Tuesday, April 21, 2015

அட்சய திருதியையும் ஆடித் தள்ளுபடிகளும்




கடந்த சில வருடங்களாகத்தான் ஆடித் தள்ளுபடி விற்பனையும் அட்சய திருதியை விற்பனையும் கொடி கட்டிப் பறக்கிறது.

ஆடித் தள்ளுபடி விற்பனை என்பதிலாவது சிறு நேர்மை இருப்பதாகக் கருதுகிறேன். திருமணக் காலம் இல்லாத ஆடி மாதத்தில் மந்தமாக இருக்கும் விற்பனையை வேகப் படுத்துவதற்காக என்ற காரணத்தை வணிகர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதே போல பழைய ஸ்டாக்கை ஆடித்தள்ளுபடியில் தள்ளி விட்டு விட்டால் தீபாவளி சமயத்தில் புதிய உருப்படிகளை விற்க முடியும் என்பதும் இதில் உள்ளது. வியாபாரம் என்பதைத் தவிர ஆடித் தள்ளுபடிக்கு எந்த புனித வண்ணமும் பூசப் படுவதில்லை. விலை உயர்த்தி தள்ளுபடி செய்வார்கள் போன்றவை வேறு விஷயம்.

ஆனால் அட்சய திருதியைக்கு சொல்லப்படுகிற காரணங்கள் இருக்கிறதே அதுதான் ரொம்ப ஓவர்.

கொஞ்சம் பட்டியல் பார்க்கலாமா?

எல்லா கதைகளும் மிகப் பெரிய கதையான மகாபாரதத்தின் உப கதைகள்தான்.

அன்றுதான் வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்தார்.

அன்றுதான் சூரியன் தருமனுக்கு அட்சயப் பாத்திரம் கொடுத்தார்.

வறுமையிலிருந்த குசேலன் கொண்டு வந்த ஒரு பிடி அவலை வாங்கி அவரை கிருஷ்ணன் பணக்காரனாக மாற்றிய நாள்.

கௌரவர் சபையில் பாஞ்சாலி துகிலுரியப்பட்ட வேளையில் கிருஷ்ணன் புடவை கொடுத்த நாள்.

இவற்றைத் தவிர கங்கை பூமிக்கு வந்த நாள், பரசுராமர் பிறந்தநாள் போன்ற பில்ட் அப்களும் உண்டு.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நமக்கு நல்லது, தங்கம் பெருகும் என்ற மாயையை உருவாக்கி நகைக்கடைகளில் கூட்டத்தை கூட்டி விட்டார்ர்கள்.

எத்தனை விளம்பரங்கள், எத்தனை தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், வழவழப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் அச்சடித்த பிரசுரங்கள், கடிதங்கள் என்று நம்முடைய தங்கத்தின் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்று நகைக்கடைக்காரர்கள் நம் மீது எவ்வளவு கரிசனமாக இருக்கிறார்கள்!

சிறு வயதில் புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில் மயிலிறகு வைத்தால் அது குட்டி போடும் என்று நம்பினோம். அது போன்றதொரு நம்பிக்கையை   அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால்  அது அதிகரிக்கும் என்று நகைக்கடைக்காரர்கள் உருவாக்கி விட்டார்கள்.

சிறு வயதில் ஏமாந்தால் தவறில்லை.

 

 

1 comment: