நேற்றைய தீக்கதிர் நாளித்ழில் தோழர் எஸ்.பி.ராஜ்ந்திரன் எழுதி வெளியான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். பணிக்காலம் முடிந்த சி.பி.ஐ(எம்) எம்.பி தோழர் ராஜீவ் அவர்களை பாராட்டுகிற போது அவர் எங்கள் கட்சியில் இல்லையே என்று பொறாமைப்படும் அளவு அவரது செயல்பாடு இருந்தது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
அமைச்சர் மனதில் கொள்ளவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.
அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்ததால்தான் சிறப்பாக பிரகாசித்தார். உங்கள் கட்சியில் இருந்தால் அவரது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பே தராமால் மோடி பஜனையில் கோரஸ் பாடுபவராக மாற்றி இருப்பீர்கள்.
அதே போல பொது நலன் விரும்பும் சுய சிந்தனை உடையவர்கள் போயும் போயும் உங்கள் கட்சியில் சேருவார்களா என்ன?
மூழ்கும் கப்பல் அல்ல ; நீர் மூழ்கிக் கப்பல்!
எஸ்.பி.ராஜேந்திரன்
“நாங்கள் மூழ்கும் கப்பலல்ல; நீர்மூழ்கிக் கப்பல்”.- ஏப்ரல் 19ம் தேதி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர்
வலைப்பக்கத்தில் இப்படி ஒரு வாசகம் பளிச்சிட்டது. அடுத்த சில
நிமிடங்களிலேயே இந்த வாசகத்திற்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து
கருத்து வெளியிட்டார்கள். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மூழ்கும்
கப்பல்; அதற்கு சீத்தாராம் யெச்சூரி தலைமையேற்றிருக்கிறார்” என்று சிவசேனா
கட்சி ஆத்திரத்தைக் கொட்டி தனது பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதியிருந்தது.
இந்த வார்த்தைகள் வலைத்தளங்களில் பளிச்சிட்ட அடுத்த நொடியே, மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள் டுவிட்டர் பக்கத்தில் இட்ட
பதிவுதான் “நாங்கள் நீர்மூழ்கிக் கப்பல்” என்பது.
ஏப்ரல் 23ம் தேதி
மாநிலங்களவையின் பட்ஜெட் தொடருக்கான இரண்டாவது அமர்வு துவங்கியது.
அந்த
அவையில் முதல் ஒருமணி நேரம் நடைபெற்ற நிகழ்வுகளை ராஜ்யசபா டிவியில்
பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு அற்புதமான காட்சியைக் காணத்
தவறிவிட்டார்கள் என்றே பொருள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்
எதிரான கட்சி பாரதிய ஜனதா கட்சி. ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த
அமைச்சர்களே எழுந்து நின்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதை உளப்பூர்வமான
மகிழ்ச்சியோடு அறிவித்து பாராட்டு மழை பொழிந்தனர்.
அந்த நிகழ்வில்
கடைசியாகப் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற அலுவல் துறை
அமைச்சருமான வெங்கய்யா நாயுடு, இந்த அவையைச் சேர்ந்த நமது சக தோழரான
சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு
இங்கே அமர்ந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை; இந்த அவைக்குப் பெருமை என்று
புகழாரம் சூட்டினார்.
இந்திய அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சக்தி என்பது பற்றி,
சிவசேனாவுக்கு நாம் பதிலளிக்க வேண்டியது இல்லை; வெங்கய்யா நாயுடுவின்
மேற்கண்ட வார்த்தைகளே போதுமானது. உண்மையில் மாநிலங்களவையில் அன்றைய தினம்
நடந்தது இதற்கு முன்பு இல்லாத ஒரு நிகழ்வாகவே இருந்தது என நாடாளுமன்ற
பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மாநிலங்களவையில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக
பணியாற்றி, தனது பணியை வெகு சிறப்பாக நிறைவு செய்த, கேரளத்தைச் சேர்ந்த
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பி.ராஜீவ் மற்றும் இந்திய
கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யாகப் பணியாற்றி நிறைவு செய்த அச்சுதன்
ஆகியோருக்கு வழியனுப்பு நிகழ்வாக அந்த அமர்வு நடைபெற்றது.
ராஜீவைப்
பற்றியும் அச்சுதனைப் பற்றியும் பேசும்போதுதான் வெங்கய்யா நாயுடு
போன்றவர்கள் சீத்தாராம் யெச்சூரியைப் பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியைப் பற்றியும் மேற்கண்டவாறு பேசினார்கள்.அனைத்துக் கட்சித்
தலைவர்களும், கட்சி வேறுபாடின்றி மேற்கண்ட இரண்டு இடதுசாரி எம்பிக்களையும் -
குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியாக செயல்பட்ட
பி.ராஜீவின் பங்களிப்பையும் பற்றி புகழ்ந்து தள்ளினார்கள் என்றே
கூறலாம்.நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக விதி 93 (2)ன் கீழ்
திருத்தம் கொண்டு வந்து வரலாறு படைத்தவர் பி.ராஜீவ் என்று அந்த வாழ்த்து
அரங்கத்தைத் துவக்கி வைத்து அவரது சக தோழரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் மற்றொரு கேரள எம்பியுமான கே.என்.பாலகோபால் கூறினார்.
