Thursday, February 12, 2026

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


இன்று இந்தியா முழுதும் இந்தியாவை நேசிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி போன்ற மத்திய தொழிற்சங்கங்களும் இன்சூரன்ஸ், வங்கி, தொலை தொடர்பு போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அகில இந்திய அமைப்புக்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

என்ன கோரிக்கைகள்?

காலம் காலமாக உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை பறிக்கின்றன மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள்.

சிக்காகோ தொழிலாளர்கள் உயிர் கொடுத்து வென்றெடுத்த எட்டு நேர வேலை நேரத்தை காவு கொடுக்கிறார்கள்.

நிரந்தர வேலை என்பதையே கடந்த காலமாக மாற்றி ஒப்பந்த தொழிலாளர்கள் முறையும் குறிப்பிட்ட கால நிர்ணய பணி என்பதும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் செயலாகும்.

வங்கி, இன்சூரன்ஸ் மற்றுமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தை பாழுங்கிணறுக்குள் தள்ளும் மூடத்தனம்.

இந்திய உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்கள் என்ன தவறு செய்தாலும் சட்டப்படியே கண்டு கொள்ளாத கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

இதற்கு எதிராகத்தான் இன்று வேலை நிறுத்தம்.

எல்.ஐ.சி யின் இன்னும் சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

மூன்றாம் பிரிவு, நான்காம்  பிரிவு பணிகளில் புதிய பணி நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பணிச்சுமை ஒரு புறம் அதிகரித்து வரும் வேளையில் மறு புறம் பணி ஓய்வுகளின் காரணமாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை சரி செய்ய நிர்வாகம் சுணக்கம் காண்பிக்கிறது.

எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷனே தரப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். உழைப்பாளி மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு கோடிக்கணக்கான தொழிலாளர்கள், போராட்ட களம் புகுகின்றனர். போராட்டங்கள் என்றைக்கும் தோற்றது கிடையாது.

பணி ஓய்வு பெற்றதால் நேரடியாக வேலை நிறுத்தப் பங்கேற்பு என்பது கிடையாது.  எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தோழர்களிடமிருந்து  உற்சாகத்தைப் பெற . . .

No comments:

Post a Comment