Wednesday, April 22, 2015

முப்பது பக்கங்களில் உண்மையான புரட்சித்தலைவர் வரலாறு


தோழர் லெனின் அவர்களின் பிறந்தநாளான இன்று சமீபத்தில் நான் வாங்கி படித்த இந்த நூல் பற்றி பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

 
 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு பிப்ரவரி மாதம் சென்னையில் நடைபெற்ற போது பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்ட நூல்களில் ஒன்று லெனின் – வாழ்க்கை வரலாறு. மார்க்சிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் வெ.மன்னார் எழுதிய நூல் இது.

முப்பதே பக்கங்களில் உலகின் முதல் புரட்சித்தலைவரான தோழர் லெனின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக அளித்துள்ளார்.

ஜார் மன்னனின் ஆட்சிக்கு எதிராக  போராடிய காரணத்தால் அவரது சகோதரரும் அவருக்கு மார்க்சிய உணர்வை ஊட்டியவருமான அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட்டது முதல் லெனின் அவர்களின் மரணம் வரை உள்ள வாழ்வை மனதில் நிற்கும் வண்ணம் அளித்துள்ளது தோழர் மன்னார் அவர்களின் சாதனை என்றே சொல்லலாம்.

வழக்கறிஞராக தேர்ச்சி பெற்று இளைஞர்களை அணி திரட்டி அவர்களுக்கு வர்க்க உணர்வூட்டி அவர்கள் மத்தியில் செயல்பட்டவர் தோழர் லெனின். அதனால் ஜாராட்சியால் சைபீரிய சிறைக்கு அனுப்பப் படுகிறார். நாடு நாடாகச் செல்கிறார். பத்திரிக்கைகள் துவக்குகிறார். கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டுகிறார். அதிலும்  போல்ஷ்விக், மென்ஷ்விக் என்று பிளவு வருகிறது. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாக முற்போக்குக் கருத்துக்களை முன்னெடுக்க லெனின் துவக்கிய தீப்பொறி என்று அர்த்தம் தருகிற இஸ்க்ரா பத்திரிக்கை மென்ஷ்விக் கையில் செல்கிறது.

1905 வருடத்து புரட்சி தோற்றுப் போனாலும் அதற்காக சளைக்காமல் அமைப்பை வலுப்படுத்துவது, தொழிலாளர்களை அணி திரட்டுவது, பிராவ்தா என்ற புதிய பத்திரிக்கை மூலம் எழுச்சியூட்டுவது போன்ற பணிகளைச் செய்கிறார். ரஷ்ய நாடாளுமன்றமான டூமாவிற்கு போல்ஷ்விக்குகள் தேர்ந்தெடுக்கப்படுகிறனர். அவர்களுக்கு வழி காட்டுகிறார். இறுதியில் அக்டோபர் 1917 ல் புரட்சி வெடிக்கிறது. ரஷ்யா செம்படை வசம் வருகிறது. உலகின் முதல் சோஷலிச அரசின் தலைவராகிறார் தோழர் லெனின்.

அதன் பின் புரட்சியைக் காப்பதற்கும் ரஷ்யாவை வளர்ச்சியான நாடாக மாற்றுவதற்கும் கடுமையாக உழைக்கிறார். கல்வி, சுகாதாரம், அறிவியல், விவசாயம், தொழில் என அனைத்து துறைகளிலும் மேம்பாடு காண முயற்சிகள் மேற்கொள்கிறார். இளைஞர்கள் கம்யூனிஸ்டாக மாற வேண்டுமென்றால் அவர்கள் விவசாயிகளுடனும் தொழிலாளர்களோடும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று வழிகாட்டியவர் அவர். ஓய்வெடுக்க வேண்டிய அவசியத்தை அவரது உடல்நிலை உருவாக்கினாலும் அதை பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து இறுதியில் மரணத்தை தழுவிகிறார் லெனின்.

இந்த விபரங்களை படிப்பதற்கு சுவையான முறையில் தோழர் மன்னார் அளித்துள்ளார்.

நூலிலிருந்து சில பத்திகளை மட்டும் அப்படியே தந்துள்ளேன்.

“புரட்சியைப் பற்றி தெரிந்து கொள்ள ரஷ்யா சென்றிருந்த புகழ்பெற்ற வரலாற்று நாவலாசிரியர் எச்.ஜி.வெல்ஸ் நாடு முழுதும் சுற்றிப் பார்த்தார். எங்கு நோக்கினும் வறுமையும், பசியும், யுத்ததால் சீரழிந்துள்ள நாட்டின் தொழில் மற்றும் விவசாய நிலையைக் கண்ட, அவர் எப்படி இதையெல்லாம் சீரமைக்கப் போகிறீர்கள் என்று லெனினிடம் வினவினார். இன்னும் பத்தாண்டு காலம் கழித்து வந்து பாருங்கள், நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்றார். இதனை வெல்ஸ் ‘கிரெம்ளினில் உள்ள நபர் கனவு காண்கிறார்’ என்று கிண்டலடித்தார். ஆனால் அந்த வார்த்தையின் உண்மையினைப் பின்னாளில் மீண்டும் ரஷ்யா சென்ற வெல்ஸ் உணர்ந்து கொண்டார்.”

“நீங்கள் போல்ஷ்விக் கட்சியின் பிரதிநிதிகள். உங்கள் நடத்தையைக் கொண்டுதான் கட்சியை மதிப்பிடுவார்கள். எனவே நல்ல உதாரணத்தைக் காட்டுவது உங்கள் கடமையாகிறது”.

“குழந்தைப்பேறு பற்றி ஒருமுறை குருப்ஸ்கயா (லெனின் மனைவி) விடம் வினவியர்களிடம் அவர் கூறினார். புரட்சி நடத்துவது குறித்தும் அது நிறைவேறியபின் புதிய சமூகத்தை அமைப்பது குறித்துமே எங்கள் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தியது என்றார்”



ஒரு மகத்தான தலைவனைப் பற்றிய வரலாற்றை சிறப்பான முறையில் கனியின் சாறாக அளித்த தோழர் வெ.மன்னார் அவர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்.

2009 ம் வருடம் எங்கள் கோட்டச்சங்க மாநாடு போளூரில் நடைபெற்ற போது அம்மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவராக சிறப்பாக வழிகாட்டிய தோழர் வெ.மன்னார் அவர்களை அப்போதைய போளூர் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஸ்ரீதரன் அவர்கள் கௌரவித்த போது எடுத்த புகைப்படம் மேலே உள்ளது.

1 comment:

  1. நன்றி நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்

    ReplyDelete