மறைந்த எங்கள் பிதாமகர் தோழர் சந்திரசேகர் போஸ் அவர்களின் தன்வரலாறு நூலான "TALKING ABOUT TIMES PAST" நூலை மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
அதிலே அவர் குறிப்பிட்ட சம்பவத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இங்கே . . .
எல்.ஐ.சி உருவான போது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஒன்று இருந்தது.
இருநூறுக்கும் மேற்பட்ட தனியார் கம்பெனிகள். அதில் ஒவ்வொரு கம்பெனிக்கும் ஒவ்வொரு ஊதியம். அதிலும் மைய அலுவலகம், கோட்ட அலுவலகம், கிளை அலுவலகம் என்று அலுவலகத்தின் தன்மையை ஒட்டி ஊதியம் மாறும்.
எல்.ஐ.சி நிறுவனம் உருவான பின்பு ஊதியங்களை சீரமைக்க வேண்டியிருந்தது. அதிலும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் உயர் நிலையில் சீரமைக்க வேண்டியிருந்தது.
எல்.ஐ.சி நிர்வாகமோ, அரசோ இக்கோரிக்கையை செவி மடுக்கவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டும் முன்னேற்றமில்லை. எனவே போராட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. 05.12.1956 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுக்கப்பட்டது.
வேலை நிறுத்தம் நடக்கட்டும், தொழிற்சங்கத்தோடு பேசுவதா, வேண்டாமா என்று பிறகு முடிவு செய்கிறேன் என்று நிதியமைச்சட் டி.டி.கிருஷ்ணமாச்சாரி ஆணவமாக சொல்கிறார்.
வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடக்கிறது. பிசிபிசுத்துப் போகும் என்று நினைத்த அரசிற்கு பெருத்த அடி.
எல்.ஐ.சி ஊழியர்களின் ஊதியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. சதன் குப்தா என்ற கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் (அப்போது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிதான்) பிரச்சினைகளை பேசுகிறார். தோழர் சந்திரசேகர் போஸ் ஹிந்துஸ்தான் கம்பெனி சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்த போது தலைவராக செயல்பட்டவர் அவர். அதனால் அவரால் அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து வைக்க முடிந்தது.
அவர் பார்வைத்திறன் அற்றவர். பதிலளிக்க எழுந்த கிருஷ்ணமாச்சாரி, அந்த குறைபாட்டை குத்தி காண்பித்து நக்கலாக பேசுகிறார்.
உடனே தோழர் ஏ.கே.கோபாலன், தோழர் ஹிரேன் முகர்ஜி போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் கோபத்துடன் எதிர்க்கிறார்கள்.
அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு எழுந்திருக்கிறார்.
"கிருஷ்ணமாச்சாரி பேசியது மிகவும் தவறு. அவ்வாறு அவர் பேசியிருக்கக் கூடாது, அவர் பேசியதை அவைக்குறிப்புக்களில் இருந்து நீக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொள்கிறேன். ஊழியர் சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும்"
அதன் படியே பிரச்சினைக்கும் விரைவில் சங்கமும் ஊழியர்களும் எதிர்பார்த்தபடியே தீர்வு வந்தது.
இதுதான் தோழர் போஸ் எழுதியது.
இதுவே நேருவின் இடத்தில் மோடி இருந்திருந்தால்?
தோழர் சதன் குப்தாவை நிதியமைச்சர் உருவக்கேலி செய்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. ஏனென்றால் அதை மோடியே செய்திருப்பார். இன்னும் சொல்லப்போனால் இப்பிரச்சினை நாடாளுமன்ற விவாதத்திற்கே வந்திருக்காது.
நேரு மனிதராக இருந்தார். மோடி ?????
அதை நான் என் வாயால் சொல்ல வேண்டுமா என்ன!!!!

No comments:
Post a Comment