Saturday, May 4, 2019

செங்கொடியோடு ஓடிய போலீஸ்

எழுத்தாளரும் தலைமை ஆசிரியருமான தோழர் இரா.எட்வின் அவர்களின் முக நூலில் இருந்து சுட்ட பதிவு.



முப்பது ஆண்டுகளுக்குமேல் இருக்கும்.

தோழர் ராஜாமணி எழுதிய “ ஆஷர்மில் பழநிச்சாமி” என்ற சிறிய நூலினை கையில் திணித்த அண்ணன் நந்தலாலா,.

“ இந்த மாத சோலைக் குயில்களுக்கு இது பற்றி எழுது”

அப்போது திருச்சி த.மு.எ.ச விலிருந்து சோலைக் குயில்கள் என்றொரு கவிதை இதழை மாதா மாதம் கொண்டு வந்து கொண்டிருந்தோம்.

ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமைகளிலும் திருச்சி பழக்கடை பூங்காவில் ஒரு பதினைந்து இருபது பேர் கூடிவிடுவோம். நான், நந்தலாலா, புதிய கம்பன், பொன்னிதாசன், அண்ணன் முகில், முகவை அழகுடையான் போன்றோர் ஒவ்வொரு கூட்டத்திலும் தவறாது பங்கேற்போம்.

எல்லோரும் கவிதை வாசிப்போம். வர இயலாதவர்கள் எங்களில் யாருக்கேனும் கவிதைகளை அனுப்பி வைப்பார்கள். அதையும் அங்கே வாசிப்போம். மனுஷ்யப் புத்திரன் கவிதைகளும் அங்கே அந்த காலத்தில் வாசிக்கப் பட்டதுண்டு.

கவிதை வாசிப்பு முடிந்ததும் எல்லோருடைய கவிதைகளையும் அண்ணன் முகில் சேகரிப்பார். பிறகு ஒரு நாள் அவரது வீட்டில் ஆசிரியர் குழு கூட்டம் நடக்கும். வந்துள்ள கவிதைகளில் இருந்து சினிமா பாட்டுப் புத்தகம் அளவில் வரும் சோலைக் குயில்கள் தயாரிப்போம்.

அந்த இதழுக்குத்தான் அண்ணன் விமர்சனம் கேட்டார்.

கல்லூரியில் எங்கோ படித்துக் கொண்டிருந்த நேரம். பழநிச்சாமி ஆஷர் மில்லின் உரிமையாளர் போலும் என்கிற சராசரிப் புரிதலைத் தவிர வேறு எதுவும் ஆஷர்மில் பழநிச்சாமியைப் பற்றிஅந்தப் புள்ளியில் என்னிடமில்லை.

உள்ளே போகப் போகத்தான் விரிந்தது பிரமிப்பு. பழநிச்சாமி அந்த ஆலையில் பணியாற்றிய ஊழியர். தொழிற்சங்கத்தின் தலைவர்.

உரிமையாளார் பெயரோடு பொருத்திப் பேசப் படாத அந்த ஆலையின் பெயர் ஒரு ஊழியனோடு பொருத்திப் பேசப் படுகிறதென்பது அந்தக் காலத்தில் என்னை வியப்பின் உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பொதுவாக தொழிற் சங்கத் தலைவர்கள் என்றால் வறட்டுத் தனமாக மோதும் குணம் கொண்டவர்கள் என்று என்னுள் செழித்து வளர்ந்திருந்த பிம்பத்தை அது சுக்கல் சுக்கலாக கிழித்துப் போட்டது.

அதில் வரும் ஒரு சம்பவம் தொழிற்சங்கத் தலைவர்கள் எவ்வளவு நெளிவு சுழிவுடன் எதையும் வென்றெடுத்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. 

அப்போது இடதுசாரி இயக்கங்களும் தொழிற்சங்கங்களும் தடை செய்யப் பட்டிருந்த நேரம். பழநிச்சாமியின் தலைக்கு பத்தாயிரம் ரூபாய் அரசாங்கம் விலை வைத்திருந்த நேரம்.

திருப்பூர் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை. மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என்று அந்த நிலையிலும் அவருக்கு ஆசை.

எல்லோரும் அசந்து உறங்கிய முந்தைய இரவில் மாறு வேடத்தில் வந்து திருப்பூர் ரயில் நிலையம் அருகே மே தின வாழ்த்து சொன்ன ஒரு தட்டியை கட்டுகிறார்.

அடுத்த நாள் அங்கே ஒரு பெரும் திரள் கூடுகிறது. மாறு வேடத்தில் பழநிச்சாமியும் அங்கே இருக்கிறார். தட்டியை அகற்ற எத்தனித்த காவலர்கள் பின் வாங்குகிறார்கள். தட்டியின் கீழ் மூலையில் களி மண்ணால் வெடி போன்று செய்து கருப்புத் துணியால் சுற்றி திரி இணைத்து கட்டியிருந்தார்.

அதற்கு கீழே “தோழர்கள் தொட வேண்டாம். தொடும் துரோகிகள் அழியட்டும்” என்று எழுதியிருந்தார்.

எந்தக் காவலர் நெருங்குவார்.
அப்போது ஒரு ரயில் வருகிறது.
மாறு வேடத்தில் இருந்த பழநி சொல்கிறார்,
“ ரயில் வந்தால் அதிர்ச்சியில் வெடித்துவிடும் வெடி”
“ என்ன செய்யலாம்?”
“ரயிலை நிறுத்துங்கள்”
“எப்படி?”
“இந்தக் கொடிகளைக் காட்டுங்கள்”
தயாராய் வைத்திருந்த சிவப்புக் கொடிகளைத் தருகிறார்.

காவலர்கள் சிவப்புக் கொடிகளோடு ரயிலை நிறுத்த ஓடுகிறார்கள்.

சிரிக்கிறார் பழநிச்சாமி.

எந்தக் காவலர்கள் செங்கொடியை அழித்துவிட கங்கணம் கட்டிக் கொண்டிருந்தார்களோ அவர்கள் கைகளிலேயே செங்கொடிகள்.

அவரது புன்னகை எவ்வளவு உன்னதமானது.

மேதின வாழ்த்துக்கள்

பின் குறிப்பு 1

தோழர் ஆஷர்மில் பழநிச்சாமி அவர்களின் புகைப்படம் கிடைக்கவில்லை. அதனால் அவர் உயர்த்திப் பிடித்த செங்கொடியின் படத்தை பகிர்ந்துள்ளேன்.

பின் குறிப்பு 2

இந்த புத்தகம் எங்கு கிடைக்கும் என்பதை சொல்லுங்களேன் தோழர்களே!



5 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. எட்வினிடம் என்னை பற்றி கேட்டால்
    கண்ணீர் விட்டு கதறி அழுவார்

    ReplyDelete
    Replies
    1. நீதான் அனாமதேயமாச்சே, உன் பெயரைச் சொல்லு, அதுக்கப்பறமா அவரு அழராறான்னு பார்க்கறேன்.

      Delete
  4. அனானிகளின் பின்னூட்டங்கள் அநாகரீகமாக, ஆபாசமாக இருந்தால் நீக்கப்படும். அவைகளுக்கு பதிலும் அளிக்கப்படாது.

    ReplyDelete