Friday, October 12, 2012

அது சரி கலைஞரே... அழகிரி என்ன செய்தார் ?





காப்பீட்டுத்துறையில்  அன்னிய மூலதன வரம்பை உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவை தான் எதிர்ப்பதாக கலைஞர் கூறியுள்ளது வரவேற்கத் தக்கது. இன்சூரன்ஸ்துறையில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் ஐ.ஆர்.டி.ஏ மசோதாவிற்கு ஆதரவாக அன்று கை உயர்த்தியவர், இன்று அன்னிய மூலதன வரம்பை உயர்த்துவதற்கு எதிராக குரல் கொடுப்பது அவரின் மன மாற்றமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நல்லபடியாக நினைத்தால் வேறு ஒரு விஷயம் உள்ளத்தை உறுத்துகின்றது.

சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்திற்கு அனுமதி, பென்ஷன் துறையில் அன்னியருக்கு அனுமதி, காப்பீட்டுத் துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்திக் கொள்வதற்கு அனுமதி, டீசல் விலை உயர்வு, மானிய விலையில் சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகிய மத்தியரசின் அனைத்து மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கலைஞர் கடுமையாக கண்டித்துள்ளார். பந்த் போராட்டத்திலும் பங்கேற்று உள்ளார்.

இந்த முடிவுகளை எல்லாம் எடுத்தது மத்திய அமைச்சரவை. மத்திய அமைச்சரவையில் அவரது மகன் அஞ்சா நெஞ்சன் அழகிரியும் கேபினெட் அமைச்சராக இருக்கிறார். அமைச்சரவைக் கூட்டத்தில் அழகிரி என்ன செய்து கொண்டிருந்தார் ?

இந்த முடிவுகளை ஆதரித்தாரா இல்லை எதிர்த்தாரா? இல்லை நமக்கு எதற்கு வம்பு என்று அமைதியாய் இருந்து விட்டாரா? இல்லை இதெல்லாம் என்ன என்று விளங்காமல் ஒதுங்கிப் போய் விட்டாரா? ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, தமிழக காவல்துறையிடம் இருந்து தப்பிக்க தலைமறைவாய் ஓடிக்கொண்டிருக்கும் மகனையே காப்பாற்ற முடியாத போது, நாம் எங்கே மக்களை காப்பாற்றுவது என்ற விரக்திதான் அமைதிக்குக் காரணமா? அல்லது இப்பிரச்சினைகளில் அமைதி காத்தால் மத்தியரசின் அருட்பார்வை கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பா?

இக்கேள்விகளுக்கெல்லாம் கலைஞர் பதில் சொல்வாரா?

அமைச்சரவையிலும் எதிர்த்தோம், இப்போதும் எதிர்க்கிறோம் என்று பாவம் அவரால் கம்பீரமாக சொல்ல முடியவில்லையே..

No comments:

Post a Comment