நேற்றோ, நேற்று முன் தினமோ நாளிதழில் படித்த செய்தி . . .
சென்னை உயர் நீதி மன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. இளையராஜா துவக்க காலத்தில் இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை அத்திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுக்கு அளித்து விட்டதால் ஸ்பாடிஃபை ஆப் மூலம் கிடைக்கும் ராயல்டி தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று எக்கோ ரெகார்டிங் கம்பெனி வழக்கு தொடுத்துள்ளது.
இந்த பதிவு ராயல்டி பிரச்சினை பற்றியல்ல, அதை நீதிமன்றம் சொல்லட்டும்.
வழக்கு விசாரணையின் போது நடைபெற்ற விவாதத்தில் சொல்லப்பட்ட ஒரு கருத்து பற்றி...
இளையராஜா தன்னை அனைவருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொள்கிறாரா? என்று எக்கோ வழக்கறிஞர் கேட்க
இளையராஜாவின் வழக்கறிஞர் கொதித்துப் போய்
"ஆமாம், இந்த உலகில் மேலானவர் இளையராஜாதான். அனைவருமே அவருக்கு கீழானவர்கள்"
என்று முதலில் சத்தமிட்டு சொல்ல,
ஒரு நொடி தாமதித்து
"கடவுள் மட்டுமே இளையராஜாவுக்கு மேலானவர். மற்ற அனைவரும் அவருக்கு கீழானவர்கள்தான்"
என்று நிறைவு செய்திருக்கிறார்.
வழக்கு மீண்டும் நீதிமன்றம் வந்த போது
"இளையராஜா அப்படி என்ன அவரை அனைவருக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாரா? தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்ற சங்கீத மும்மூர்த்திகளை விட அவர் மேலானவர் என்று சொல்கிறீர்களா"
என்ற கேள்வியை நீதிபதிகள் கேட்க
இளையராஜாவின் சார்பில் வாதாட வந்தவரோ
"அன்றைக்கு என் சீனியர் உணர்ச்சிவசப்பட்டு கூறிவிட்டார். அதை அப்படி பொருள் கொள்ளக்கூடாது, என் சீனியர் விளக்கம் கொடுப்பார்"
என்று வாய்தா வாங்க வழக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது.
தேர்தல் காலம் என்பதால் நீதிபதிகள் சொன்னது பெரிய அளவில் கவனம் பெறவில்லை. அதனால் நீதிபதிகள் தப்பித்தார்கள். இல்லையென்றால் ராஜாவின் கடினச்சாவு விசிறிகள் (DIE HARD FANS) அவர்களை என்னவெல்லாம் படுத்தியெடுத்திருப்பார்கள் என்று நினைக்கவே பயமாக இருக்கிறது. ஏனென்றால் அவர்களைப் பொறுத்தவரை அவர் விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டவர் . . .
No comments:
Post a Comment