நேற்று நீதா அம்பானியின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஷாருக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான ஐ.பி.எல் போட்டியை என் மகன் பார்த்துக் கொண்டிருந்த போது எட்டாண்டுகள் முன்பாக 30, மே, 2018 அன்று எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது. "முற்றுகை" எழுத தரவுகள் சேகரிக்க கொல்கத்தா போயிருந்த போது பார்த்த சம்பவத்தை பதிவாக எழுதியிருந்தேன்.
இரு அணிகளிலும் முதலாளிகள் அப்படியே தொடர்கிறார்கள். ரசிகர்களும் தங்கள் மாநிலத்து அணி என்ற விசுவாசத்தோடுதான் உள்ளனர். கொல்கத்தா போல மும்பையில் சண்டை நடந்ததா என்று தெரியவில்லை.
இதோ பதிவுக்கு செல்கிறேன்.
என்ன தைரியம் இருந்தா அந்த கொடியை?
ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொல்கத்தா பயண அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை நிறுத்தி வைத்திருந்தேன். இப்போது அதனை தொடரலாம் என்று உள்ளேன்.
எங்கள் விருந்தினர் இல்லத்துக்கு அருகில்தான் ஈடன் கார்டன் மைதானம் உள்ளது. நான் அங்கே இருந்த நாள் ஒன்றில்தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே ஒரு போட்டி இருந்தது.
அன்று மாலை ஏழு மணி அளவில் ஈடன் கார்டன் மைதானத்துக்குச் செல்லும் சாலை வழியாக நான் எங்கள் விருந்தினர் இல்லத்திற்கு திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக மைதானத்தை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டிருக்க எதிர் திசையில் நடந்து செல்வதே சிரமமாக இருந்தது.
பல சாலையோர வியாபாரிகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கொடியையும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கொடியையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். விறுவிறுப்பாகவே வணிகம் நடந்து கொண்டிருந்தது. ஒரு இளைஞர் கூட்டத்திடம் ஒரு வியாபாரி, மும்பை இந்தியன்ஸ் அணி கொடியை வேண்டுமா என்று கேட்க அவர்களுக்கு கோபம் வந்து விட்டது.
அந்த வியாபாரியிடம் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். நான் புரிந்து கொண்ட வரை அவர்கள் கேட்டது
“எங்கே வந்து எந்த கொடியை விற்கிறாய்? கொல்கத்தாகாரனிடம் மும்பை கொடியை வாங்கச் சொல்வதற்கு உனக்கு எவ்வளவு தைரியம்?”
அடிதடி என்று முற்றுவதற்கு முன்பாக மற்ற வியாபாரிகள் வந்து விலக்கி விட்டார்கள்.
அந்த இளைஞர்களை நினைத்தால் பாவமாக இருந்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என்ற அணி
கொல்கத்தா நகரத்தின் அணியும் கிடையாது,
மேற்கு வங்க மாநிலத்தின் அணியும் கிடையாது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வீரர்கள் அந்த அணியில் இருந்தார்களா என்ற விபரம் எனக்கு தெரியாது.
அது ஷாருக்கானின் அணி.
அது போல மும்பை இந்தியன்ஸ் அணி முகேஷ் அம்பானியின் அணி.
முதலாளிகளின் அணிக்காக நீங்கள் ஏனப்பா தேவையே இல்லாமல் உணர்ச்சி வசப்படுகிறீர்கள் என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
பின் குறிப்பு
மேலே உள்ள படம், எங்கள் விருந்தினர் இல்லத்திலிருந்து ஈடன் கார்டன் மைதானத்தை எடுத்த படம். ஒளி விளக்குகள் மட்டும்தான் தெரிகிறது.
பிகு: இன்னொரு கிரிக்கெட் பதிவு நீண்ட காலமாக ட்ராப்டிலேயே உள்ளது. முடிந்தால் மாலையில் இல்லை நாளை பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:
Post a Comment