Thursday, September 25, 2014

இது நியாயமில்லை கமலஹாசன்

அன்பான கமலஹாசன்,
 
உங்கள் மீது சாரு நிவேதிதா எவ்வளவு அன்பும் மதிப்பும்  வைத்துள்ளார். சர்வதேச இலக்கியவாதியான, இலக்கியத்திற்கான, அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு உலகிலேயே தகுதி வாய்ந்த ஒரே எழுத்தாளரான அவர் உங்களை தனக்கு நிகராக கருதும் பாக்கியத்தை உங்களுக்கு மனமுவந்து அளித்துள்ளார் என்பதை அவரது கடிதத்தின் இந்த பகுதிகளை படித்தால் உங்களுக்கே புரியும்.


//அந்தக் கூட்டத்தில் நீங்களும் டி.எம். கிருஷ்ணாவும் பேசப் போகிறீர்கள் என்று அழைப்பிதழில் பார்த்து எனக்கு இரட்டிப்பு சந்தோஷம்.  ஏனென்றால், நான் உங்கள் இரண்டு பேரிடத்திலும் அன்பும் மரியாதையும் வைத்திருப்பவன்.  உங்கள் மீது அதீதமாகவே.//

// மகாநதி பற்றிய அந்தக் கட்டுரையை நீங்கள் கணையாழியில் வெளிவந்த போதே படித்திருக்கலாம்.  அந்தக் கட்டுரை பிரமாதமாக இருந்தது என்று நீங்கள் சொன்னதாக ஒருமுறை உங்கள் நண்பரும் என் நண்பருமான புவியரசு என்னிடம் சொன்னார்.//

// உங்கள் படங்களையெல்லாம் அநேகமாக நான் சிலாகித்தே எழுதி வந்தேன்.  குறிப்பாக, அன்பே சிவம்.  உங்கள் படங்களில் நான் விமர்சித்து எழுதியது குருதிப் புனல், தசாவதாரம்.  மற்ற எல்லா படங்களையும் பாராட்டியே எழுதினேன், சதி லீலாவதி உட்பட//

//  என் அளவுக்கு உங்களைப் பாராட்டி எழுதியவர்கள் தமிழில் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.//  

 // தமிழ்நாட்டில் Grantaவை சிரத்தையாகப் படிக்கும் ஒரு சிலருள் நாம் இருவரும் அடக்கம் என்று நினைக்கிறேன்.//  

//இந்த வகையில் உங்களை என்றுமே என்னுடைய நட்பு மாடத்தில் வைத்திருந்தேன். இப்போதும் வைத்திருக்கிறேன்.//

.//  இவ்வளவு படித்த ஒரு மனிதரை நான் சந்தித்ததே இல்லை என்பது மதன் உங்களைப் பற்றி அடிக்கடி சொல்லும் வார்த்தை//

.// படிப்பின் மீது மிகுந்த passion உள்ள ஒருவர், படிப்பின் மீதி தீராக் காதல் கொண்ட ஒருவர் தான் இப்படிப் படிக்க முடியும்; கமல் அப்படிப்பட்டவர்//

//அநேகமாக Alejandro Jodorowsky-யின் படங்களைப் பார்த்தவர்கள் தமிழ்நாட்டில் இரண்டு பேர் தான் இருப்பார்கள் என்பது என் யூகம்.  அதில் நீங்கள் ஒருவர்.//
  
// குடும்பம், குழந்தை குட்டி பற்றி உங்கள் கருத்தை ஏற்கக் கூடிய ஒரு நண்பர் உங்கள் நண்பர் குழுவில் உண்டா?  ஆனால் குடும்பம் பற்றி உங்கள் கருத்து எதுவோ அதுவேதான் என் கருத்தும்.  அந்தக் கருத்தின்படி தான் நான் வாழ்ந்தும் வருகிறேன்.  மத்திய வர்க்கத்துக்கு உரிய எந்த சமூக நடைமுறைகளையும் என் வாழ்வில் நான் பின்பற்றுவதில்லை.  உங்களைப் போலவேதான்.//

