Wednesday, April 1, 2015

பாவம் யார் வாங்கின பைக்கோ இது?





கடந்த மாதம் வாணியம்பாடி சென்றிருந்த போது வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வெளியே இருந்த மாநகராட்சி இரு சக்கர வாகன நிறுத்தகத்தில் என் வாகனத்தை நிறுத்திய போது அந்த ஸ்டாண்டின் ஒரு மூலையில் இந்த வாகனம் நிறுத்தப்பட்டு தூசியில் முழுகிப் போயிருந்ததை கவனித்தேன்.

நேற்று குடியாத்தம் சென்றிருந்தேன். அதே இரு சக்கர வாகன நிறுத்தகத்தில் நேற்றும் என் வண்டியை நிறுத்திய போது அந்த பைக் இன்னும் கூடுதல் தூசியும் அழுக்கும் படிந்து அதே இடத்தில் அப்படியே இருந்தது.

ஆர்வம் தாளாமல் டோக்கன் கொடுப்பவரிடம் அந்த வண்டி பற்றி கேட்ட போது

“அது ஏதோ திருட்டு வண்டியாம் சார், போலீஸ்தான் இங்க கொண்டு வந்து நிறுத்திட்டு போனாங்க. அதுக்கு மேல நமக்கு ஒன்னும் தெரியாது சார்”

என்று சொல்லி அவர் முடித்துக் கொண்டார்.

திருட்டு வண்டி என்றால் திருடப்பட்ட வண்டியா இல்லை திருடுவதற்கு பயன்பட்ட வண்டியா இல்லை திருடர்களின் வண்டியா?

எதுவாக இருந்தாலும் அது நிறுத்தப்பட வேண்டிய இடம் காவல் நிலையம்தானே? அதை விடுத்து இப்படி அனாதை போல பொது இடத்தில் நிறுத்தி மழையில் நனைய வைத்து வெயிலில் காய வைத்து ஓடக் கூடிய வாகனத்தை காயலான் கடை போல மாற்றுவது எப்படி சரியாகும்?

காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்களின்  கதையும் மாறுபட்டது அல்ல. போலீஸ்காரர்கள் தங்களின் சொந்த சேமிப்பிலோ அல்லது கடனிலோ வாங்கிய வாகனம் என்றால் இப்படி நாசமாக அனுமதிப்பார்களா?

அடுத்தவன் பொருள் என்றால் அவ்வளவு அலட்சியம், அது தங்களுடைய சாட்சிப் பொருளாக இருந்தாலும் கூட.

2 comments:

  1. சும்மா வந்த பொருளுக்கு உரையும் இல்லை மாற்றும் இல்லை என்று என் உறவினர் ஒருவர் அடிக்கடி சொல்வார். இங்கு அது நிரூபணமாகிக் கொண்டு இருக்கிறது.

    //தங்களுடைய சாட்சிப் பொருளாக இருந்தாலும் கூட.// சாட்சிப்பொருள் மட்டுமல்ல. உயிருள்ள சாட்சி மனிதர்களுக்கும் அதே நிலைதான். கேஸ் ஜெயிச்சா என்ன, தோற்றால் என்ன?

    ReplyDelete
  2. வண்டி எண்ணைக் கொண்டு உரியவரைக் கண்டுபிடித்து
    வெகு எளிதாக காவல் துறையினர் ஒப்படைத்திருக்கலாம்
    பாவம்

    ReplyDelete