மூன்றாண்டுகள்
முன்பாக இதே நாளில் இந்த படம் எடுக்கப்பட்டதாக இன்று முகநூல் நினைவு படுத்தியது.
தோழர்
எஸ்.ராஜப்பா, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் என்னை ஈர்த்த முதல் தலைவர்.
பணியில் சேர்ந்த முதல் நாளில் பயிற்சி வகுப்பு முடிந்த அடுத்த நிமிடம் தொடங்கிய சங்கக்
கூட்டத்தில் உரையாற்றிய தலைவர். அன்று அவர் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின்
இணைச் செயலாளர்.
சங்கத்தலைவர்கள்
வருவதைப் பார்த்து ஒரு அதிகாரி கண் காட்ட ஒலி பெருக்கியை அவசரம் அவசரமாக அப்புறப்படுத்த,
“நாங்கள் நினைத்தால் அதை அங்கேயே வையுங்கள் என்று சொல்லியிருக்க முடியும். இந்த அறை
மட்டுமல்ல, அதைத் தாண்டியும் ஒலிக்கும் வலிமை எங்கள் குரலுக்கு உண்டு என்பதால் அது
தேவையில்லை” என்று கம்பீரமான தோற்றத்தோடு அந்த வெள்ளை உடை மனிதர் பேசத் தொடங்கினார்.
மனதில் பசையாய் ஒட்டிக் கொண்டார்.
பின்பு
தென் மண்டலத்தின் பொதுச்செயலாளராக, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் துணைத்
தலைவராக செயல்பட்ட தோழர் ராஜப்பாவுடன் நெருக்கமாக பழகுவதற்கான வாய்ப்பு நான் நெய்வேலி
கிளைச் சங்கத்தின் பொறுப்பாளரானவுடனேயே கிடைத்தது. எவ்வளவு கோபமாக பேசினாலும் அந்த
கோபத்தை தணித்து நம்மை குளிர்விக்கும் வித்தை அறிந்தவர்.
“முற்றுகை”
எழுதி வெளி வந்த பிறகு சென்னையில் ஒரு கூட்டத்தில் சந்திக்கையில் அதற்காக பாராட்டினார்.
அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்ட வரலாற்றில் முக்கியமான ஒரு போனஸ் உரிமைக்கான
போராட்டம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமலாக்குவதற்கான நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தப்
போராட்டம் அது. 1981 ல் நடைபெற்ற அப்போராட்டத்தின் நாற்பதாவது ஆண்டை முன்னிட்டு அகில
இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மூத்த தலைவர் தோழர் அமானுல்லா கான் ஒரு அற்புதமான
கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அக்கட்டுரையின் துவக்கத்தில் 1974 ல் நடைபெற்ற லாக்
அவுட்டை முறியடிக்க நடந்த போராட்டத்தைப் பற்றி எழுதியிருந்தார்.
ஊதிய
உயர்வுக்கான போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம் டெல்லி, சென்னை, பெங்களூர், பாட்னா,
கோட்ட அலுவலகங்கள் மற்றும் தார்வாட் கோட்ட அலுவலகத்தின் இயந்திரங்கள் பிரிவு ஆகியவற்றை
மட்டும் கதவடைப்பு செய்தது. பின்னர் ஒட்டு மொத்த தார்வாட் கோட்ட அலுவலகம், மீரட் கோட்ட
அலுவலகம் ஆகியவையும் கதவடைப்பு செய்தது. கோட்ட அலுவலக ஊழியர்கள் வேலைக்குச் செல்ல முடியாது.
கோட்டத்திற்கு உட்பட்ட கிளைகளின் ஊழியர்கள் வேலைக்கு போக முடியும். சென்னை எல்.ஐ.சி
கட்டிடத்தில் கோட்ட அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் வேலைக்கு செய்ய முடியாது. அதே கட்டிடத்தில்
உள்ள மண்டல அலுவலக ஊழியர்களும் ஒரு கிளையின் ஊழியர்களும் வேலைக்கு செல்ல முடியும்.
டெல்லியிலும் அதே நிலை.
