நூல்
அறிமுகம்
நூல் : நானே மகத்தானவன்
ஆசிரியர் அ.பாக்கியம்
வெளியீடு தூவல் கிரியேஷன்ஸ்
சென்னை – 28
விலை ரூபாய் 300.00
உலகின்
மகத்தான குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் போராட்ட வாழ்வை விளக்குகிற முக்கியமான
நூல் இது. முகமது அலி பற்றி நாம் அறிந்தவற்றை அறியாத செய்திகள்தான் அதிகம் என்பதை
உணர்த்தும் நூல் இது.
முகமது
அலியின் வாழ்க்கையை பேசும் நூலாக இருந்தாலும் பதினோறாவது அத்தியாயத்தில்தான்
முகமது அலியே வருகின்றார். அப்படியென்றால் முதல் பத்து அத்தியாயங்கள் எதைப்
பேசியது? அமெரிக்காவில் நிலவிய நிற வெறியின் கொடுமைகளை பேசியது. கருப்பின மக்களை
இரண்டாந்தர குடிமக்களாக்கி அவர்களின் உரிமைகளை முடக்கிய காலத்தை விவரித்தது. கல்வி
மறுக்கப்பட்ட கண்ணீர் கதையை சொன்னது. அடிமைத்தனத்தை ஒழித்த ஆப்ரஹாம் லிங்கன்
சுட்டுக் கொல்லப்பட்ட பின்பு ஜனாதிபதியான ஜான்சன் ஜிம் க்ரோ சட்டம் என்ற
சட்டத்தின் மூலம் கருப்பின மக்களை சித்திரவதைக்குள்ளாக்கிய ஆட்சியாளர்களின்
கொடூரங்களை விவரித்தது.
வெள்ளை இன
இளம் பெண்ணோடு பேசிய குற்றத்திற்காக எம்மெட்டில் என்ற 14 வயது சிறுவன் சுட்டுக்
கொல்லப்பட்டு ஆற்றில் வீசப்பட்ட அராஜகத்தையும் அந்த கொலை கருப்பின மக்களின்
கோபத்தை தூண்டியதையும் அந்த சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து
கொண்டதையும் அந்த சிறுவனின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை வெள்ளையின
மக்கள் அடித்து நொறுக்கியதையும் அது மீண்டும் அமைக்கப்பட்டாலும் மீண்டும் மீண்டும்
தகர்க்கப்பட்ட கொடுமையையும் இறுதியில் 230 கிலோ இரும்பில் அமைக்கப்பட்டதையும்
சொல்லும் அத்தியாயம் அமெரிக்காவில் நிலவிய நிற வெறிக்கான முக்கியமான சான்று.
தற்காப்புக்
கலையாக குத்துச்சண்டையை கருப்பின மக்கள் பயின்று தேர்ந்தாலும் வெள்ளை நிறத்தவரோடு
அவர்களால் மோத முடியாத தடையைச் சொன்னது. பின்னொரு நாளில் அதற்கான அனுமதி கிடைத்த
போது வெள்ளையின குத்துச் சண்டை வீரர்களை முறியடித்த ஜேக் ஜாக்ஸன், ஜோ லூயிஸ் ஆகியவர்களின்
வெற்றி எப்படி கருப்பின மக்களுக்கு எழுச்சி அளித்தது என்பதை விவரித்தது.
இச்சூழலில்தான்
கேஸியஸ் கிளே என்ற இளம் கருப்பின வீரர் குத்துச்சண்டை களத்திற்குள் நுழைகிறார்.
கலந்து கொண்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று அமெரிக்கா முழுதிலும்
அறியப்படுகிறார். 1960 ல் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக்
போட்டிகளில் தங்கப்பதக்கம் வெல்கிறார். நாடெங்கிலும் தனக்கு நல்ல வரவேற்பு
கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு நாடு திரும்பும் அவருக்கு மிஞ்சியது என்னமோ
அதிர்ச்சிதான். லூயிஸ் வில்லி என்ற நகரில் உள்ள உணவு விடுதிக்கு நண்பர்களோடு சென்ற
கேஸியஸ் கிளேவிற்கு அங்கு கருப்பினத்தவர் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட
அதுவரையில் கழுத்தில் அணிந்திருந்த தங்கப் பதக்கத்தை ஓகியோ ஆற்றில் வீசி
எறிகிறார். நிற வெறியின் கொடுமையை உணர்ந்து அதற்கு எதிரான போராட்டத்தில் இணைந்தும்
கொள்கிறார். அமெரிக்காவின் முக்கிய போராளியான மால்கம் எக்ஸ் உடன் இணைகிறார்.
