பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.
Tuesday, December 22, 2015
கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்
கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவாக பிரகாசிக்காதவர் கீர்த்தி ஆஸாத். அரசியலில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவ்வளவு பிரபலமான அரசியல்வாதி என்றும் சொல்ல முடியாது.
கிரிக்கெட்டில் அவர் கையாண்ட அதிரடி பாணியை இப்போது அவர் தனது சொந்தக்கட்சி பிரபலம் மீதே கையாள எப்படி மீள்வது என்று தெரியாமல் பாஜக தடுமாறுகிறது.
அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப் படுவார்கள் என்று சில தினங்கள் முன்பு நான் எழுதிய பதிவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக மோடி வகையறாக்கள் செய்த முயற்சி இப்போது அருண் ஜெய்ட்லிக்கு எதிராகவே திரும்பி விட்டது.
டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அருண் ஜெய்ட்லி இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக அவதூறு வழக்கு போட்ட ஜெய்ட்லி அதே குற்றச்சாட்டுக்களை கீர்த்தி ஆஸாத் சொல்கிற போது வாய் திறக்க மறுக்கிறார்.
முடிந்தால் என் மீதும் வழக்கு தொடுங்கள் என்று கீர்த்தி ஆஸாத் சொல்லும் போது இந்தியாவின் மிகப் பெரிய சட்ட நிபுணர் அருண் ஜெய்ட்லி ஏன் பதில் பேசவில்லை?
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அமித் ஷா, மோடி கும்பல் ஏன் இப்போது மௌனமாக உள்ளது?
மொத்தத்தில் கீர்த்தி ஆஸாத்தின் அதிரடி ஆட்டத்தில் அருண் ஜெய்ட்லி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பி விடுவார் போல!
**********************************************************************************************
இப்போது தற்போதைய பிரச்சினைக்கு வருவோம்.
பீகாடின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பகவத் ஜா ஆசாதின் மகனும் மூன்று முறை பாஜக எம்.பி ஆக இருந்து பின் காங்கிரஸ் சென்று தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யாக உள்ள கீர்த்தி ஆஸாத், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக அமித்ஷாவின் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷா மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.
இந்தியா டி-20 உலகக் கோப்பையை வென்றதும் ஜெய்ஷா, பயிற்சியாளர் சங்கி கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவோடு அகமதாபாத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு கோப்பையுடன் சென்று வழிபட்டுள்ளார்.
"இந்திய வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனால் அந்த கோப்பையுடன் சர்ச்சிற்கு செல்ல முடியுமா? முகமது சிராஜால் அந்த கோப்பையை ஒரு மசூதிக்கு எடுத்துச் செல்ல முடியுமா இல்லை அர்ஷ்தீப் சிங்கால் ஒரு குருத்வாராவுக்கு கோப்பையை கொண்டு போக முடியுமா? இந்த உலகக் கோப்பை என்பது பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. அதை ஒரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களோடு சுருக்குவது மோசமான செயல். விளையாட்டில் மதத்தை கொண்டு வராதீர்கள்."
கீர்த்தி ஆசாதின் கேள்வி மிகவும் சரியானது என்பதற்கு அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் "யார் இந்த கீர்த்தி ஆசாத்" என்று கேட்டு கம்பீரும் வேறு சிலரும் திசை திருப்பியதே சான்று.
பிகு: இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் மோடி என்பதை ஏன் யாருமே சொல்லவில்லை என்பது புதிராக உள்ளது. மோடி போட்டியை பார்க்க வந்திருந்தால் அதுவே இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து அவர்களின் விளையாட்டை பாதித்திருக்கும்.
50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இந்தியா தோற்க மோடியின் வருகைதானே முக்கியக் காரணம்!
பிகு 2 : டெல்லியில் உள்ள ஃபெரோட்ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம் என்று பெயர் வைத்ததையும் கீர்த்தி ஆசாத் கண்டித்தார். அவரை விட மிகக் கடுமையாக கண்டித்தவர் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. அப்படி அருண் ஜெய்ட்லி பெயரை வைக்க வேண்டுமென்றால் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டிருந்த தன் பெயரை நீக்கி விடுங்கள் என்றார். டெல்லி கிரிக்கெட் வாரியம் பேடியின் பெயரை நீக்கி விட்டது.
புதிய பின் குறிப்பு : எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது.

No comments:
Post a Comment