இன்றைய காலைப் பொழுது ஒரு துயரச் செய்தியோடு விடிந்தது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர், கட்சியின் முன்னாள் மாவட்டச்செயலாளர், தற்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.டி.சங்கரி அவர்களின் கணவரரும் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் ஆர்.தயாநிதி நேற்று நள்ளிரவு காலமானார்.
கடந்த ஜனவரி மாதம் இதய பை பாஸ் சர்ஜரி செய்து கொண்ட தோழர் தயாநிதி அவர்களை கடந்த புதன் கிழமையன்றுதான் நாங்கள் (இன்சூரன்ஸ் ஊழியர் சங்கப் பொறுப்பாளர்கள்) சந்தித்து நலன் விசாரித்து வந்தோம்.
மிகுந்த நம்பிக்கையோடு பேசிய தோழர் தயா விரைவிலேயே எப்போதும் போல இயக்கங்களுக்கு, களத்திற்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால் அவரது நம்பிக்கை பொய்த்துப் போனது கொடுமை. 63 வயது என்பது இறப்பதற்கான வயதா என்ன?
நான் வேலூருக்கு வந்த காலம் முதல் அறிவேன். எங்களது எத்தனையோ கூட்டங்களில் அவர் உரையாற்றியுள்ளார். களத்தில் கடுமையாக உழைப்பவர், ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தை அங்குலம் அங்குலமாக அறிந்தவர். துல்லியமான திட்டமிடல் அவரது சிறப்பு.
மிகச் சிறந்த ஓவியர். 1996 ல் எங்கள் தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது அனைத்து விளம்பரப் பணிகளையும் அவர்தான் செய்தார். பிரம்மாண்டமான பேனர்கள், அலங்காரமான, அழகான பின்புலம், டயர் தட்டிகள் என்று பல வடிவங்களில் அவர் கைவண்ணம் மிளிர்ந்தது.
நல்ல வாசிப்பாளர். கடைசி சந்திப்பின் போது கூட தான் அப்போது படித்து முடித்த நூல்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
வேலூர் மாவட்ட கட்சிக்கென ஒரு மாதாந்திர செய்தி மடல் வெளியிட வேண்டும் என்பது அவர் நீண்ட நாள் விருப்பம். நாம் இது தொடர்பாக உட்கார்ந்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை சொல்லியுள்ளார். அது ஏனோ கைகூடவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தனது உண்மையான செயல் வீரரை இழந்துள்ளது, வாழ்வுக்குப் பிறகும் தன் வாழ்வை அர்த்தமுள்ளதாக்க, மக்களுக்கு பயன் கிடைக்கும் வண்ணம் தோழர் தயா உடல் வேலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட உள்ளது.
செவ்வணக்கம் தோழர் தயாநிதி . . .
பிகு: எங்கள் சங்க அலுவலகம் சரோஜ் இல்லத் திறப்பு விழாவில் தோழர் தயாநிதி வாழ்த்துரை வழங்கிய போது எடுக்கப்பட்ட படம் மேலே உள்ளது.
இறுதி வரை விளம்பர பணிகளில் இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது
ReplyDeleteதோழருக்கு ஆழ்ந்த அஞ்சலி.