உலகெங்கிலும்
உள்ள உழைப்பாளி மக்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிப்பதாக வெனிசுலா நாட்டு
தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. நான்காவது முறையாக ஹூயுகோ சாவேஸ் வெனிசுலா நாட்டு
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிடல்
காஸ்ட்ரோவிற்குப் பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் மிக அதிகமாக வெறுக்கப்படும்
நபராக சாவேஸ்தான் இருப்பார். எண்ணெய் வளம் அதிகம் கொண்ட நாடு வெனிசுலா. அந்த
வளத்தை அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் சூறையாடிக் கொண்டிருந்ததை தடுத்து
நிறுத்தியவர் சாவேஸ். அதனால் வெறுப்புற்ற அமெரிக்கா உள்நாட்டுக் கலவரத்தை தூண்டி
சாவேஸை பதவியிலிருந்து அகற்ற முயற்சித்தது. ஆனால் மக்கள் சாவேஸ் பக்கம் இருந்ததால்
அந்த முயற்சி பரிதாபகரமாக தோற்றுப் போனது.
அதன்
பின்பு சாவேஸின் நடவடிக்கைகளில் வேகம் அதிகரித்தது. சில பணக்காரர்களின் பைக்களுக்கு
சென்ற பணம் நாட்டு கஜானாவிற்கு திரும்பியது. உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக
சோஷலிஸம்தான் மாற்று என்று உறுதியாக நடைபோட்டார்.
லத்தீன்
அமெரிக்கா முழுதும் இன்று செம்மயமாகிக் கொண்டிருப்பதற்கு சாவேஸ் ஒரு முக்கியக்
காரணம். அவரால் உருவாக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு இன்று
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மிகப் பெரிய சவாலாக திகழ்கிறது.
மக்கள்
நலனுக்காக பாடுபடும் ஆட்சியாளராக சாவேஸ் இருப்பதால்தான் வெனிசுலா மக்கள் அவரை
மீண்டும் தேர்ந்தெடுத்து உள்ளனர். முதலாளித்துவ ஊடகங்கள் சாவேஸிற்கு எதிராக மிகப்பெரிய பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்ட போதிலும் வெனிசுலா மக்கள் அதனை பொருட்படுத்தவில்லை. உலகமயமாக்கல் கொள்கைகளுக்கு எதிராக சோஷலிஸக்
கொள்கைகளையே தான் தொடர்ந்து அமுல்படுத்துவேன் என அவர் வெனிசுலா நாட்டு மக்களுக்கு
உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment