Saturday, April 11, 2015

எம்.ஜி.ஆர் நினைவகத்தில் ஜெ இருட்டடிப்பு







போன மாதமே எழுதியிருக்க வேண்டிய பதிவு இது.

ஆனால் தொடர்ந்து பல முக்கியமான விஷயங்கள் வந்ததால் இது கொஞ்சம் பின்னுக்குப் போய் விட்டது. நான் சொல்லும் செய்தி பலருக்கு முன்பே கூட தெரிந்திருக்கலாம்.

கடந்த மாதம் சென்னை ஹோட்டல் அக்கார்ட் மெட்ரோபாலிடன் சென்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருந்தேன். அங்கே மதிய உணவு முடிந்ததும் வேலூர் புறப்படலமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் சென்னை டி.நகரில் ஐஸ்வர்யா சில்க்ஸ் என்ற கடையில் சில்க் காட்டன் தள்ளுபடி போட்டிருப்பதாக எனது சகோதரிகள் என் மனைவியையும் அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

பெண்கள் பெரும்படையாக துணிக்கடைக்குள் செல்லும் வேளையில் வெளியே காத்திருப்பதை விட வேறு பரிதாபகரமான தருணம் ஆண்களுக்கு வேறு எதுவும் கிடையாது. அனேகமாக இதை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

அப்படிப்பட்ட பரிதாபகரமான தருணத்தில் பொழுதைத் தள்ள என்ன வழி என்று சிந்தித்தபோது எதிரிலே இருந்த எம்.ஜி.ஆர் நினைவகம் கண்ணில் பட்டது. சரி என்று உள்ளே நுழைந்தேன்.

அங்கே நினைவகத்தில் இருந்த பொருட்கள் பெரும்பாலும் திரைப்பட வெற்றி விழாக்களில் எம்.ஜி.ஆருக்குக் கொடுக்கப்பட்ட கேடயங்கள், அதிமுக துவக்கப்பட்ட காலத்தில் கொடுக்கப்பட்ட பரிசுகள், முதல்வரான பின்பு அரசுத்துறைகள் மூலமாக அளிக்கப்பட்ட நினைவுப் பரிசுகள் ஆகியவைதான் பிரதானமாக இருந்தன. இவற்றைத் தவிர என்று பார்த்தால் அவர் பயன்படுத்திய கார், உடல் பயிற்சி உபகரணங்கள், பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த அடிமைப்பெண்ணில் அவர் சண்டை போட்ட சிங்கம் ஆகியவையோடு அவர் இறந்த பின் அளிக்கப்பட்ட பாரத ரத்னா விருது, குல்லா, கடிகாரங்கள் இருந்தன. அவர் நடித்த திரைப்படங்களின் காட்சியோடு புகைப்படங்கள் இருந்தன.

கொஞ்சம் உன்னிப்பாக கவனித்த போது  ஒரே ஒரு புகைப்படம் நீங்கலாக வேறு எதிலும் ஜெ இல்லவேயில்லை. அதே போல் ஜெ அளித்த வெள்ளி செங்கோல் (கீழே உள்ள இந்த புகைப்படத்தை தேவைப்பட்டால் இப்போதும் அதிமுகவினர் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்) போன்ற பரிசுப் பொருட்களும் எதுவும் இல்லை. ஜெ தொடர்பான எதுவும் இருக்கக் கூடாது என்று திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது போலவே தோன்றியது.


எம்.ஜி.ஆர் நினைவகத்தைப் பார்த்து விட்டு பின்பு பாண்டி பஜார் சென்று நிதானமாக ஒரு காப்பி குடித்து விட்டு வரும் வரையிலும் கூட புடவைக்கடை வேலை முடியவில்லை என்பது மட்டுமல்ல, நாங்கள் அந்த பகுதியிலியே இல்லை என்பதைக்கூட யாரும் கவனிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

பி.கு : இந்த எம்.ஜி.ஆர் நினைவகத்தின் நிர்வாகி மீது கூட ஒரு கஞ்சா வழக்கு போடப்பட்டதல்லவா?



No comments:

Post a Comment