Wednesday, January 14, 2026

குன்றம் எங்கள் நிலமடா, சுவாசமடா

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் சிறந்த ஓவியக் கலைஞருமான தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். 

அவசியம் முழுமையாக படியுங்கள். திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாகும் என்ற சங்கிகளின் சதி  நிச்சயம் பொய்த்துப் போகும். . .




மலையும் மலைசார்ந்த வாழ்வும்

_______________________________
திருப்பரங்குன்றம் மலை எங்கள் இன்னொரு தாய்மடி. ஒருபுறம், இரண்டு மூன்று மண் குவியல்களை முன்னும் பின்னுமாகக் கொட்டி வைத்தது போன்ற தோற்றப் பொலிவுடனும் மறுபுறம், ஒரு யானை காலை மடக்கி படுத்திருப்பது போன்ற கம்பீரத்துடனும் காட்சியளிக்கும் எங்கள் மலை, எம் குன்றத்து மக்களின் அரணாகவும் இருக்கும் அழகு யாருக்கும் வாய்க்காது. இயற்கை வளத்துடன் சுதந்திரமான, எவ்வித இடையூறும் இல்லாத எங்கள் மலை எப்போதும், எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் துடிப்புடனே சிலகாலம் முன்புவரை இருந்திருக்கிறது.
அது ஒரு காலம்...
மலையேறுவது என்று முடிவு செய்துவிட்டால் நேரம் காலமெல்லாம் பார்க்காமல் குபீரென கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் பத்துப் பன்னிரண்டு பேருக்கு குறையாமலும், இரவாகவும் அது இருக்கும். சிறு தீனிகள், தண்ணீர் கேன்களுடன் இரவு பத்து மணிக்கு மலையேறினால், இறங்கி வரும்போது பழனியாண்டவர் கோவில் தெருவின் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்!
நாங்கள் மலையேறும்போது இரவு நேர ரோந்துப் பணியில் இருக்கும் காவல்துறை நண்பர்கள் பார்த்துவிட்டால், சில நிமிடங்கள் நின்று எங்களைப் பார்த்துவிட்டு, "ஓ. நீங்களா... உங்களுக்கொல்லாம் தூக்கமே வராதா?" என்று சொல்லி சிரித்தபடி கிளம்பிவிடுவார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய ஆளுமைகள் பலரும் எங்களோடு மலையேறிய ஏகாந்தமான நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்... கலை இலக்கியம் அரசியல், பாடல்கள், கதைகள், கவிதைகள் என நீளும் பொழுதுகளில் குன்றத்து மலையே எங்களுடன் அமர்ந்து கூடிக்களித்திருப்பது போன்ற உணர்வுகளுடனேயே விடிகாலை பிரியா விடைகொடுத்து கீழிறங்குவோம். அதிலும், பௌர்ணமி நாட்களில் மிளிரும் மலையின் அழகை நடந்துணர்வதற்காகவே மலைமுழுவதும் அலைந்து திரிவோம். அப்படி ஒருநாள், யார் கண்ணிலும் படாத அழகிய குளம் ஒன்றுக்கு 'சாகுந்தலா குளம்' என்று சு.வெங்கடேசன் பெயர் சூட்டியதும், மற்றொரு நாள் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'இனியவை நாற்பது' போல், 'நிலா நாற்பது' படைக்கப் போவதாக மலையின் மெலமர்ந்து அறிவித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
சிலநேரங்களில் படிகளின் வழியே மலை ஏறாமல், பழனியாட்டவர் கோவில் பின்புறமுள்ள சரிவான நீள் பாறை வழியாக உச்சிப்பிள்ளையார் கோவில் சென்று, அங்கிருந்து செங்குத்தாக உள்ள பாறையில் இறங்கி நெல்லித் தோப்பை அடைவோம். அங்குள்ள சுமார் பத்தடி உயரத்தில் வெட்டிப் பிளந்ததுபோல் சிறிது சாய்வாகவும் செங்குத்தாகவும் உள்ள ஒற்றைப் பாறையில், 20 30 அடிகள் பின்னால் போய் ஓடிவந்து ஏறி திறமையைக் காட்டுவோம். (அது அவ்வளவு எளிதானதல்ல. பல முறை உச்சிக்குப் போகாமல் பின்னோக்கி சரிந்தபடியே கீழே வந்து விழுவோம்) பிறகு மறுபடியும் படிகளைப் பயன்படுத்தாமல் பாறைகள் வழியாகவே, காசிவிஸ்வநாதர் கோயில், அங்கிருந்தபடியே பின்புற பாறை வழியாக சிக்கந்தர் தர்கா, அங்கிருந்து இறங்கி, தூண் இருக்கும் பாறை, ஒற்றை மரம் என மலை முழுவதும் அரட்டையடித்துவிட்டு கீழிறங்கவும் பொழுது விடியவும் சரியாக இருக்கும்.
