அன்பே வடிவானவர், அனைவருக்கும் அருள் பாலிப்பவர் என்று சொல்லப்படும் கடவுள் அனைவருக்கும் பொதுவானவர் கிடையாது போல. அன்பே வடிவான கடவுளை அவரை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு அன்பைப் போதிக்கவில்லை போலும்.
நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே என்று சொல்லப்படும் மயானத்தில் கூட சமத்துவம் மறைந்து போன தமிழகத்தில் ஆலயத்தில் மட்டும் சமத்துவத்தை எதிர்பார்ப்பது மிகப் பெரிய மூட நம்பிக்கை என்பதை அவ்வப்போது சில சம்பவங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
அதைத்தான் புதுவையில் நேற்று முன் தினம் நடந்த சம்பவம் உண்ர்த்தியுள்ளது. மதகடிப்பட்டுக்கு அருகே இருக்கிற கலிதீர்த்தான் குப்பம் என்ற ஊரில் உள்ள திரௌபதியம்மன் கோயிலிலும் தலித் மக்கள் அனுமதி மறுக்கப்பட்டார்கள். போராட்டங்களுக்கு ஆட்சியாளர்கள் அனுமதி மறுப்பது என்பது இயல்பானது. ஆனால் மக்கள் வழிபடுவதை பக்தர்கள் மறுப்பது ஏனோ? கடவுளின் அருள் தலித் மக்களுக்கு கிடைக்கக் கூடாது என்ற நல்ல எண்ணமோ?
காற்றை, மரங்களை, நிலவை, சூரியனை, கடலை, மலைகளை இறைவன் அனைவருக்கும்தான் படைத்தான் என்று சொல்பவர்கள் கடவுளை மட்டும் ஏன் தங்களுக்கு மட்டும் சுருக்கிக் கொள்கிறார்கள்? கடவுளின் பெயரால் கட்சி நடத்துபவர்கள் ஏன் பக்தர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை கண்டு கொள்ளாமல் நத்தையைப் போல ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்கிறார்கள்.
வழிபடும் உரிமையை மீட்டெடுக்க அங்கே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி முடிவு செய்தது. வரும் செப்டம்பர் 30 அன்று தோழர் பி.சீனிவாசராவ் அவர்களின் நினைவுதினத்தன்று நேரடி நடவடிக்கையாக ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்த முடிவு செய்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்திற்கு துணை நிற்க முடிவு செய்தது.
அதனால் ஆத்திரம் கொண்டு ஆதிக்க சக்திகள் "வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்புக்குழு" என்ற பெயரில் ஐமப்திற்கும் மேற்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதகடிப்பட்டு அலுவலகத்தில் அராஜகமாக நுழைந்து அங்கே இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி தீ வைத்துக் கொளுத்தியுள்ளனர்.
தர்மபுரியில் பற்ற வைத்த தீ இன்னும் எரிந்து கொண்டே இருக்கிறது. இப்போது நிகழ்ந்துள்ளது கடவுளின் பெயரால். அராஜகத்தின் மூலம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை தடுக்க நினைத்த மூடர்களுக்கு புரியாத விஷய்ம் ஒன்றுதான்.
இந்த அடக்குமுறை போராட்டத்தின் வீச்சை அதிகப்படுத்தி விட்டது. உறுதியை அதிகரித்து விட்டது. வேகத்தை கூட்டி விட்டது. செப்டம்பர் முப்பது அன்று தீ வைத்துக் கொளுத்தியவர்களின் அடாவடியை போராட்டத் தீ பொசுக்கி விடப் போகிறது.
எனக்கு ஒரே ஒரு சந்தேகம்:
இத்தனை அராஜகங்கள் செய்து தனது பக்தர்களை துன்புறுத்தும் கும்பலிடமிருந்து கடவுள் ஏன் தனது பக்தர்களை காப்பாற்றவில்லை? தீயவர்களை ஏன் துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்திடவில்லை?