இதில்
மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூறியதுதான் இன்னும் ஆர்வத்தைத்
தூண்டக்கூடியது.“வேதிப் பொறியியல், சட்டம், பொருளாதாரம் எனப் பல்வேறு
படிப்புகளைப் படித்தவர் பி.ராஜீவ். இத்தகைய கலவை என்பது மிகவும் அரிதாகும்.
வழக்கறிஞர் என்றால் அவருக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அதுதான்
அடிப்படை விதி. அந்த விதியை ராஜீவ் முழுமையாக வரித்துக் கொண்டிருந்தார்.
அதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடைசி வரை
அதில் சட்ட ரீதியாகப் போராடுவார். நாடாளுமன்றத்திலும் சரி, இதர அரசியல்
பணி களிலும் சரி, அவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்துமிகவும் அடக்கத்துடனே
குறிப்பிடுவார். நான்தான்மிகவும் அடக்கமானவன் என்று நினைத்துக்
கொண்டிருந்தேன். ஆனால், ராஜீவை இந்த அவையில் சந்தித்தபிறகு நான் எனது
கருத்தை மாற்றிக்கொண்டேன்.
நான் அவரைப் பின் பற்றவே விரும்புகிறேன்”
என்று அதிமுக மாநிலங் களவைக்குழுத் தலைவர் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன்
கூறியது அனைவரையும் ஈர்த்தது. நாடாளுமன்ற விதிகளை மிகச்சரியாக அமலாக்கியதன்
மூலம் இந்த அவையில் முத்திரைப் பதித்தவர் ராஜீவ்; எல்லா உறுப்பினர்களும்
பொதுவாக அவையின் விதிகளை உற்றுநோக்குவார்கள்; ஆனால் பி.ராஜீவ்தான் அந்த
விதிகளின் உண்மையான பொருளை விளக்கி அனைத்து உறுப்பினர்களையும் ஏற்குமாறு
செய்தவர்; அவரை ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ என்றே சொல்ல வேண்டும் எனப்
புகழ்ந்தார் திமுக உறுப்பினர் திருச்சி சிவா. து.ராஜா, மாயாவதி, ராம்
கோபால் யாதவ், டெரிக் ஓ பிரையன் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும்
பாராட்டினார்கள். முன்னதாகப் பேசிய அவை முன்னவரும் நிதியமைச்சருமான அருண்
ஜெட்லி ஒரு படிமேலே சென்று, “அவை விதிகள் குறித்து நன்கு அறிந்தவர்
பி.ராஜீவ், அவரை அவைக்கு மீண்டும் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை
கேட்டுக்கொள்கிறேன்“ என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும்
எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் இதே விருப்பத்தை
வெளியிட்டார்.அவையில் இதையெல்லாம் ஆர்வத்துடன் ரசித்துக்
கேட்டுக்கொண்டிருந்த சீத்தாராம் யெச்சூரி எழுந்து, “எனது அருமைத் தோழன்
பி.ராஜீவ் இந்த அவையில் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். ராஜீவுக்கு
கேரளத்தில் எமது கட்சி முக்கியப்பொறுப்பினை அளித்திருக்கிறது. கேரளத்தில்
மிகப்பெரிய மாவட்டமான எர்ணாகுளம் மாவட்டக் கட்சிச் செயலாளராக அவர் தேர்வு
செய்யப்பட்டிருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நாட்டின்
முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் எப்படி பங்காற்ற
முடியும் என்பதற்கு ராஜீவ் ஒரு எடுத்துக்காட்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
உறுப்பினர் அச்சுதனும் அப்படியே செயல்பட்டார். ராஜீவ் இந்த அவையிலிருந்து
விடை பெற்றிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு இரட்டிப்பு இழப்பே. அதே
நேரத்தில் அவர், களத்தில் பணியாற்றுவார்” எனக்குறிப்பிட்டார்.
முத்தாய்ப்பாக
பேசிய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “ராஜீவ் ஒரு சிறந்த அறிவாளி; அவையின்
விதிகளை தனது விரல் நுனியில் வைத்திருந்தவர். அப்படிப்பட்ட அறிவுத்திறன்
படைத்த நபர் எங்கள் கட்சியில் இல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறாரே
என்று பலமுறை நான் பொறாமைப்பட்டது உண்டு” என்றார். அப்போது எழுந்த
சீத்தாராம் யெச்சூரி, “அவர் அறிவுத்திறன் படைத்த நபராக இருப்பதால்தான்
மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறார்” என்று குறிப்பிட்ட போது அவையில்
சிரிப்பலையும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது. அந்தத் தருணத்தைச்
சமாளித்துக்கொண்ட வெங்கய்யா நாயுடு, “நான் உங்கள் கட்சியைப் பார்த்து
பொறாமைப்பட்டேன் என்றுதான் சொன்னேன்“ எனக்குறிப்பிட்டார்.