காசிவிஸ்நாதர் ஆலயத்திற்கு முன்னதாக நீள்வெட்டுத் தோற்றத்திலும், ஆலயத்திற்கு உள்ளே குளம்போலவும் தேங்கி இருக்கும் சுனைநீரை லட்சுமி தீர்த்தமென அங்கு வருபவர்கள் அள்ளிப் பருகுவார்கள். சிக்கந்தர் அவுலியா தர்காவிற்கும் அதிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையின் விளிம்பு செங்குத்தாக இருப்பதால் (யாராவது தவறி விழுந்தால் உடலைத் தேடித்தான் எடுக்கவேண்டும். பல தற்கொலைகளும்கூட அங்கு நடந்திருக்கிறது.) பக்தர்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்டும் பணி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்றது.
ஒன்று முதல் ஐந்துவரை பெரியரத வீதியில் இருந்த கோட்டைப் பள்ளியில் நான் படித்தபோது, (இப்போது அந்தப்பள்ளி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் உள்ளது) இட நெருக்கடியால் இரண்டாம் வகுப்பு மட்டும் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள மலையேறும் படிகட்டு அருகில், சாவடியில் நடக்கும். அப்போது அந்தப்பணி நடைபெற்றபோது, கட்டுமானப் பணிகளுக்கு பொருட்களை கொண்டுசெல்ல படிகளைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். சும்மா நடந்தாலே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி, இளைப்பாறியபடிதான் செல்லவேண்டிய நிலையில் சிமெண்ட், மணல், உடைகற்களைக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதானதல்ல, ஆட்கள் கிடைப்பதும் கடினம்.
இந்தச் சூழலில்தான். சாவடிக்கு (பள்ளி) முன்னால் குவிக்கப்பட்ட உடைகற்களை யார் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று கூலியை பெற்றுக் கொள்ளலாம். எட்டு வயதில் என் வகுப்பு நண்பர்களுடன் அந்த கற்களை நான் சுமந்திருக்கிறேன். (ஒரு கல்லுக்கு 5 பைசா என்று நினைவு.) ஒரு கல்லை சுமந்து செல்வதற்குள் முழி பிதுங்கிவிடும். இதில் ஆச்சரியம் என்னவென்றால். தர்காவுக்கு பிரியாணி அண்டா மற்றும் அங்குள்ள கடைக்கு சோடா, கலர் பெட்டிகளை தலையில் சும்மாடு கூட்டி பாய்மார்கள் அசால்ட்டாக கொண்டுசெல்வார்கள்.
பிறந்ததிலிருந்தே எனக்கும், தெருப் பசங்களுக்கும் உடன் பிறந்தது மலையேறுவதும், மலையில் சுற்றித்திரிவதும்.
"டேய் இங்க பார்ரா, எவனோ பாய் தலவாணி விரிச்ச மாரி வருசயா பளபளன்னு செதுக்கி வச்சிருக்கான்" என்றுதான் அறிமுகமாகியது, கால் முளைத்து நாங்கள் முதன் முறையாக மலையேறிய போது 'சமணப் படுகைகள்'. சமணர்கள் பள்ளிகொண்ட படுகைகள் தாங்கிய குகையுடன் இருக்கும் மலையடிவாரம்தான் எங்கள் வீடும், தெருவும். வீட்டின் பக்கவாட்டு சந்துக்குள் புகுந்து கிடுகிடுவென ஏறினால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் படுகையில் இருப்போம். படியேறி இறங்குவதெல்லாம் (அதற்கும் தனியே படிகள் உள்ளன) கெளரவக் குறைச்சல் என்பது, படிக்கிற காலத்தில் எங்கள் எண்ணம். தேர்வுக்குப் படிக்க நாங்கள் தேர்வு செய்யும் இடம் சமணப் படுகை.
குறுக்கு வாக்கில் நீளமாக மலையை வெட்டிப் பிளந்தது போன்ற அந்தக் குகையின் படுகைக்கு உள்ளேயுள்ள துளையில் சிரமப்பட்டு நுழைந்து அருகில் உள்ள மறு துளை வழியாக வெளியேறும் போது திகிலாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு விளையாட மட்டும்தான். படிப்பதற்கென்று நாங்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு இடம் உண்டு. படுகைக் குகையின் பக்கவாட்டில் சிறிது இடறினாலும் கீழே உருளக் கூடிய பாதையில் மலையை உரசிக் கொண்டே நகர்ந்து சென்றால், ஒரு ஐந்து பேர் மட்டுமே உட்காரக்கூடிய - துப்பாக்கியால் துளைத்தது போன்ற - அந்த குகையில் ஆட்டுப் புழுக்கைகளைத் தட்டிவிட்டுப் அமர்ந்து படிப்போம். அந்தக் குகையின் அருகில் மேலும் சில சிறு சிறு பொந்துகள் இருக்கின்றன. ஆந்தைகள் அடையும் அதற்குள் ஒருமுறையாவது நுழைந்துபார்த்துவிட வேண்டும் என்பதை ஆசைப்படத்தான் முடியும். நிஜத்தில் நடக்காது. அது ஆந்தைகளின் வசிப்பிடம் என்பதுகூட எனது பெரியம்மா சொல்லித்தான் தெரியும். மலையின் வெக்கை வீசும் வீட்டு வாசலில் இரவுகளில் படுக்கும் பெரும்பாலான தெரு மக்களில் நானும் ஒருவன். அப்படிப் படுத்திருக்கும்போது நள்ளிரவு நேரத்தில் பலமுறை "ஏய்... ஏய்" என்று அடித் தொண்டையில் யாரோ ரகசியமாய் கூப்பிடுவது போன்ற ஓசையைக் கேட்டு பயந்து தூங்காமல் இருந்திருக்கிறேன். ஒருநாள் என் பெரியம்மாவிடம், "எம்மா, மலையில் பேய் இருக்கா" என்றேன். அதற்கு பெரியம்மா, "எந்த கீர முண்டடா சொன்னது" என்றது. "இல்ல ராத்திரி அங்கருத்து ஏய், ஏய்னு கூப்புடுது" என்று மலையில் உள்ள துளைகளைக் காட்டி நான் சொன்னவுடன் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "அட அறுதப் பயலே அது ஆந்த மூச்சு விடுற சத்தம்டா" என்று சொன்ன பிறகுதான் இரவுகளில் நிம்மதியாக தூக்கம் வந்தது. அதன் பிறகு அ(ஆ}ந்த ஓசையை ரசிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் வீட்டிற்கு நேர் மேலே உள்ள சமணக் குகைகளும் (அதற்கு பஞ்சபாண்டவர் குகை என்று கதை கட்டியவன் எவன் என்று தெரிவில்லை.) கிழக்கே சற்று தள்ளி உள்ள உச்சிப்பிள்ளையார், காசி விஸ்வநாதர் ஆலயங்களும், மலை உச்சியில் உள்ள தர்காவும், தெற்கே அடிவாரத்தில் உள்ள ஊமையாண்டவர் கோயிலும் (கல்வெட்டுக் குகைக் கோயில்) ஏழு கன்னிமார்கள், கருப்பசாமி, உள்ளிட்ட குலதெய்வங்களும், குன்றத்து மலைக்கு எதிரில் உள்ள கூடதட்டி மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் போன்ற சித்தர்கள் ஜீவசமாதிகளுமாய் பலரும் வந்துசெல்லும் நந்தவனமான இருந்த குன்றம் இப்போது மதவெறி குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாக சிக்கியிருக்கிறது.
பறவைகளின் வேடந்தாங்கலாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இந்து மக்களும் முஸ்லீம் மக்களும் சுதந்திரமாக வந்து சென்ற குன்றத்து மலை இப்போது உள்ளூர் மக்களுக்கே அந்நியப்பட்டு கிடக்கிறது. இரவிலும் காவல்துறையினர் சிரித்து மலைக்கு வழியனுப்பிய காலம்போய், பகலிலேயே ஆதார் கார்டு ஆதாரம் கேட்கும் குரூரம் அரங்கேறுகிறது. மதவெறியர்களின் பக்க வாத்தியங்களாகவும், ஊதுகுழலாகவும் உள்ளூர் காவல்துறையும், உயர்நீதிமன்றமும் மாறியிருக்கிறது. பக்தர்கள் எப்போதும் போல் தங்கள் வழிபாட்டை தொடரும்போது, பக்தியை வைத்து அரசியல் செய்யும் சங்கிப் பதர்கள் குன்றத்து அமைதியைக் குலைப்பதற்கு நாள்தோறும் வந்து குரைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது...
சரவணப் பொய்கையில் நீராடி, முருகனின் திருநீரணிந்து, உச்சிப்பிள்ளையாருக்கு தீபம் ஏற்றி, காசிவிஸ்வநாதரை வணங்கிய கையோடு சிக்கந்தரிடமும் மந்திரித்துக்கொள்ளும் எம் குன்றத்து மக்கள் இந்தப் பிணைப்பில் நெருப்பள்ளி போடுபவர்களின் ஈனப் பிழைப்பில் நிச்சயம் மண்ணள்ளிப் போடுவார்கள்.
- வெண்புறா

No comments:

Post a Comment