//இந்த நூற்றுக்குத் தொண்ணூற்று ஐந்துக்கு இன்னொரு உதாரணம், செக்ஸ் தொழிலை தொழிலாக அங்கீகரிப்பது பற்றியது.  இதிலும் நாம் ஒத்த கருத்து உடையவர்களே//
 

//என்ன நடக்கிறது என்று தெரியாமல், உங்கள் பின்னாலிருந்து ஒருவர் சாருவைத் தெரியாதா என்று கேட்க, இன்னொருவர் இரண்டு இண்டர்நேஷனல் ஸ்டார்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியாதா என்று குரல் கொடுத்தார்//.  



//அச்சகத்திலிருந்து வந்ததுமே அச்சு வாசனை போவதற்கு முன்பே உங்களுடைய நூலகத்துக்குத் தமிழ் நூல்கள் வந்து விடுகின்றன என்பதால் நான் எழுதிய ராஸ லீலா என்ற நாவலை நீங்கள் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்//.  

 அன்புடன் கை கொடுக்கும் ஒருவனை நாலு பார் பார்க்க அவமதிப்பதையா?  அந்த அளவு வெறுக்கத்தக்கவனா நான்?  நேர்மையாக வாழ்வது அவ்வளவு பெரிய குற்றமா?  

//நான் உங்களுடைய படத்தை மட்டுமா விமர்சித்தேன்?  எந்திரனை விமர்சிக்கவில்லையா?//

//நேர்மையாக வாழ்வதால் இன்று நான் ஒரு தீண்டத்தகாதவனைப் போல் நடத்தப்படுகிறேன்.  அந்த அவமரியாதையை நான் எல்லா விழாக்களிலும் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது. //

// என்னைப் போன்ற எழுத்தாளனின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் என்னைப் போன்ற ஒரு transgressive எழுத்தாளனை உங்களைப் போன்ற பிரபலங்கள்தான் ஆதரிக்க வேண்டும்.  அன்பு பாராட்ட வேண்டும்.  ஆனால் தமிழ்நாட்டில் கிடைப்பது கன்னத்தில் அறை. ஏன் இவ்வளவு வருந்தி வருந்தி எதை எதையோ தொட்டுத் தொட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால், லௌகீக வாழ்வுக்காக வாசகர்களிடம் பிச்சையும் எடுத்துக் கொண்டு, உங்களைப் போன்றவர்களின் துவேஷத்தையும் சம்பாதித்துக் கொண்டு வாழும் சூழல் சமயங்களில் மன உளைச்சலைத் தருகிறது.//

// நீங்கள் சர்வதேச இலக்கியத்தையும் சினிமாவையும் கற்றவர்.  அந்த ஒரே காரணம்தான்.//

படையப்பாவில் ரம்யா கிருஷ்ணன் ரஜனிகாந்திடம் சொன்ன டயலாக்கை பிறகு படிக்காதவன் படத்தில் ஆர்த்தி தனுஷிடம் சொல்வார்.

"நீ ரொம்ப கொடுத்து வச்சவன், எனக்கே உன்னை பிடிச்சுருக்கு"

அது போல சாரு நிவேதிதாவிற்கே உங்களை பிடித்திருக்கிறதென்றால் வாழ்க்கையில் உங்களுக்கு வேறு ஏதாவது கொடுப்பினை வேண்டுமா என்ன?

ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள் கமல்?

 "இந்த உலகின் அத்தனை அன்பும் கண்களில் பொங்க அவர்  உங்களுக்குக் கை கொடுத்தார். .  நீங்களோ ஒருக்கணம் ஆளவந்தானாகவே மாறி முகத்தைச் சுளித்தபடி கை நீட்டி விட்டு ஆளவந்தான் மாதிரியே இறுக்கமான பாவனையுடன் தலையை இடது பக்கமும் வலது பக்கமும் ரோபோ மாதிரி திருப்பியபடி சென்று விட்டீர்கள்." 

