சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Tuesday, April 23, 2024
பாடல் படிக்க வைத்த நூல்
அனைவருக்கும்
உலக புத்தக தின வாழ்த்துக்கள். வாசிப்பை நேசிக்கும் எனக்கு வாழ்த்து சொல்லும் அருகதை இருக்கிறது
என்றே நினைக்கிறேன்.
சமீபத்தில்
படித்த ஒரு நூல் பற்றிய பகிர்வு.
ஆடு
ஜீவிதம்.
நூல்
வாங்கி இரண்டு வருடங்களுக்கு மேலான பின்பும் படிக்காமல் இருந்த நூல்களின் பட்டியலில்
இருந்த நூல் இது.
இதுவே
திரைப்படமாக வெளிவரும் முன்பாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் “பெரியோனோ, என் ரஹ்மானே” என்ற
பாடலைக் கேட்டேன். அநேகமாக மீண்டும் மீண்டும் கேட்ட புதிய பாடல் இதுதான். இதற்கு முன்பாக
அப்படி கேட்டது பொன்னியின் செல்வன் 2 படத்தின் “வீரா தீரா” பாடல்.
அந்த
பாடலை கேட்டவுடன் பயணப் பையில் இந்நூலை எடுத்து வைத்துக் கொண்டேன்.
இம்மாத
துவக்கத்தில் ஒரு இரண்டு மணி நேர பயணம். சென்ற இடத்தில் ஒரு மூன்று மணி நேரம் காத்திருந்து
போன வேலை நடக்காமல் வெட்டியாய் திரும்பி வந்தேன்.
ஆனாலும் அந்த பயணத்தை பயனுள்ளதாய் மாற்றியது ஆடு ஜீவிதம்.
திரைப்படமாக
வந்ததால் கதை அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் சுருக்கமாக சொல்லியாக வேண்டும்.
குடும்பத்தின்
பொருளாதாரப் பிரச்சினைகள் தீர்ந்து வளமான வாழ்வு வாழலாம் என்ற நம்பிக்கையோடு சவுதிக்குப்
புறப்படுகிறான் நஜீப். அவனுக்கான முதல் அதிர்ச்சி விமான நிலையத்தில் கிடைக்கிறது. ஒரு
மோசமான ஓட்டை வாகனத்தில் நாற்றமடிக்கும் உடை அணிந்த ஒருவன் அவனை அழைத்துச் செல்கிறான்.
எங்கே?
எதற்கு?
பாலைவனத்துக்கு
நடுவில் இருக்கிற ஆட்டுத் தொழுவத்திற்கு. ஆடு மேய்க்கும் வேலைக்கு.
பயிர்கள்
இல்லாத பாலைவனத்தில் ஆடுகள் எதை மேயும் என்ற கேள்வி வருகிறதல்லவா?
ஆடுகளை
தொழுவத்திலிருந்து நடக்க வைத்து பின் கூட்டி வருவதுதான் வேலை. அப்படி நடக்காவிட்டால்
ஆடுகளுக்கு நோய்கள் வருமென்பதால் அந்த ஏற்பாடு.
நஜீபோடு
இன்னொரு பணியாள். அவனும் அழுக்கான ஆடைகளோடு பார்க்கக் கொடூரமாக இருக்கிறான். சில நாட்கள்
கழித்து காணாமல் போகிறான்.
முகம்
கழுவ தண்ணீரை பயன்படுத்தியதெற்கெல்லாம் பெல்ட்டால் அடித்து சாப்பாடு கொடுக்காமல் எஜமானன்
செய்யும் சித்திரவதைகளை முதலில் தாங்க முடியாத நஜீபிற்கு பின் அதுவே பழகி விடுகிறது.
ஆடுகளை நேசிக்க தொடங்குகிறான். பெயர் வைக்கிறான். அவை வெட்டுக்கூடத்திற்கு செல்லும்
போது கலங்குகிறான்.
வாழ்நாள்
முழுதும் பாலைவனத்திலேயே முடிந்து விடுமோ என்று அஞ்சும் நஜீபிற்கு தப்பித்துச் செல்லும்
வாய்ப்பு கிடைக்கிறது. பாலைவனத்தில் நடந்து நடந்து நடந்து நடந்து ஒரு வழியாக நகரத்தை
வந்தடைகிறான். தாய்நாடு திரும்புவதற்கான வழிமுறையாக தானே கைதாகிறான்.
தப்பித்துச்
சென்ற வேலையாட்களை சிறையில் முதலாளிகள் தேடிப்பிடுத்து மீண்டும் இழுத்துச் செல்வார்கள்,
குறிப்பிட்ட காலம் வரை யாரும் வராவிட்டால் தூதரகம் மூலம் தாய்நாடு திரும்பி விடலாம்.
இந்த நாள் கழிந்து விட்டாக் சுதந்திரம் என்று நம்பிக்கையோடு காத்திருக்கும் நஜீபின்
கனவுகளை தகர்க்கும் வண்ணம் அன்றுதான் நஜீப்பை
விமான நிலையத்திலிருந்து இழுத்துச் சென்ற மனிதன் வருகிறான். நஜீபின் இதயம் துடிக்கிறது.
அவன் கண்டுகொள்ளவில்லை. ஒரு வழியாய் துயரம் முடிந்து போகிறது.
முன்பின்
தெரியாத இடத்தில் சிக்கிக் கொண்டும் தப்பிக்கும் போதும் பல சித்திரவதைகள் அனுபவித்தாலும் வாழ வேண்டும் என்ற
வேட்கை நஜீபிற்கு குறையவே இல்லை. அந்த வேட்கைத்தான்
நஜீபை காப்பாற்றியது. பிரச்சினைகள் எதுவானாலும் நம்பிக்கையோடு எதிர்கொண்டால் அதிலிருந்து
வெளி வர முடியும் என்பதுதான் நூல் சொல்லும் செய்தி. முக்கியமான செய்தி.
ஒரு
உண்மை நிகழ்வை பென் யாமின் நாவலாக கொடுத்துள்ளார். விலாசினி ரமணி நூலின் உணர்வுகளை
படிப்பவர்கள் நெஞ்சு படபக்கும் படி தமிழாக்கம் செய்துள்ளார். இருவருக்கும் பாராட்டுக்கள்.
ஒரு நிமிடம் கூட சலிப்பு வராமல் நூலின் நடை உள்ளது. அதனால்தான் பயணம் வெட்டியாக முடிந்தாலும்
எரிச்சல் இல்லாமல் நேரம் கழிந்தது.
நூல்
படித்து கிடைத்த உணர்வை இழக்க விரும்பாததால் திரைப்படத்திற்குச் செல்லவில்லை.
No comments:
Post a Comment