பெல்ஜியம் வாழ் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக்கியமான பதிவை அவருக்கு அனுதாபம் தெரிவித்து பகிர்ந்து கொள்கிறேன். இளையராஜாவின் கடினச்சாவு விசிறிகளை மட்டுமல்லாமல் பா.ரஞ்சித் ரசிகர்களையும் சீண்டி விட்டார். என்ன ஆகப் போகிறாரோ?
எழுதவேண்டிய அவசியம் இருப்பதால், கொஞ்சம் சர்ச்சையான பதிவு என்று தெரிந்தேதான் எழுதுகிறேன்.
நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்தின் துவக்கத்தில் ஒரு உரையாடல் காட்சி வரும்.
அதில் இளையராஜாவை இனியன் (காளிதாஸ்) போன்றவர்கள் கொண்டாடுவதில்லை என்று ரெனே (துசாரா விஜயன்) சொல்வதாக விவாதம் நடக்கும். ஒரு கட்டத்தில் அந்த உரையாடலில், "எங்கயோ இருக்குற நீனா சிமோனைக் கொண்டாடுவ. ஆனா இளையாராஜாவக் கொண்டாட மாட்டியா?" என்று ரெனே சொல்வதாக ஒரு வசனம் வரும். அந்த வசனம் எனக்கு ஒரு திணிப்பாகத்தான் தெரிந்தது. படம் வந்தபோதே இதுகுறித்து எழுத வேண்டுமென்று நினைத்திருந்தேன். ஆனால் அப்படம் குறித்து வேறொரு திசையில் விவாதம் நடந்துகொண்டிருந்தபடியால் இதுகுறித்து நான் பேசுவது சரியாக இருக்காது என்று விட்டுவிட்டேன்.
அந்த வசனம் குறித்து இரண்டு கருத்துகளை சொல்ல நினைக்கிறேன்.
ஒன்று, இளையராஜா இங்கே கொண்டாடப்படவில்லை என்று சொல்வது இளையராஜாவின் ஒருசில அதிதீவிர ரசிகர்களைத் தவிர வேறு யாருமில்லை. சுமார் 30 ஆண்டுகளாக தமிழ்த்திரையுலகை தன்னந்தனியாக ஆண்டுகொண்டிருந்தவர் இளையராஜா. அவருடைய பெயருக்காகவும் இசைக்காகவும் இங்கே ஓடிய படங்கள் நூற்றுக்கணக்கில் உண்டு. எல்லா இசைக் கருவிகளுக்கும் நேரடியாக இசைக் குறிப்பெழுதி பாடலை உருவாக்கிய கடைசி இசையமைப்பாளர் என்று தைரியமாக அவரைக் குறிப்பிடலாம். இன்றைக்கு மட்டுமல்லாமல் காலத்திற்கும் ராஜாவின் இசை நிலைத்து நிற்கத்தான் போகிறது. அவரது பெயரும் புகழும் என்றென்றைக்கும் அழியாதவை. அவர் கொண்டாடப் பட்டிருக்காவிட்டால், அவருக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகளோ இவ்வளவு பெரிய பெயரோ கிடைத்திருக்குமா? அதனால் ராஜா கொண்டாடப்படவில்லை என்று சொல்லி, போகிற வருகிறவர்களை எல்லாம் கடித்துவைப்பதால் ராஜாவுக்குத்தான் இந்த சிலர் இழுக்கு ஏற்படுத்துகிறார்கள்.