 உங்களைப் பற்றி பாராட்டி எத்தனை கட்டுரைகள் எழுதியிருப்பார் அவர்?  "அதெல்லாம் குப்பை.  ஆனால் குருதிப் புனலையும் தசாவதாரத்தையும் விமர்சித்து எழுதியதை மட்டுமே உங்கள் சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருப்பீர்களா கமல்" என்று கேட்கும்படி செய்து விட்டீர்களே?


ஆனாலும் எவ்வளவு பெருந்தன்மையோடு அவர் எழுதியதை படித்தீர்கள் அல்லவா? 
 
// தவிர்க்க முடியாமல் எங்காவது தங்களைச் சந்தித்தால் மீண்டும் தங்களிடம் வந்து இந்த உலகத்தின் அன்பையெல்லாம் கண்களில் தாங்கி உங்களுக்குக் கை குலுக்குவேன்.  அப்போதும் நீங்கள் முறைத்துக் கொண்டு போனால் இதுபோல் கடிதம் எழுத மாட்டேன்.  அவ்வளவுதான்.  மற்றபடி உங்கள் மீதான என் அன்பும் நட்புணர்வும் போகாது.//  

எழுத்தாளனுக்கும் நடிகனுக்கும் உள்ள வித்தியாசத்தை எவ்வளவு அழகாக அவர் சொல்லியுள்ளார் என்பதை கவனித்தீர்களா?

//மேலும், மை டியர் கமல், எம்.கே.டி.யை விடவா ஒரு சூப்பர் ஸ்டார் வந்து விடப் போகிறார்?  அவர் பெயர் இன்று யாருக்காவது தெரியுமா?  மக்கள் தங்களை சந்தோஷப்படுத்துபவர்களை சீக்கிரம் மறந்து விடுகிறார்கள்.  ஆனால், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் எழுத்தாணி பிடித்தவனை மக்கள் மறப்பதில்லை.  அவன் அந்த மக்களுடைய நினைவிலி மனதில் சென்று தங்கி விடுகிறான்.  அந்த மனம் அந்த நினைவை தலைமுறை தலைமுறையாக தனது சந்ததிகளுக்குக் கடத்திக் கொண்டே இருக்கிறது.//

நீங்கள் செய்தது நியாயமில்லை கமல். நீங்கள் பாட்டுக்கு கை கொடுத்து விட்டுப் போயிருக்கலாம். 

உலகின் மிக நீண்ட நெகிழ்ச்சி மிக்க கடிதம், அதற்கான அவர் ரசிகர்கள், உங்கள் ரசிகர்கள் எதிர்வினைகள் என்று நடைபெற்று வரும் இணைய யுத்தம் எல்லாமே  இல்லாமல் போய் நாங்களெல்லாம் தப்பித்திருப்போம். ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா என்பது போல ஒரு கைகுலுக்கலுக்கு   எவ்வளவு பெரிய சண்டை என்று எதிர்கால சமுதாயம்
அதிர்ச்சியோடு கேட்பதையும் தவிர்த்திருக்கலாம். 

அடுத்த முறையாவது ஒழிகிறத் என்று கை கொடுத்து தொலைத்து விடுங்கள். எல்லோரும் உருப்படியாக வேறு ஏதாவது எழுதுவார்கள். 

5 comments:

  1. ஒரு புறாவுக்கு இவ்வளவு அக்கப்போரா

    Corret gi

    ReplyDelete
  2. சாரு ஒரு நோபல் பரிசு மேதை.
    கமல் ஒரு ஆஸ்கார் பரிசு மேதை.
    இரண்டு அரைகுறை அறிவுக் களஞ்சியங்கள்.
    ஆலையில்லாத ஊருக்கு
    இலுப்பைப் பூவே சர்க்கரையாம்.

    ReplyDelete
  3. Good comedy.

    After hand shake he may need dettol to washup his hand. Kamal cleverly avoided.

    Seshan
    Dubai

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete