத வாசிப்பில் கூட, *நேருவை விட நாட்டின் எட்டு முன்னணி முதலாளிகளால்* தயாரிக்கப்பட்ட மும்பை திட்டம்தான் அடிப்படை தொழில்களில் பெருமளவு பொதுத்துறை முதலீட்டை கோரியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது அப்போதைய அரசின் சோசலிச சவடாலுக்கு   உதவியாக இருந்தது.

வரலாற்று தரவுகளை இது போன்று பகுப்பாய்வு இல்லாமல் மேலோட்டமாக முன் வைப்பது வாதத்தில் வெல்வதற்கு உதவலாம், ஆனால் அந்தத் தரவுகளின் உண்மையான தாக்கத்தைப் புரிந்து கொள்ள உதவப் போவதில்லை. எந்த ஒரு நிறுவனமும், எல்லா ஒழுங்குமுறைகளிலிருந்தும் கட்டுப்பாடுகளிலிருந்தும்  விடுவிக்கப்பட்டு விட்டால், தளையிடப்பட்ட ஒரு நிறுவனத்தை விட, அது திறன் மிக்கதாக இருக்கும் என்பது ஒரு  விதி போல கூறப்படுகிறது. 

*பொதுத்துறையை விட தனியார் துறை சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றம் இந்த விதியால் விளக்கப்படுகிறது.* ஆனால் வெளித் தோற்றமாக மட்டுமே இருப்பதற்கு உதாரணங்கள் உள்ளன. தனியார் துறையின் மேன்மையை காட்டுவதற்காக, செயல்திறன் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளை ஒருவர் அடுக்கும் போது, தனியார் நிறுவனங்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் பல்வேறு வரி மற்றும் வரி அல்லாத சலுகைகளையும் அந்நிறுவனங்களால் உருவாக்கப்படும் பொதுத்துறை வங்கிகளின் பெரிய அளவிலான வாராக் கடன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

*1995-ம் ஆண்டில்* இந்தியாவின் கச்சா  எண்ணெய் துறையை
தாராளமயமாக்குவதற்கான ஆய்வுக்குழுவின் ஒரு உறுப்பினராக,
நீண்டகால நோக்கில் ஓ.என்.ஜி.சியின் செயல்திறனை உலக அளவிலான கச்சா எண்ணெய்  பெருநிறுவனங்களுடன் ஒப்பீட்டு நான் ஆய்வு செய்தேன். *பொதுத்துறை நிறுவனங்களில் மிகச்சிறந்த ஒன்று ஓ.என்.ஜி.சி.* அரசுக்கு கடுப்பேற்றும் விதமாக, ஓ.என்.ஜி.சிக்கும் உலக பெரு நிறுவனங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க எந்த எதிர்மறை வேறுபாட்டையும் எங்கள் குழு கண்டறியவில்லை.

தாராளமயமாக்கலுக்குப் பிந்தைய உற்சாகத்தில் அரசு அதிக பணம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் இயக்குநர் குழுக்களுக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்த போது கச்சா எண்ணெய் நிறுவனங்கள் தனியார்  முயற்சிகளை, இணை வினைகளை உருவாக்க விழைந்தன (அந்த முயற்சிகளில் தனியார்  பங்காளிகளுடன்   பொதுத்துறையின் பங்கு 50 சதவீதமாக வரம்பிடப்பட்டிருந்தது). ஒரு சில  முயற்சிகளில் ஒரு சிலவற்றைத் தவிர்த்து, அனைத்தும் பெரிய  இழப்புகளுடன் இழுத்து மூடப்பட்டன. *எனவே, பொதுத்துறை நிறுவனத்தை விட தனியார் நிறுவனம் அதனளவில் செயல்திறன் அதிகமானது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை.* 

ஆனால், செயல்திறனை விட *செயல்தாக்கம்தான் மிக முக்கியமான காரணி.* இந்த விவாதத்தில் செயல்தாக்கம் பற்றி பேசப்படாதது அப்பட்டமாக வெளிப்படுகிறது.  வழக்கமான நிறுவன மேலாண்மையில் கூட, செயல்திறனோடு பிரிக்க  முடியாமல் இணைந்த செயல்தாக்கம்
என்பதிலிருந்து பிரித்து, செயல்திறன் தனித்து போற்றப்படுவதில்லை.

செயல்தாக்கம் என்பது ஒரு நிறுவனத்தின் இலக்கை/நோக்கத்தை அடைவது பற்றிய அளவீடு. குறுகிய கால நோக்கில் லாபம் ஈட்டினாலும் நீண்ட கால திசையில் தடுமாறும் நிறுவனம் சிறந்த நிறுவனம் அல்ல. அதேபோல், *மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் வளர்ச்சியை காணும் ஒரு நாடு, அதன் குடிமக்களுக்கு அடிப்படை சுதந்திரங்களையும், மருத்துவம், கல்வி, வாழ்வாதார பாதுகாப்பு ஆகியவற்றையும் வழங்கத் தவறினால் அது சிறந்த நாடு அல்ல.*

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக, நாட்டின் பொருளாதார நிர்வாகத்தை ஒரு பேர் பெற்ற கார்ப்பரேட்  நிறுவனத்திடம் ஒப்படைப்பதாக கற்பனை செய்வோம். அது மொத்த உள்நாட்டு உற்பத்தியை நினைத்து பார்க்க முடியாத உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. ஆனால், *ஒரு தேசம் என்ற வகையில் நமது நோக்கத்துக்கு அது உதவுமா?*

*பொருளாதாரத்தின் நோக்கம் என்பது* அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை, அதன் பல்வேறு பிரிவுகள், மற்றும் மிக முக்கியமாக, அரசு கொள்கைக்கான வழிகாட்டும் ஆணைகள் ஆகியவற்றில் இருந்து பிரிக்கப்பட முடியாதது. *சமூக நீதியும் பொருளாதார நீதியும் அரசியல் நீதியும் அனைத்து நிறுவனங்களிலும் ஊடுருவி நிற்கும் ஒரு சமூக முறையை உருவாக்குவதை* அது நோக்கமாகக் கொண்டுள்ளது; 

*டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் விளக்கியபடி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் நீதியை அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கு அது.*

பொதுத்துறையை விட தனியார் துறைக்கு செயல்திறன் அதிகம் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை. அதே நேரம், *இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தின் செயல்தாக்கம் என்ற நோக்கத்தை தனியார்துறை ஒருபோதும் நிறைவு செய்ய முடியாது என்பதில் சந்தேகமில்லை.*

நன்றி:  www.caravanmagazine.in 

*செவ்வானம்*

No comments:

Post a Comment