Monday, January 19, 2026

இன்சூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி என்பதால் . . .



 சமீபத்தில் இரண்டு ஓய்வூதியர் அமைப்புக்களின் கூட்டங்களில் கலந்து கொண்டேன். ஓய்வூதியர் தினத்தை முன்னிட்டு மத்திய, மாநில, பொதுத்துறை ஓய்வூதியர் அமைப்புக்கள் சார்பாக நடத்தப்பட்ட கூட்ட,ம் ஒன்று. எட்டாவது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வுக்கு வேட்டு வைக்க நினைக்கும் முயற்சிக்கு எதிராக நடத்தப்பபட்ட தர்ணா போராட்டம் இன்னொரு கூட்டம்.

இரண்டு கூட்டங்களிலும்  நான் சந்தித்த தோழர்கள், எல்.ஐ.சி யில் நூறு சதவிகித அன்னிய மூலதனம் அனுமதிக்கப்பட்டு விட்டது. இதன் விளைவுகள் என்னாகுமோ, நாம் எல்.ஐ.சி யில் செய்யப்பட்ட பணத்திற்கு பாதுகாப்பு இருக்குமோ என்ற அச்சத்தை பகிர்ந்து கொண்டார்கள். 

நூறு சதவிகித அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்பது இன்சூரன்ஸ்துறையில் செய்யப்பட்டதே தவிர எல்.ஐ.சி யில் அல்ல என்று விளக்கினேன். 

அது என்ன விளக்கம் என்று இப்பதிவில் சொல்கிறேன்.

எல்.ஐ.சி யில் நூறு சதவிகித அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டு விட்டதா? 

இல்லை, 

நிச்சயமாக இல்லை.

கொஞ்சம் பின்னோக்கி பார்ப்போம்.

நரசிம்மராவ் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், ரிசர்வ் வங்கி ஆளுனராக இருந்த ஆர்.என்.மல்ஹோத்ரா  தலைமையில்  இன்சூரன்ஸ்துறையில் சீர்திருத்தம் செய்ய பரிந்துரைகள் வழங்க ஒரு குழு அமைக்கிறார்.

அந்த குழு ஜனவரி 1994 ல்  இரண்டு முக்கியமான  பரிந்துரைகளை அளிக்கிறது.

இன்சூரன்ஸ் துறையில் தொழில் செய்ய வெளிநாட்டுக் கம்பெனிகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களை  அனுமதிக்கலாம்.

எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ தனியாருக்கு விற்று விட வேண்டும்.

நரசிம்மராவ் ஆட்சிக்காலம் முடியும் வரை அந்த பரிந்துரைகளை அவர்களால் அமலாக்க முடியவில்லை.

1997 ல் ஐ.கே.குஜ்ரால் பிரதமராக இருக்கும் போது இன்சூரன்ஸ் துறையில் தனியார் கம்பெனிகளை 24 % அன்னிய முதலீட்டுடன் அனுமதிக்கும் ஐ.ஆர்.ஏ மசோதாவை ப.சிதம்பரம் கொண்டு வருகிறார். இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.  திருத்தம் கொண்டு வருகிறார்கள். அதை காங்கிரஸ் கட்சியுடன்  பாஜகவும் சேர்த்து தோற்கடிக்கிறது.  பிறகு ஒரு பாஜக உறுப்பினர் அன்னிய முதலீட்டிற்கு எதிரான திருத்தத்தை கொண்டு வருகிறார். அந்த திருத்தத்தை ஆதரிக்கப் போவதாக இடதுசாரிகள் அறிவிக்கிறார்கள். அந்த திருத்தம் நிறைவேறினால் அரசு கொண்டு வந்த மசோதா தோற்றுப் போகும் என்று அர்த்தம். நிலைமையை உணர்ந்து கொண்ட குஜ்ரால் ஐ.ஆர்.ஏ மசோதாவை திரும்பப் பெறுகிறார்.

பிறகு வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் கொண்டு வந்த அதே மசோதா, அதே 24 % அன்னிய முதலீட்டுடன் தனியாரை அனுமதிக்கும் ஷரத்துக்களுடன் ஐ.ஆர்.டி.ஏ மசோதா அறிமுகம் செய்யப்படுகிறது. இடதுசாரிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். சமஜ்வாடி கட்சியும் ராஷ்டிர ஜனதா தள் கட்சியும், அதிமுகவும் (ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன்) கூட எதிர்க்கிறார்கள். அன்னிய முதலீடு கூடாது என்று வலியுறுத்துவதாக ஒரு தர்ணா நாடகத்தை ஆடிட்டர் விஷமூர்த்தி, சுதேசி ஜக்ரான் மஞ்ச் என்ற பெயரில் நடத்தியது வேறு கதை.

ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி ஒரு வெளிநாட்டுக் கம்பெனி தனியாக இந்தியாவில் இன்சூரன்ஸ் கம்பெனி தொடங்க முடியாது. ஏதாவது ஒரு இந்திய முதலாளியின் கூட்டாளியாகத்தான் அந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் மூலதனத்தில் அதிகபட்சம் 24 % முதலீட்டோடு மட்டும்தான் வர முடியும்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 24 % அன்னிய முதலீடு என்று இருந்தது மோடி காலத்தில்  49 %,  ஆக முதலில் உயர்த்தப்பட்டது. பின்பு 74 % ஆகவும் உயர்த்தப்பட்டது. 

