Wednesday, May 8, 2019

திருவள்ளுவரை விட்டுடுங்க சீமான் . . .



சீமானின் இந்த காமெடி காணொளி பார்த்து குழம்பிப் போய் விட்டேன்.



"கேடில் விழுச்செல்வம் கல்வி"  என்ற திருக்குறளுக்கு கல்விதான் அழியாத செல்வம் என்று அர்த்தமாயிற்றே, நமது தமிழாசிரியர்கள் அப்படித்தானே சொல்லித் தந்துள்ளனர். இவர் வேறு மாதிரி சொல்கிறாரே என்ற குழப்பம்தான்.

சரி திருக்குறளுக்கு உரை எழுதிய தமிழ் ஆசான்கள் எல்லாம் என்ன சொல்லியுள்ளார்கள் என்று தேடிப்பார்த்தேன். நம்மைப் போலவே பலரும் தேடியுள்ளார்கள் போல. நொடியில் கூகிள் கொட்டி விட்டது.

அதனை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை 
(அதிகாரம்:கல்வி குறள் எண்:400


பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்; கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய) செல்வம் அல்ல. 

மணக்குடவர் உரை: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி: மற்றவையெல்லாம் பொருளல்ல.
இது கல்வி அழியாத செல்வமென்றது.

பரிமேலழகர் உரை: ஒருவற்குக் கேடு இல் விழுச் செல்வம் கல்வி - ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி, மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.

(அழிவின்மையாவது : தாயத்தார், கள்வர், வலியர், அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம். சீர்மை : தக்கார்கண்ணே நிற்றல். மணி , பொன் முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின், அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.)

தமிழண்ணல் உரை: கல்வியே அழிவில்லாத சிறந்த செல்வமாகும். ஒருவனுக்கு மற்றவை எல்லாம் அதுபோன்ற சிறந்த செல்வம் ஆகா. 

கல்விச் செல்வம் பிறரால் கொள்ளை கொள்ள முடியாதது. கொடுத்தால் குறையாதது. மேலும் உயிரோடு ஒட்டியதாகும். ஏனைய பிரிக்கக்கூடிய செல்வங்களைவிட இது ஒருவனுக்கேயுரிய அவனுடைய சொந்தச் செல்வமாகி விடுவதால், 'மற்றையவை மாடல்ல' என்றார். (மாடு-செல்வம்).

பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒருவற்கு கேடில் விழுச்செல்வம் கல்வி மற்றைவை மாடு அல்ல.
பதவுரை: 

கேடில்-அழிவில்லாத; விழுச்செல்வம்-மதிப்புமிகு செல்வம்; கல்வி-கற்றல் (கல்வி அறிவு பெறுதல்); ஒருவற்கு-ஒருவனுக்கு. மாடல்ல-உடைமையல்ல; மற்றையவை-பிற எல்லாம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு: 
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:

மணக்குடவர்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி:

பரிப்பெருமாள்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி:

பரிதி: அழியாத செல்வமாவது கல்வி; 

காலிங்கர்: உலகத்து சிறந்தார் ஒருவர்க்கு எஞ்ஞான்றும் கேடுபடாத விழுமிய செல்வம் யாதோ எனின், சிறந்த நூல்களைக் கற்கும் கல்வியே; 

பரிமேலழகர்: ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது கல்வி; 

ஐயா சீமான் அவர்களே,

ஆடு, மாடு வளர்ப்பதோ, மேய்ப்பதோ நிச்சயம் மோசமான தொழில் அல்ல. அதுதான் விவசாயத்திற்கு அடிப்படையும் கூட. நேர்மையான வருமானம் ஈட்டும் எந்த தொழிலும் நிச்சயம் மோசம் கிடையாது.

ஆடு, மாடு மேய்ப்பதை யாராவது இழிவு செய்தால் அதனை கண்டிக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். 

ஆனால் அதற்காக திருக்குறளுக்கு நீங்கள் புதிய விளக்கமெல்லாம் கொடுக்காதீர்கள்.

பாவம் திருவள்ளுவரையாவது விட்டு விடுங்களேன்.



