Friday, April 24, 2015

மோடிஜியால் தன் நண்பர்களை கண்டிக்க முடியுமா?





இந்திய தொழிலகங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.

அவர் என்னமோ சூடாகத்தான் கேட்டுள்ளார். ஆனால் இந்த சூட்டை மோடி வகையறாக்கள் உணர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

பிரதமர் மோடி, இந்த முதலீட்டையாவது திரும்பக் கொண்டு வர முடியுமா?
 http://www.thehindu.com/multimedia/dynamic/00001/IN24_BRINDA_1585f.jpg
                                                               
அடிக்கடி நிகழும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரது பயணத்துணையாக இந்தியாவின் சக்தி மிக்க செல்வந்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்கள் இடம் பெறுகின்றனர். நமது நாட்டின் மிகச் சிறந்த தூதர்களா அவர்கள்?

இங்கிலாந்தில் உள்ள பதினெட்டாயிரம் எஃகு தொழிலாளர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. 2007 ல் அந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருந்த கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை டாடா 12 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். முப்பது வருடங்களாக இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு ஸ்டீல் துறை முதலாளியும் செய்ய முடியாத ஒரு சாதனையை ஏழே ஆண்டுகளில் டாடா நிகழ்த்தியுள்ளார். வேலை நிறுத்த கருத்துக் கணிப்புத் தேர்தலை நோக்கி தங்கள் தொழிலாளர்களை தள்ளியிருப்பதுதான் அந்த சாதனை. தங்கள் உரிமைகளை முடக்க முயலும் நிர்வாகத்தின் முரட்டுத்தனமான அணுகுமுறைக்கு எதிராக “காலவரையற்ற வேலை நிறுத்தம்” மேற்கொள்ளலாமா என்ற “வேலை நிறுத்த கருத்துக் கணிப்பு தேர்தல்” மே 6 முதல் மே 29 வரை நடக்கப் போகிறது. இதற்கான முறையான தாக்கீது ஏப்ரல் 29 அன்று  நிர்வாகத்திடம் வழங்கப்பட இருக்கிறது.

அங்கே உடனடிப் பிரச்சினையாக பென்ஷன் திட்டம் உள்ளது. இங்கிலாந்தில் ஒட்டு மொத்த ஸ்டீல் துறைக்குமாக பிரிட்டிஷ் ஸ்டீல் பென்ஷன் திட்டம் உள்ளது. அறுபது வயதில் ஓய்வு பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் எட்டு சதவிகிதமும் முதலாளிகள் கொடுபடாத ஊதியம் (Deferred Wage) என்ற அடிப்படையில்  பனிரெண்டு சதவிகிதமும் அளிப்பார்கள். டாடா தொழிலாளர்கள் 65 வயது வரை வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார். அப்படி தொழிலாளர்கள் 60 வயதில் ஓய்வு பெற விரும்பினால் அவர்கள் தங்களுக்கான பென்ஷனின் 25 % வெட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அங்கேயுள்ள தொழிலாளர்கள் இதைக் கணக்கிட்டுப் பார்த்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய்) வரை இழப்பு நேரிடும் என்று கண்டறிந்துள்ளனர். டாடாவிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டது. ஒட்டு மொத்த பென்ஷன் திட்டத்தையே ரத்து செய்யப்போவதாய் இப்போது டாடா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

“என் உள்ளம் கேட்கும் இன்னும்” என்ற விளம்பர வாசகத்தின்  மீது மிகுந்த பற்றுள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர்களின் ஊதியங்கள், உரிமைகள், சலுகைகளை வெட்ட வழிவகுத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைப்பதை நிறுத்திக் கொள்ளவே மாட்டார்கள். இந்த தத்துவத்தை உள்ளடக்கியதுதான் மோடியின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம். தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்ற ஆசையைக் காட்டித்தான் மோடி உலகெங்கிலும் அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறார்.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்பது வேறொன்றுமில்லை, காலம் காலமாக போராட்டங்கள் மூலமாக தியாகங்கள் பல புரிந்து உழைக்கும் வர்க்கம் பெற்ற பல உரிமைகளை பறிப்பதற்கு வைத்துள்ள அலங்காரமான பெயர்தான். குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமை, போனஸ் பெறும் உரிமை, பென்ஷனுக்கான உரிமை, பணிப் பாதுகாப்பு உரிமை என அனைத்து உரிமைகளுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இந்த உரிமைகளைப் பறிப்பதற்கான முதல் முயற்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பல தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் செய்யப்பட்டது. அவர்களது முயற்சி தோற்றுப் போனது. இப்போது மோடி அரசு மக்களவையில் அதற்குள்ள மூர்க்கத்தனமான பெரும்பான்மை மூலமாக சில திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.