74 % வரை அன்னிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளதே, எல்லா தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளிலும் 74 % வரை அன்னிய முதலீடு இருக்கிறதா? 

23 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் மூன்று கம்பெனிகளில் அன்னிய மூலதனமே கிடையாது.

மூன்றே மூன்று கம்பெனிகளில் மட்டும்தான் 74 % அன்னிய மூலதனம் உள்ளது.

எட்டு கம்பெனிகளில்  49 % அன்னிய மூலதனத்திற்கு மேல் கிடையாது.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் உள்ள அன்னிய மூலதனம் என்பது வெறும் 32.67 % மட்டுமே.

உங்களுக்கு சில கேள்விகள்  வரலாம்.

அன்னிய மூலதனத்திற்கு இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய ஆர்வமில்லாத போது எதற்கு 100 % என்று உயர்த்த வேண்டும்?

ஆளில்லாத கடையில் யாருக்காக டீ ஆற்ற வேண்டும்?

இந்த முடிவினால் என்ன பாதிப்பு யாருக்கு வரும்?

ஆளில்லாத கடையில் மோடி டீ ஆற்றுகிறார் என்று நாம் நம்பி விடக் கூடாது. 

இந்திய முதலாளிகளோடு கூட்டாளியாக தொழில் நடத்த முடியாது என்று தனிக்கடை போட காத்துக்கொண்டிருக்கும் அன்னிய கம்பெனிகள் இருக்கின்றன. அவர்களுக்கான வாசலை மோடி திறந்து வைத்துள்ளார். இந்திய மக்களின் முதலீடு முழுமையாக அந்த வெளிநாட்டு கம்பெனிகளின் வசம் போனால் அதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கு என்ன பயன் இருக்கிறது! நாளை அந்த கம்பெனி ஓடிப் போனால் அதனுடன் பாலிசிதாரர்களின் பணமும் ஓடி விடும்.

இப்போது இந்திய முதலாளிகளோடு கூட்டணி வைத்துள்ள வெளிநாட்டு முதலாளிகள், தனிக்கடை திறக்க தாங்கள் கூட்டாளியாக உள்ள இந்திய இன்சூரன்ஸ் கம்பெனியிலிருந்து தங்கள் மூலதனத்தை திரும்பப் பெற்றுக் கொண்டால் அந்த கம்பெனியின் நிலைமை என்ன ஆகும்? இன்சூரன்ஸ் அடிப்படையில்  ஒரு நீண்ட கால ஒப்பந்தம். பிரிமிய வருமானமும் அந்த அடிப்படையில்தான் முதலீடு செய்யப்பட்டிருக்கும். "என் பணத்தை கொடு, நான் போறேன்" என்று அவர்கள் கழுத்தில் கத்தி வைத்தால் அந்த தனியார் கம்பெனி நிலை குலைந்து போகும், அங்கே பாலிசி எடுத்த மக்களின் பணமும் கூட.

எந்த ஒரு வெளிநாட்டு கம்பெனியும் இந்திய விதிகளை மதிப்பதில்லை. வணிகத்தில் அவர்களிடம் எந்த நெறிமுறைகளும் கிடையாது. அதனால் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு பாதிப்பு வரும். 

எல்.ஐ.சி யைப் பொறுத்தவரை அரசு வெறும் 3.5 % பங்குகளை மட்டும் விற்பனை செய்துள்ளது. மேலும் விற்க வேண்டும் என்று துடிக்கிறது. மிகக் கடுமையாக அந்த முடிவு எதிர்க்கப்பட்டு வருகின்றது. 

ஆக 100 % அன்னிய முதலீடு என்பது எல்.ஐ.சி க்கு அல்ல, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குத்தான்.

பின் ஏன் இந்த குழப்பம்?

தனது 69 ஆண்டு கால மகத்தான சேவை காரணமாக, நம்பிக்கை என்றால் அது எல்.ஐ.சி என்ற முத்திரையை பதித்ததால், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை அலுவலகங்கள், சின்னஞ்சிறு கிராமங்களில் கூட எல்.ஐ.சி யின் முகமாக மாறியுள்ள லட்சக்கணக்கான முகவர்கள்,  அவர்களை வழி நடத்தும் வளர்ச்சி அதிகாரிகள், நேர்மையான, திறமையான, உடனடி சேவையை அளிக்கும் ஊழியர்கள், அதிகாரிகள், ஆகியோரின் அர்ப்பணிப்பால்

மக்கள் மனதில் 

இன்சூரன்ஸ்  என்றால் எல்.ஐ.சி 

என்றே பதிந்துள்ளது. 

எதிர்காலமும் சொல்லும்

இன்சூரன்ஸ் என்றால் எல்.ஐ.சி மட்டுமே

பிகு: இன்று இன்சூரன்ஸ் தேசியமய நாள். 1956 ல் ஆயுள் இன்சூரன்ஸ் துறையை தேசியமயமாக்கும் அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்ட நாள். 



No comments:

Post a Comment