Thursday, October 18, 2012

வாட்டி வதைக்காதே, வாழ விடு



வேலூர் மாநகரத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சார்பில்
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மக்களிடம்
வினியோகிக்கப்பட்ட பிரசுரம்


மத்திய, மாநில அரசுகளே,
மக்களை வாட்டி வதைக்காதீர்... வாழ விடுங்கள்.....

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு மக்கள் விரோத, தேச விரோத நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் கோடிக்கணக்கான வணிகர்களும் அவர்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்பார்கள். வால்மார்ட், டெஸ்கோ போன்ற பெரும் நிறுவனங்கள் லாபம் அடைய இந்திய வணிகர்கள் வாழ்வைப் பறிப்பது நியாயமாகுமா?

விண்ணைத் தாண்டி எங்கோ போயுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காத மத்தியரசு டீசல் விலையை உயர்த்தி, மானிய விலையிலான சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி மக்கள் மீது கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது. பணம் என்ன மரத்திலா காய்க்கிறது? என்று ஆணவத்துடன் கேட்கிற மத்தியரசை உழைக்கும் மக்கள் கேட்கிறார்கள், இந்த கூடுதல் சுமையை தாங்கிக் கொள்ள மக்களிடம் மட்டும் பணம் காய்க்கும் மரம் உள்ளதா?

காப்பீட்டுத்துறையில் அன்னிய மூலதன வரம்பை உயர்த்தினால் வெளிநாட்டுப் பணம் கோடி, கோடியாய் கொட்டும் என்று சொல்கிறது மத்தியரசு. தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 26 % அன்னிய மூலதனம் உள்ள போதே வராத நிதி கூடுதலாக 23 % உயர்த்தும் போது மட்டும் எங்கிருந்து வரும்? வராது. ஆனால் இந்திய மக்களின் சேமிப்பின் கட்டுப்பாடு மட்டும் அன்னிய முதலாளிகள் வசம் செல்லும்.

பென்ஷன் நிதியிலே அன்னிய மூலதனத்தை அனுமதிப்பதன் மூலம் இந்தியத் தொழிலாளர்களின் கோடிக்கணக்கான ரூபாய் சேமிப்பு பன்னாட்டு மூலதனத்தின் கைகளுக்குச் செல்லும். உலகப் பொருளாதார நெருக்கடியில் அமெரிக்க பென்ஷன் நிதியில் இருந்த  மூன்று டிரில்லியன் டாலர்கள் ( பல லட்சம் கோடி ரூபாய்கள் ) பன்னாட்டு மூலதனத்தால் சூறையாடப்பட்டு அமெரிக்கத் தொழிலாளர்கள் எதிர்காலத்தை இழந்தார்கள். இதே நிலை இந்தியத் தொழிலாளர்களுக்கும் நேர வேண்டுமா?

மத்தியரசிற்கு சிறிதும் சளைத்தது அல்ல, தமிழக அரசு.

பேருந்து கட்டணம். பால் விலை, மின் கட்டணம் என எல்லாவற்றையும் உயர்த்தி மக்கள் மீது தன் பங்கிற்கு தாக்குதல் நடத்திய தமிழக அரசு, இப்போது மிகக் கடுமையான மின் வெட்டை தமிழக மக்களுக்கு பரிசாக அளித்துள்ளது. மக்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டுக் க்ம்பெனிகள் தடையில்லா மின்சாரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில் சிறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யாமல் முடங்கிப் போயுள்ளன. தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தமிழக அரசு, கடந்த ஆட்சி மீது பழி போட்டு இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றப் போகிறது.

இந்த அநீதிகளுக்கு எதிராக,
மக்கள் நலனைப் பாதுகாக்க, மக்கள் விரோத நடவடிக்கைகளை முறியடிக்க


16.10.2012 செவ்வாய், மாலை 05.15 மணிக்கு,
வேலூர் தலைமை அஞ்சலகம் முன்பாக
பெரும்திரள் ஆர்ப்பாட்டம்
உரிமைகளைக் காக்க ஒன்று திரள்வோம், போராடுவோம்

அனைவரும் அவசியம் பங்கேற்பீர்,
         இவண்  வேலூர் மாநகர தொழிற்சங்கக் கூட்டமைப்பு
 

No comments:

Post a Comment