6 comments:

  1. நான் உங்கள் பெரும்பாலான பதிவுகளைத் தொடர்ந்து படிப்பவன். மிக அருமையாக எழுதுவர் நீங்கள். ஆனால் உங்கள் சார்புத்தன்மை காரணமான இந்தப் பதிவு இப்படி இருக்கிறது என நினைக்கிறேன்.

    இதில் நீங்கள் இப்படிக் கிண்டலடிக்கும் அளவுக்கு என்ன இருக்கிறது என எனக்குப் புரியவில்லை. மாடு எனும் சொல்லுக்குச் செல்வம் என்பது பொருள். பொதுவான பொருளும் அதுதான். குறிப்பிட்ட குறளிலும் அந்தப் பொருளில்தான் அச்சொல் ஆளப்பட்டுள்ளது. சீமானும் அதையேதான் சொல்கிறார். மாடு என்றாலே செல்வம் எனப் பொருள்; திருக்குறளே அப்படித்தான் சொல்கிறது. எனவே மாடு வளர்ப்பது இழிவானது இல்லை என்கிறார். இதில் என்ன தவறு?

    ReplyDelete
    Replies
    1. சார், உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.
      என் பதிவை மீண்டும் ஒரு முறை படியுங்கள்.
      மாடு வளர்ப்பது இழிவு என்று சொன்னால் அதைக் கண்டிக்க வேண்டும் என்றுதான் நானும் எழுதியுள்ளேன்.

      மாடு என்பது செல்வம் என்பதை நானும் கூட ஒப்புக் கொள்கிறேன்.
      ஆனால் இந்த குறள் சொல்ல வருவது
      "கல்வியைக் காட்டிலும் அழியாத செல்வம் எதுவுமில்லை"
      அதை இவர் உல்டா செய்வதுதான் சிக்கல்.
      வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவதே இவர் வாடிக்கையாகி விட்டது.

      Delete
    2. மாற்றுக் கருத்துக் கண்டும் சீற்றம் கொள்ளாமல் மறுமொழி அளித்தமைக்கு நன்றி!

      நீங்கள் இணைத்திருக்கும் காணொலியை மீண்டும் பார்த்தேன். அதில் "கல்வியைக் காட்டிலும் அழியாத செல்வம் எதுவுமில்லை" என்கிற பொருளை அவர் மாற்றியதாகவெல்லாம் தெரியவில்லை. குறிப்பிட்டு குறளைச் சொல்லி, அதிலிருக்கும் மாடு எனும் சொல்லை எடுத்துக்காட்டி, அது செல்வம் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்கிறார். எனக்கேதும் தவறாகத் தெரியவில்லை. நன்றி!

      Delete
    3. இதிலே சீற்றத்திற்கு என்ன இருக்கு சார்? மாற்றுக் கருத்துக்களை மதிப்பவன் நான். நாகரீகமற்ற முறையில் சிலர் அனாமதேயமாக எழுதுகையில்தான் அவர்களுக்கு சூடாக பதில் கொடுப்பேன்.

      Delete
  2. நம்பிக்கை ராஜ்May 9, 2019 at 7:46 AM

    சீமான் உளறிக்கிட்டு தான் இருக்கார்
    சரிதான் . ஆனால் சீமானை மட்டும் கடித்து குதறும் நீங்கள் பழமொழிகளையும் , ஆங்கிலத்தையும் கடித்து குதறி துவம்சம் பண்ணும் ஸ்டாலின் ஐ நீங்கள் கண்டு கொள்வதேயில்லையே ...
    சீமானை திமுக , பாஜக , கம்யூனிஸ்ட் , காங்கிரஸ் இப்படி அத்தனை கட்சி உறுப்பினர்களும் கிண்டல் செய்கின்றார்கள் . அதுக்கு அவர் ஒர்த் இல்லையே

    ( வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பேச கூடாது - இந்த வசனத்தை ஸ்டாலின் குரலில் படிக்கவும் )

    நம்பிக்கை ராஜ்
    அம்மா அதிமுக
    ( இப்போது எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை )

    ReplyDelete
  3. பலா மரக்கதையை கேட்டீங்களா?

    ReplyDelete