இஸ்லாம்
தேசம் என்ற அமைப்புடன் இணைந்து கொள்கிறார். மதம் மாறி முகமது அலி என்று பெயரை
மாற்றிக் கொள்கிறார். கேஸியஸ் கிளே என்ற பெயர் அவரது பெற்றோர்களை அடிமைகளாக
வைத்திருந்தவர் பெயர் என்பது பெயர் மாற்றத்திற்கான காரணம். வெள்ளியின ஆணவத்தோடு
அவரை மீண்டும் மீண்டும் கேஸியஸ் கிளே என்று அழைத்து அவமானப்படுத்த முயன்ற ப்ளாய்ட்
பேட்டர்ஸனோடு நடந்த போட்டியை முகமது அலி கையாண்ட விதம் சிறப்பானது. “இப்போது என்
பெயரைச் சொல்” என்று ஒவ்வொரு குத்தின் போதும் ஆக்ரோஷமாக முழங்கினார். அவருக்கு
பாடம் கற்பிக்கவே அந்த போட்டியை பல சுற்றுக்கள் வரை எடுத்துச் சென்றார்.
களத்தில்
ஆக்ரோஷ முகம் காண்பிக்கு முகமது அலியின் இன்னொரு முகம் அவரின் இன்னொரு பரிமாணத்தை
வெளிப்படுத்துவது. மனித நேயத்தின் அடையாளமாக திகழ்ந்தவர் அவர்.
கட்டாய ராணுவ
சேவைச் சட்டத்தின் படி வியட்னாம் நாட்டிற்கு எதிரான போரில் அவர் கலந்து கொள்ள
மறுத்தார். என்னை நீக்ரோ என்றழைக்காத மக்களுக்காக நான் ஏன் போரிட வேண்டும் என்று
கேட்ட அவர் வெள்ளையின் வெறி பிடித்த எஜமானர்களுக்காக வெள்ளை நிறமல்லாத மக்கள்
வாழும் நாட்டை இருளடையச் செய்ய பத்தாயிரம் மைல்கள் கடந்து நான் செல்ல மாட்டேன்
என்று அவர் உறுதியாக இருந்ததால் குத்துச்சண்டை போடுவதற்கான அவரது உரிமம் ரத்து செய்யப்பட உச்ச நீதிமன்றம் வரை சென்று
அதனை மீட்டெடுத்தார். ஆப்பிரிக்க நாடான கானாவிற்குச் சென்று அங்குள்ள மக்களிடன்
தன் வேர்களைத் தேடியே இங்கே வந்ததாக பேசியுள்ளார்.
அமெரிக்க –
இராக் போரின் போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிணைக்கைதிகளை மீட்க அமெரிக்க அரசு
இவரை பயன்படுத்தியது. சதாம் ஹூசைனோடு முகமது அலி பேசி அமெரிக்க பிணைக்கைதிகளை
மீட்டுக் கொண்டு வந்தார். ஆனால் பாலஸ்தீன கைதிகளை மீட்க இஸ்ரேல் வந்த முகமது அலியை
சந்திக்கவே இஸ்ரேல் அரசு மறுத்து விட்டது. ஜியோனிஸக் கொள்கைகளுக்கு எதிராக முகமது
அலி பேசியதே காரணம்.
அமெரிக்காவின்
பொருளாதாரத் தடை இருந்த போதும் கியூபாவிற்கு ஏராளமாக உதவியுள்ளார். ஐநா சபையின்
யுனிசெப் அனைப்பிற்கும் உதவியுள்ளார். அதை வெளியில் சொல்ல வேண்டாம் என்றும்
சொல்லியுள்ளார். கியூபா, சோவியத்யூனியன், சீனா ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளார்,
இந்தியாவிற்கும் வந்துள்ளார்.
தடை
விதிக்கப்படுவதற்கு முன்பு பங்கேற்ற 31 பெரிய போட்டிகளில் அனைத்திலும்
வென்றதற்காகவும் அதன் பின்பு கலந்து கொண்ட 29 போட்டிகளில் 24ல் வென்றதால் மட்டும்
முகமது அலி, மகத்தானவர் என்று மக்கள் மனதில் இடம் பெறவில்லை. அவர் ஆற்றிய மனித
நேயப் பணிகளாலும்தான். நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மகத்தான மனிதனின் முழு
பரிமாணங்களை அறிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பு இந்த நூல்.
நிற வெறிக்கு
எதிராக அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்கள் இறுதி அத்தியாயத்தில்
அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா
நிகழ்த்திய நிற வெறிக் கொடுமைகளை முழுமையாக அறிந்து கொள்ள உதவிய நூலாசிரியர் தோழர்
அ.பாக்கியம் அவர்களுக்கு நன்றியும் பாராட்டும்.
வேலூர் சுரா
"காப்பீட்டு ஊழியர்" இதழிற்காக எழுதியது.

No comments:
Post a Comment