அதிமுக
தலைவரும் சரி, திமுக உறுப்பினரும் சரி, பாஜக அமைச்சரும் சரி எல்லா
தரப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை, அதன்
தலைவர்களை, அதன் எம்.பி.க்களை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள்,
எடைபோடுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த நிகழ்வு இருந்தது. வெங்கய்யா
நாயுடு போன்றவர்கள் பொறாமைப்படுவதற்கு இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன.
கட்சியின் புதிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் சரி, முன்னாள்
பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் சரி, அறிவிற் சிறந்த மேதைகள்.சீத்தாராம்
யெச்சூரி, சென்னையில்பிறந்தவர். பின்னர் அவரது பெற்றோர் தில்லிக்கு
இடமாற்றல் பெற்றபோது அங்கு சென்று குடியரசுத் தலைவரின் எஸ்டேட் பள்ளியில்
படித்தவர். பள்ளிக்கல்வியில் சிபிஎஸ்இ தேர்வில் ஒட்டுமொத்த இந்தியாவிலும்
முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்.
தில்லி செயிண்ட் ஸ்டீபன்
கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்
எம்.ஏ.பொருளாதாரம் பயின்றவர். 1975ல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது,
பிஎச்டி படிப்பை நிறைவு செய்ய முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது.
இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
மத்தியக்குழு, மத்திய செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என அடுத்தடுத்து
கட்சிப் பொறுப்புகளிலும் அரசியல் பணியிலும் உயர்ந்தவர் யெச்சூரி. பிரகாஷ்
காரத்தும், இவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்
தலைவர்களாகப் பணியாற்றி அனைத்துத்தரப்பு மாணவர்களையும் ஈர்த்தவர்கள். ஒரு
பிரகாஷ் காரத், ஒரு சீத்தாராம் யெச்சூரி மட்டுமல்ல, ஒரு பி.ராஜீவ்
மட்டுமல்ல... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏராளமான அறிவுஜீவிகளைப் பெற்ற
கட்சி. இன்றைக்கு உலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில்
சிக்கியிருக்கிறது.
அதை எப்படி மீட்பது என்று ஆலோசனை நடத்துவதற்கு
ஐக்கிய நாடுகள் சபை தேர்வு செய்த ஒரு சில தலைசிறந்த பொருளாதார மேதைகளில்
ஒருவர் டாக்டர் பிரபாத் பட்நாயக். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக
பொருளாதாரத்துறை பேராசிரியரான பிரபாத் பட்நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டிலும் அவர் பிரதிநிதியாக பங்கேற்று
வருகிறார். அதேபோல இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவர்
டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக
பொருளதாரத்துறை தலைவராக பணியாற்றிய இந்தப் பேராசிரியர் மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்புமிக்க ஊழியர். கேரளத்தில் டி.எம்.தாமஸ்
ஐசக், எம்.ஏ.பேபி போன்ற சிறந்த அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள்.
மேற்குவங்கத்தில் ஏராளமானோரைக் குறிப்பிடலாம். தெற்கு 24 பர்கானா
மாவட்டத்தில் கட்சி செயலாளராக அன்றாடப் பணிகளில்
ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார், உலகிலேயே தலைசிறந்த வெகுசில உயிரி மருத்துவப்
பொறியாளர்களில் ஒருவரான டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி
வரும் இவர் தனது வாழ்வையே மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார். நாடே
போற்றும்பொருளாதார மேதைகளில் ஒருவரான டாக்டர் அசிம்தாஸ் குப்தா,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி
வருகிறார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவராக
பணியாற்றியவர்.கேரளத்தில், திரிபுராவில் ஆந்திராவில் பல்வேறு
பல்கலைக்கழகங்களில், எழுத்துலகில் என அறிவுத்தளத்தில் தலைசிறந்து
விளங்கக்கூடிய நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக,
ஊழியர்களாக, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதான் வெங்கய்யா
நாயுடு வெளிப்படுத்திய பொறாமைக்குக் காரணம்.அந்தப் பொறாமையே, ‘மூழ்கும்
கப்பல்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த சிவசேனா
கட்சிக்கு நாம் அளிக்கும் பதில்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteபிஜேபி காரன் என்றாலே அசிங்கம் பிடிச்ச ஆபாசப் பேர்வழிகள்தானா?
DeleteIndecency is BJP's Culture
Delete