இரண்டாவது, நீனா சிமோனைக் கொண்டாடுவதற்கு பதிலாக ராஜாவை மட்டும் கொண்டாட வேண்டும் என்று சொல்வது என்ன வகையில் சரியென்று தெரியவில்லை. அப்படிச் சொல்பவர்களுக்கு நீனா சிமோன் யாரென்று தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இசை மன்னராக ராஜாவை முழுமையாக ஏற்கிறேன். உலக இசை வரலாற்றில் ராஜாவுக்கு எப்போதும் ஒரு இடமுண்டு. ஆனால் அதற்காக நீனா சிமோனுடன் எல்லாம் ஒப்பிடுவது எவ்வகையிலும் சரியான ஒப்பீடல்ல. அமெரிக்காவில் நம்பர் ஒன் இசையைக் கொடுத்து, மில்லியன் கணக்கில் சம்பாதிக்கும் நிலையில் இருந்த நீனா சிமோன், தான் வாழ்ந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு எதிராக அமெரிக்க வெள்ளையின ஆதிக்கம் நிகழ்த்திவந்த கொடூரங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி எதிர்க்க முன்வந்தார். 1960 களில் அவருடைய பாடல் இடம்பெறாத கருப்பின மக்கள் போராட்டமே இல்லை எனலாம். "மிசிசிப்பி காட் டேம்" என்று அவர் எழுதி இசையமைத்துப் பாடிய பாடல், சுற்றிவளைத்தெல்லாம் இல்லாமல் நேரடியாகவே வெள்ளையின ஆதிக்கத்தை ஓங்கியடித்தது. அவரது "Ain't got no, I got life" பாடல் ஒரு கருப்பினப் பெண்ணின் வாழ்க்கையைப் பேசும் பாடலாக பாடப்பட்டது. இன்றுமே கூட இவ்விரு பாடல்களும் அமெரிக்க கருப்பின மக்களின் வாழ்க்கை நிலைக்கு அப்படியே பொருந்திப் போவதாக இருக்கிறது.
"என்னுடைய வரிப்பணத்தில் வியட்னாமில் போர் நடத்தி அப்பாவி மக்களைக் கொல்வதா? அதற்கு அனுமதிக்கமாட்டேன்" என்று சொல்லி வரிகட்ட மறுத்தார் நீனா சிமோன்.
"மிசிசிப்பி காட் டேம்" என்கிற ஒரு பாடலுக்காகவே அமெரிக்க வெள்ளையின ஆதிக்க இசைத்துறை, நீனா சிமோனைப் பழிவாங்கியது. அவருடைய அடுத்தடுத்த பாடல்களை வெளியிட மறுத்தது. அவரை அமெரிக்க இசை வரலாற்றிலிருந்தே விரட்டியடித்தது. ஆனால், அதற்காகவெல்லாம் ஆளும் வர்க்கத்திடம் நீனா சிமோன் ஒருபோதும் அடிபணியவே இல்லை. அதன்பிறகு அவருடைய இசைப் பாடல்களை பெரியளவிற்கு விற்க எவரும் முன்வரவில்லை என்ற போது கவலையேபடாமல், கருப்பின மக்களின் உரிமைக்காக இறுதிவரை போராடியவர் நீனா சிமோன்.
ஆனால், ராஜாவோ, இன்றைய கொடும் பாசிச காலத்தில், வெறிபிடித்தாடும் சங்கியத்தை எதிர்க்கவில்லை என்றாலும் பரவாயில்லை, அதனோடு கூட்டுசேராமலாவது இருக்கலாம்தானே.
"தான் வாழும் காலத்தின் அரசியலைக் கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள் கலைஞர்களே இல்லை" என்றார் நீனா சிமோன். ஆனால், ராஜாவோ ரங்கராஜ் பாண்டேவோடுதான் எப்போது மேடையேறுகிறார். அம்பேத்கரும் மோடியும் ஒன்று என்கிறார். அவர்கள் கொடுத்த எம்பி பதவியை ஏற்றுக்கொள்கிறார்.
ராஜா என்றென்றைக்கும் மக்கள் மனங்களில் இசையரசர்தான். ஆனால், அதற்காகவெல்லாம் ஒட்டுமொத்த சமத்துவத்திற்காக எல்லா இழப்புகளையும் சந்திக்க நேரிட்டும் உறுதியாக இறுதிவரைப் போராடி மறைந்த நீனா சிமோனையெல்லாம் தாழ்த்திப் பேசாதீர்கள்.
இன்று நீனா சிமோனின் நினைவு நாள்.
No comments:
Post a Comment