ஊழியர்களை
குழப்பவும் பிளவு படுத்தவும் நிர்வாகம் மேற்கொண்ட தந்திரமான நடவடிக்கை அது. அந்த தந்திரத்தை
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சாதுர்யமாக கையாண்டது. எங்கே கதவடைப்பு செய்யப்
பட்டதோ, அந்த கோட்டங்களில் மட்டும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அறைகூவல்
கொடுத்தது. அதனால் யாரும் பணிக்கு செல்லவில்லை. மற்ற இடங்களில் விதிப்படி வேலை போராட்டத்தை
தீவிரப் படுத்தியது.
இறுதியில்
நிர்வாகம் பணிந்தது. ஒப்பந்தம் கையெழுத்தானது. கதவடைப்பு செய்யப்பட்ட புதுடெல்லி அலுவலகத்தை
திறந்து வைக்குமாறு நிர்வாகம் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர்
தோழர் சரோஜ் சவுத்ரி அவர்களைக் கேட்டுக் கொண்டது.
முற்றுகையைப்
போல “லாக் அவுட்” போராட்டத்தையும் ஒரு புனைவுப் பாத்திரங்களோடு நாவலாக எழுதலாம் என்றொரு சிந்தனை வந்தது. சென்னைக் கோட்டத்தின் பொதுச்செயலாளராக காலவரையற்ற
வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தோழர் எஸ்.ராஜப்பா அவர்களை சந்தித்து
தரவுகளை சேகரிக்கலாம் என்று எண்ணினேன். ஆனாலும் ஒரு தயக்கம் இருந்தது. கொரோனா முதல்
அலை ஓய்ந்திருந்தது. இரண்டாம் அலை துவங்கவில்லை. தொலைபேசியில் பேசிய போது வரச் சொன்னார்.
சென்னையில்
அவர் வீட்டுக்குச் சென்றேன். கிட்டத்தட்ட நான்கரை மணி நேரம் அவரது நினைவுச் சுரங்கத்திலிருந்து
தகவல்களை பொக்கிஷமாக அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருந்தார். அபாரமான நினைவாற்றல்.
1974 ல் எந்தெந்த கிளைகளுக்கு யாரெல்லாம் சென்றோம், அப்போது கிளைச் செயலாளர் யார் என்பதையெல்லாம்
சொன்னார்.
அந்த
சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. அதுவே கடைசி சந்திப்பாக இருக்கும்
என்று அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. தோழர் ராஜப்பாவை சந்தித்து வந்த பின்பு
பெங்களூர், தார்வாட், பாட்னா தோழர்களையெல்லாம் சந்திக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.
கொரோனா இரண்டாம் அலை, வேலூரில் நடைபெற்ற தென் மண்டல மாநாடு ஆகியவற்றால் அவை சாத்தியமாகவே
இல்லை.
பின்னாளில்
ஒரு முறை பெங்களூர் சென்ற போது தோழர் அமானுல்லா கான் அவர்களுடன் ஒரு மூன்று மணி நேரம்
விவாதித்து இன்னொரு பரிமாணத்தில் தரவுகள் கிடைத்தது. தென் மண்டலப் பொதுச்செயலாளராக
செயல்பட்டவரும் நான் ஆசான் என்று கருதும் தோழர் கே.நடராஜன் அவர்களோடும் பெங்களூரில்
அவர் வீட்டிற்குச் சென்று விவாதித்தேன். எங்கள் கோட்டத்தின் முன்னாள் தலைவர் தோழர்
என்.ஏகாம்பரம், அன்றைய வேலூர் கிளையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அந்த குறிப்புக்கள்
அடங்கிய நோட்டு வீட்டின் கம்ப்யூட்டர் மேஜையில் பத்திரமாக உள்ளது. ஆனாலும் தார்வாட், பாட்னா, டெல்லி பயணங்கள் எப்போது
நிகழுமோ?
தோழர்
ராஜப்பாவுடன் பேசி மூன்றாண்டுகள் முடிந்த பின்னும் இன்னும் பணியை துவக்காமல் இருப்பது
வெட்கமாகவே இருக்கிறது. ஒரு இரண்டு அத்தியாயங்கள் மட்டும் எழுதி அவை டெஸ்க்டாப்பிலேயே
நீண்ட காலமாக இருக்கிறது. பணி ஓய்வுக்கு முன்பாக இப்பணியை முடித்திட வேண்டும் என்றொரு
உறுதி இப்புகைப்படத்தை பார்த்ததால் இன்று கிடைத்தது.
உங்கள் எண்ணம் விரைவில் நிறைவேற வேண்டும்
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி
ReplyDelete