Sunday, April 5, 2015

அவர்களிடம் இவற்றையும் கேளுங்கள் மோடிஜி



http://photos.outlookindia.com/images/gallery/20121220/modi_ambani_tata_20121231.jpg

 http://www.abplive.in/incoming/article426979.ece/alternates/FREE_768/neeta%20ambani%20with%20modi.jpg
மரியாதைக்குரிய பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு மடல்

சமையல் எரிவாயுவிற்கான மானியத்தை கைவிட வேண்டும் என்று நீங்கள் செல்வந்தர்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளைப் படித்தேன். ஏழை மக்கள் மீது உங்கள் அரசு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிற பரிவு கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஏழை மக்களுக்குச் செல்ல வேண்டிய மானியத் தொகையை செல்வந்தர்களும் அனுபவிப்பது நியாயமல்ல என்ற உங்கள் சிந்தனை போற்றுதலுக்குரியது. தைரியம் மிகுந்த மனிதர் என்று உங்களைப் பற்றி நீங்களே உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு மாய பிம்பத்தை உங்கள் வேண்டுகோளில் நீங்கள் வெளிப்படுத்தியுள்ள பணிவும் பவ்யமுமே தகர்த்து விட்டது என்பது வேறு விஷயம். மானியத் தொகை வேண்டாம் என்று சொன்னவர்களின் எண்ணிக்கை இன்னும் சில ஆயிரங்களிலேயே இருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் சொல்லும் போது இரண்டரை லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் மானியத் தொகையை விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று நீங்கள் சொல்வதை வழக்கம் போல மிகைப் படுத்துகிறார் என்று சிலர் சொன்னாலும் அப்படிச் சொல்வதன் மூலம் மற்றவர்களையும் உங்கள் கருத்தின் பக்கம் வரவழைக்கும் ஒரு வணிக உத்தி என்று கூட எடுத்துக் கொள்ளலாம்.

ஒரு அரசிற்கு தனது குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமைகள் உள்ளது. தொழில் துறை மட்டுமன்றி விவசாயத் துறையிலும் வளர்ச்சியை பெருக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. மனிதன் உயிர் வாழ வேண்டிய அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றை பெறுவதை உறுதி செய்வதும் அரசின் முக்கியமான பணியாகும். அவற்றை மக்கள் பெறுவதற்கு அவர்களிடம் வாங்கும் சக்தி இருக்க வேண்டியது அவசியமாகும். வாங்கும் சக்தி இருப்பதற்கு அவர்களிடம் ஒரு வேலை இருக்க வேண்டியது என்பதும் அவசியமாகும். மக்களிடம் உள்ள வாங்கும் சக்தி போதுமானதாக இல்லாத போது அதை மானியங்கள் மூலமாகவோ இல்லை வேறு வழியிலோ ஈடு கட்ட வேண்டியது அரசின் கடமை. அப்படி இருக்கையில் மானியம் என்பதை ஒரு மோசமான ஒன்றாக உங்கள் அரசும் சரி, உங்களுக்கு முன்னர் இருந்த அரசும் சரி சித்தரித்து வருவது ஏற்புடையதும் அல்ல, நியாயமும் அல்ல.

ஏழை, நடுத்தர மக்கள் நலனுக்காக சில ஆயிரம் கோடிகளை மானியமாக ஒதுக்குவதற்கு மனமில்லாத நீங்கள், ஏழை மக்கள் நலனுக்காக சமையல் எரிவாயு மானியத்தை விட்டுத் தருமாறு செல்வந்தர்களிடம் மன்றாடியுள்ளீர்கள். ஏன் சமையல் எரிவாயு மானியத்தோடு நிறுத்தி விட்டீர்கள்? அவர்கள் விட்டுத்தர இன்னும் ஏராளமாக இருக்கிறதே!

ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்க வேண்டிய வருமான வரி, சொத்து வரி, கார்ப்பரேட் வரி ஆகியவற்றில் உங்கள் அரசால் வசூலிக்க முடியாமல் போன தொகை கடந்த ஆண்டில் மட்டும் 5,80,000 கோடி ரூபாய் என்று உங்கள் நிதியமைச்சர் பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஊதியம் வாங்கும் நடுத்தர ஊழியன் செலுத்த வேண்டிய வருமான வரியைக் கூட அவர்களது ஊதியத்தில் பிடித்தம் செய்கிற போது நீங்கள் வரி ஏய்ப்பு செய்யாமல் ஒழுங்காக வரி கட்டுங்களேன் என்று செல்வந்தர்களிடம் ஏன் முறையிடக் கூடாது?

கட்டாத வரி 30 % ஆக இருந்தால் என்ன? 25 % ஆக இருந்தால் என்ன? என்று கார்ப்பரேட் வரியை குறைத்துள்ளீர்கள். அந்த வரி குறைப்பு அவசியமில்லை என்று சொன்னால் நாட்டுக்கு நலம் என்று வரி குறைப்பை உங்கள் நண்பர்களான கார்ப்பரேட் கம்பெனிகளை விட்டுக் கொடுக்கச் சொல்லலாமே பிரதமர் அவர்களே!

ஒவ்வொரு இந்தியனுடைய வங்கிக் கணக்கிலும் பதினைந்து லட்சம் ரூபாய் போடுவோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் சொன்னீர்கள். அது “சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னது” என்று உங்கள் நிதியமைச்சர் சொல்லி விட்டார். அது கிடக்கட்டும், பல லட்சம் கோடி ரூபாய்களாக வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கள்ளப்பணம் எங்கள் வங்கிக் கணக்கிற்கு வராவிட்டாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அரசின் கஜானாவிற்காவது வந்து சேரட்டும். இந்தியாவின் பொருளாதார நன்மை கருதி கள்ளப்பணப் பேர்வழிகளை அவர்கள் பதுக்கிய பணத்தை இந்தியாவிற்குக் கொண்டு வரச் சொல்லுங்களேன்.

இலவசமாகவோ இல்லை அடி மாட்டு விலையிலோ நிலம் பெற்று தடையில்லா மின்சாரமும் தண்ணீரும் பெற்று வரி விடுமுறை, ஏற்றுமதி ஊக்கத் தொகை என்றெல்லாம் அனுபவித்து கொள்ளை லாபத்தை சுருட்டிக் கொண்ட பெரும் முதலாளிகளை தொழிலமைதியை பாதுகாக்க இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை மதித்து நடக்கச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாமே பிரதமர் அவர்களே!

ஐம்பதாயிரம், அறுபதாயிரம் என்று விவசாயக் கடன் வாங்கி திருப்பித் தராத விவசாயிகளின் புகைப்படங்களை நாளிதழில் வெளியிட்டு அவர்களை அவமானம் செய்யக் கூடிய விதத்தில் நடைமுறைகள் உள்ள நாட்டில்தான் கடன் வாங்கித் திருப்பித்தராத பெரும் நிறுவனங்களின் பெயரைக் கூட வெளியிட நிலையும் இருக்கிறது. இச்சூழலில் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி வங்கிகளின் நலனை பாதுகாப்பதற்கான கோரிக்கையை அவர்களிடம் முன் வையுங்களேன்.

இவற்றையெல்லாம் நீங்கள் கோரிக்கையாக முன்வைத்து மன்றாட வேண்டிய அவசியம் கிடையாது. உங்களது அரசாங்கம் தனது பொறுப்பை உணர்ந்து உறுதியுடன் செயலாற்றினாலே போதுமானது. முதலாளிகள் கைவசம் பொம்மையாக இருக்கிற உங்களால் அது சாத்தியமாக போது குறைந்தபட்சம் கோரிக்கையாவது வைத்திடுங்கள்.

அதை விடுத்து சமையல் எரிவாயு மானியத்தை கைவிடுங்கள் என்று கோருவது மானியம் என்பது அரசு வழங்கும் தர்மம் என்ற உணர்வையும் குற்ற உணர்ச்சியையும் ஏழை மக்கள் மனதில் உருவாக்கும் ஒரு தந்திரமே. உங்களின் இதர தந்திரங்கள் எடுபடாமல் பல்லிளித்து நிற்பது போன்ற கதிதான் இதற்கும் உருவாகும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment