Saturday, January 17, 2026

சுற்றுச் சூழலா? கோடிகள்தானே முக்கியம் மைலார்ட்?

 


"இப்போதெல்லாம் நீதிபதிகள் தீர்ப்புக்களை எழுதுவதில்லை. பணி ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளுக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள்."

இன்றைய  நீதித்துறை மீது  வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது.  

பணி ஓய்வுக்குப் பிறகு நான் எந்த பதவியையும் நாட மாட்டேன் என்று சொன்ன தலைமை நீதிபதி தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு விட்டாரோ என்று சந்தேகமளிக்கும் வகையில் ஒரு தீர்ப்பினை அளித்துள்ளார்.  சொல்லப்போனால் உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்கு முன்பு அளித்த தீர்ப்பை திரும்பப் பெற்றுள்ளார்.

எந்த ஒரு பெரிய தொழிற்சாலையோ அல்லது வேறு எந்த பெரிய கட்டுமானப் பணியோ செய்தால் அதற்கு சுற்றுச் சூழல்  அனுமதி பெற வேண்டும் என்பது விதி. அப்படி அனுமதி பெறாத கட்டுமானங்களை இடித்துத் தள்ள வேண்டும் என்பதும் விதி. 

மோடி ஆட்சிக்கு வந்ததும் 2017 ல் ஒரு அரசாணை வெளியிடுகிறார்கள். அதன் படி சுற்றுச் சூழல் அனுமதி இல்லாவிட்டாலும் கட்டுமானப் பணி முடிந்து விட்டால் முன் தேதியிட்ட அனுமதி கொடுக்கலாம் என்பதே அந்த ஆணை. இந்த ஆணை 2018 வரை நீடிக்கிறது.

அப்படியென்றால் 2018 க்குப் பிறகு சுற்றுச்சூழல் அனுமதியோடுதான் கட்டுமானங்கள் நடந்ததா?

அதெப்படி நடக்கும்.

2017 போல 2021 லும் இன்னொரு அரசாணை வெளியிட்டு கட்டுமானத்துறை மாஃபியாக்களின் வயிற்றில் பாலை வார்த்தது மோடி அரசு.

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இவ்வாறு முன்தேதியிட்ட  அனுமதி கொடுப்பது சரியல்ல என்று ஒரு வழக்கு தொடரப்பட மே 2025 ல் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வு 2017, 2021 அரசாணைகளை ரத்து செய்து அனுமதி பெறாமல் செய்யப்பட்ட கட்டுமானங்களை இடிக்குமாறு உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட் மாஃபியா மீண்டும் உச்ச நீதிமன்றம் செல்ல மூன்று பேர் அமர்வு விசாரிக்கிறது. ஒரு நீதிபதி முந்தைய தீர்ப்பு செல்லும் என்று சொல்ல தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதியும் மே 2025 தீர்ப்பை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டுள்ளனர்.

இதற்கு சொல்லப்பட்ட காரணம் என்ன தெரியுமா?

அனுமதி பெறாத கட்டுமானங்களை இடித்தால் அவற்றுக்காக முதலீடு செய்யப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் வீணாகி விடுமாம். 

அதாவது சுற்றுச் சூழலை பாதுகாப்பதை விட, சட்டங்களையும் விதிகளையும் காப்பதை விட சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொண்ட ரியல் எஸ்டேட் மாஃபியாவின் நலனே முக்கியம். 

அநேகமாக நாளை போதைப் பொருட்களின் கடத்தலை நியாயப்படுத்தக் கூட ஏதாவது அரசாணை வெளிவரலாம். அதுவும் அதானியின் துறைமுகம்தான் போதைப் பொருள் கடத்தலின் கேந்திரமாக உள்ளது.  அப்படிப்பட்ட அரசாணை வந்தாலும் அதைப் பாதுகாக்கத்தான் இருக்கவே இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பிகு: இப்பதிவை எழுதி ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. கிட்டத்தட்ட இதே போன்றதொரு சட்ட விரோத கட்டுமானத்திற்கு பாதுகாப்பளிக்கும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளதால் நீண்ட காலமாக ட்ராப்டிலேயே இருந்த பதிவை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.

சமீபத்திய தீர்ப்பைப் பற்றி மாலையில் எழுதுகிறேன்.

No comments:

Post a Comment