தன்னிச்சையான பணி நீக்கம், ஊதிய வெட்டு, சலுகை வெட்டு போன்ற அராஜகங்களுக்கு எதிரான சட்டபூர்வமான பாதுகாப்பை எழுபது சதவிகித தொழிலாளர்களிடமிருந்து பாஜக தலைமையிலான ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேஷ் அரசாங்கங்கள், மிகவும் பிற்போக்குத்தனமான திருத்தங்கள் மூலமாக பறித்திருக்கின்றன.

உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் மிகௌம் குறைவாக உள்ளது. மத்திய தொழிலாளர் ஆணையத்தின் சிறப்பு வெளியீட்டின்படி 2011-12 ம் ஆண்டில் ஒட்டு மொத்த உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது வெறும் 5.25 % மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே வேகமாக சுருங்கிக் கொண்டு வரும் இந்த பங்கை, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் இன்னும் சுருக்கி விடும்.

தொழிலாளர்களை பணியமர்த்தும் முறையில் மாற்றங்கள், பணிகளை வெளியில் கொடுத்து வாங்கிக் கொள்வது, நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை அமர்த்துவது, நினைத்தால் பணியில் அமர்த்தி அகற்றுவது போன்றவை முதலாளிகளின் முழுமையான உரிமையாக இருக்க வேண்டும் என்றும் இதற்குக் குறுக்கே எந்த விதமான தொழிலாளர் நலச் சட்டமும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதுதான் உலகம் முழுதிலுமுள்ள முதலாளிகளின் கோரிக்கை. பிரதமரின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம் அவர்களுக்கு இவை அனைத்தையும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட உறுதியளிக்கிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களோடு இந்த தொழிலாளர் விரோத நடைமுறைகளையும் எடுத்துச் சென்று அந்நாட்டு தொழிலாளர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை துச்சமாக மதிப்பது என்பதுதான் நவீன தாராளமயக் கொள்கைகளின் ஊதுகுழல்களாக இருக்கிற இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அரசுகளின் புரிதலாக இருக்கிறது. உலகம் முழுதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தாக்குதல் நடத்தும் அரங்கமாக மாறி வருகிறது. இந்த கருத்தோட்டத்திற்கு எதிரான சவாலை இங்கிலாந்தின் ஸ்டீல் தொழிலாளர்கள் விடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டும் என்று   இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள், ஏன் உலகெங்கும் உள்ள உழைப்பாளிகள்  விரும்புகின்றனர். ஒவ்வொரு போராட்டமும் இன்னொரு போராட்டத்திற்கு உரமேற்றுகிறது, போராட்டம் நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும் கூட.

இறுதியாக ஒரு வார்த்தை. இந்தியாவில் உருவான தொழிலகங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக இந்தியாவிலேயே முதலீடு செய்தால்தான்  “இந்தியாவில் உருவாக்குவோம்” என்ற முழக்கத்திற்கு கொஞ்சமாவது நம்பகத்தன்மை கிடைக்கும். முதலாளிகள் கூட்டமைப்பான அசோகம் நவம்பர் 2014 ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி ஏப்ரல் முதல் செப்டம்பர் 2014 வரை (மோடி மே 2014 ல் பிரதமராக பொறுப்பேற்றார்) இந்திய நிறுவனங்கள் 17.6 பில்லியன் டாலர்கள் ( 1,14,400 கோடி ரூபாய்) அன்னிய மண்ணில் முதலீடு செய்துள்ளது. 2013- 2014 நிதியாண்டில் மட்டும் 36 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக ( 2,34,000 கோடி ரூபாய்) முதலீடு வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முதலீட்டை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வாருங்கள் பிரதமரே. அது உங்களால் முடியாவிட்டால் “இங்கிலாந்தில் ஸ்டீல் தொழிலாளர்களுக்கு எதிராக டாடா கடைபிடிக்கிற மோசமான அணுகுமுறை” போல நடந்து கொண்டு இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுவதையாவது நிறுத்திக் கொள்ளுமாறு உங்கள் நண்பர்களை வெளிப்படையாக கண்டிக்கவாவது செய்யுங்கள்.



1 comment:

  1. This will never happen. Modi is not the friend of rich. Rich are his masters

    ReplyDelete